2014-07-25 15:47:17

காசாவில் ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அடைக்கலம் தேடியுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு எருசலேம் காரித்தாஸ் உதவி


ஜூலை,25,2014. புனித பூமியின் காசாவில் ஆலயங்களிலும் பள்ளிகளிலும் அடைக்கலம் தேடியுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு உதவி வருகிறது எருசலேம் காரித்தாஸ்.
தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்றுவரும் காசாவில் புலம் பெயர்ந்துள்ள ஒரு இலட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு எருசலேம் காரித்தாஸ் நிறுவனத்தின் நிவாரணப் பணிகளே பெரிதும் உதவியாக இருக்கின்றது என்று பீதெஸ் செய்தி நிறுவனம் கூறியது.
மேலும், ஜோர்டன், பாலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய பகுதிகளிலுள்ள அனைத்துப் பங்குகளிலும் இச்சனி, ஞாயிறு தினங்களில் அமைதிக்காகச் செபங்கள் நடைபெறுகின்றன. அச்செப நேரங்களில் காசா மக்கள் சார்பாக நிதி திரட்டப்படும் என்று, எருசலேம் காரித்தாஸ் நிறுவனர் அருள்பணி Raed Abusahliah அவர்கள் கூறினார்.
மேலும், காசாவில் ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடத்தும் பள்ளி ஒன்று தாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியைக் கொடுத்திருப்பதாகக் கூறியுள்ள ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், எல்லா தரப்பினரும் உடனடியாக தாக்குதல்களை நிறுத்துவதற்கு இந்நிகழ்வு அழைப்பு விடுக்கின்றது எனக் கூறியுள்ளார்.
Beit Hanounலுள்ள இப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் தேடியிருந்தனர்.
கடந்த 18 நாள்களாக நடந்துவரும் சண்டையில் 800க்கு அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளவேளை, காசா-இஸ்ரேல் இடையில் மனிதாபிமான அடிப்படையில் போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன

ஆதாரம் : Fides /UN







All the contents on this site are copyrighted ©.