2014-07-24 15:23:24

காசாப் பகுதியில் அறிவு சார்ந்த குரல்கள் ஒடுக்கப்பட்டு, ஆயுதங்களின் சப்தமே கேட்கின்றது, பேராயர் தொமாசி


ஜூலை,24,2014. காசாப் பகுதியில் நாளுக்கு நாள் பெருகி வரும் வன்முறைகளால், அறிவு சார்ந்த குரல்கள் ஒடுக்கப்பட்டு, ஆயுதங்களின் சப்தமே கேட்கின்றது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், அங்கு நடைபெறும் 21வது மனித உரிமை சிறப்புக் கூட்டத்தில் இப்புதனன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
தற்போது காசாப் பகுதியில் நடைபெற்றுவரும் வன்முறையால் வெற்றியடையப் போவது யாருமில்லை என்று கூறிய பேராயர் தொமாசி அவர்கள், துன்பமும், சாவும் மட்டுமே இங்கு வெற்றிபெற்று வருகின்றன என்று கூறினார்.
இஸ்ரேல் இராணுவம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், குடிமக்கள் வாழும் இடங்களை ஏவுகணை கொண்டு தாக்குவது எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத செயல் என்பதை பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்தினார்.
மனித உயிர்கள் துச்சமாக மதிக்கபடுவதும், வன்முறையை போற்றி வளர்ப்பதும் பெருகி வரும் இவ்வுலகில், வன்முறை எப்போதும் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதில் திருப்பீடம் உறுதியான நிலைப்பாடு கொண்டுள்ளது என்பதையும் பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் சுட்டிக் காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.