2014-07-25 15:46:29

ஏர் அல்ஜெரி AH5017விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்


ஜூலை,25,2014. ஏர் அல்ஜெரி AH5017 விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த விமான விபத்தில் இறந்தவர்கள் இறைவனில் இளைப்பாறுவதற்குத் தான் செபிப்பதாகவும், இவர்களின் பிரிவால் வருந்தும் குடும்பத்தினரின் வேதனைகளில் தானும் பங்குகொள்வதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அல்ஜியர்ஸ் பேராயர் Ghaleb Bader அவர்களுக்கு இந்த அனுதாபத் தந்திச் செய்தியை அனுப்பியுள்ளார்.
இவ்வியாழனன்று புர்கினா ஃபாஸோவின் தலைநகரான Ouagadougouவிலிருந்து அல்ஜியர்ஸ் நகருக்குப் பறப்பட்டபோது இவ்விமானத்தின் ஓட்டுனர்கள், கடுமையான மண்சூறாவளி வீசுவதாகவும் தெரிவித்தனர். பின்னர் அது புறப்பட்ட 50 நிமிடங்களுக்குள் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புடனான தொடர்பை இழந்தது.
இந்த விமானத்தில் 51 ப்ரெஞ்ச் குடிமக்கள் உட்பட 116 பயணிகள் இருந்தனர். இவர்களில் எவருமே உயிர்பிழைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் தரையில் விழுந்தவுடனேயே முழுவதும் நொறுங்கிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சரான பெர்னார்ட் கெஸனூ அந்நாட்டு வானொலியில் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.