2014-07-25 15:47:32

பெனின் நாட்டில் முப்பது யூரோக்களுக்கு அடிமைகளாக சிறார் விற்பனை


ஜூலை,25,2014. ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் இடம்பெறும் சிறார் வணிகத்துக்கு வறுமையும், குடும்பங்கள் பிரிந்திருப்பதுமே முக்கிய காரணங்கள் என்று, மனித வணிகத்திலிருந்து சிறாரைப் பாதுகாக்கும் பெனின் தொன்போஸ்கோ மையத்திலிருந்து வெளியான செய்தி ஒன்று கூறுகிறது.
சிறாரும் குடும்பங்களும் கல்வியறிவு இல்லாமல் இருப்பது, குடும்பங்களின் கடன்சுமை, இக்கண்டங்களின் நாடுகளில் காணப்படும் உறுதியற்ற அரசியல் சூழல், மோதல்கள் ஆகியவையும் சிறார் வணிகத்துக்குக் காரணங்கள் எனவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.
இம்மைய இயக்குனர் அருள்பணி ஹூவான் ஹோசே கோமஸ் அவர்கள் இது குறித்துக் கூறுகையில், பெற்றோரால் ஏறக்குறைய முப்பது யூரோக்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்ட சிறார் தங்கள் மையத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
உலக தொழில் நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட சிறார் மனித வணிகத்துக்குப் பலியாகியுள்ளனர். சட்டத்துக்குப் புறம்பே தத்து எடுத்தல், கட்டாயத் திருமணங்கள், உடல் உறுப்புகள் வணிகம் போன்றவற்றைக் கணக்கில் எடுத்தால் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என ஐ.நா. கூறியுள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.