2014-07-23 14:35:17

ஜூலை,24, புனிதரும் மனிதரே – கொலைவெறியர்களைத் துணிச்சலுடன் சந்தித்தவர் (St. Francis Solano)


16ம் நூற்றாண்டில் ஒருநாள், தென் அமெரிக்காவில் வாழ்ந்த பூர்வீக இனத்தவர் தங்கள் பகுதிக்கு வந்த ஐரோப்பியர்களையும், தங்கள் இனத்தவரில் கிறிஸ்தவர்களாக மனம் மாறியிருந்தவர்களையும் கொலை செய்வதற்குத் தீவிரமாகத் திட்டம் தீட்டினர். இதையறிந்த மறைப்பணியாளர்கள் அப்பகுதிக்குச் செல்வதற்கு அஞ்சினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் துணிச்சலாக அவர்களிடம் சென்று, தனது மொழியில் பேசினார். மொழி புதிதாக இருந்தாலும் அந்த மனிதரின் பேச்சைப் புரிந்துகொண்ட அந்தப் பூர்வீக இன மக்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டனர். அதோடு அவர்களில் ஒன்பதாயிரம் பேர் கிறிஸ்தவர்களாக மாறவும் முன்வந்தனர். மற்றொரு சமயம், இந்த இன மக்களின் வயல்களில் அதிகமாகப் புழுக்கள் வந்தன. அவர்கள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அவர்களால் முடியவில்லை. மிகவும் துயரமடைந்த அம்மக்களின் வயல்கள் பகுதிக்குச் சென்று, புழுக்களை அங்கிருந்து போய்விடுமாறு கட்டளையிட்டார் அந்த மனிதர். உடனே அந்தப் புழுக்கள் அங்கிருந்து வெளியேறி, அருகிலிருந்த மலைக்குச் சென்றுவிட்டன. இந்தப் புனித மனிதர்தான் பிரான்சிஸ் சொலானோ. இஸ்பெயின் நாட்டின் Montilla நகரில் 1549ம் ஆண்டு பிறந்த இவர், இயேசு சபையினரிடம் கல்வி கற்றார். ஆனால் புனித பிரான்சிஸ் அசிசியார் சபையினரின் ஏழ்மை மற்றும் தப வாழ்வால் ஈர்க்கப்பட்டு தனது இருபதாவது வயதில் அச்சபையில் சேர்ந்து குருவானார். தென் இஸ்பெயினில் மறைப்பணியாற்றியபோது, 1583ம் ஆண்டில் Granadaவில் கொடும் தொற்றுநோய் பரவியது. அம்மக்கள் மத்தியில் பணியாற்றியபோது இவரையும் அந்நோய்த் தாக்கியது. ஆயினும் உயிர் பிழைத்தார். பின்னர் ஆப்ரிக்காவில் மறைப்பணியாற்ற விரும்பினார் அவர். ஆனால் பிரான்சிஸ், பல்த்தசார் நவாரோ என்ற அருள்பணியாளருடன் தென் அமெரிக்காவின் பெரு நாட்டுக்கு அனுப்பப்பட்டார். இவர்கள் சென்ற கப்பல் இஸ்துமுசைக் கடந்து பானமா சென்றது. பின்னர் பெருவை அணுகியபோது, கடும் புயல் ஏற்பட்டு கப்பல் சேதமடையும் ஆபத்துக்கு உள்ளானது. அதில் சென்ற ஆப்ரிக்க அடிமைகளை வெளியேறுமாறு கப்பல் தலைவர் கட்டளையிட்டார். ஆனால் துறவி பிரான்சிஸ் அந்த அடிமைகளோடு கப்பலிலே இருப்பதற்குத் தீர்மானித்தார். எனவே மற்றவர்கள் கப்பலைவிட்டு இறங்கி ஒரு சிறு படகில் சென்றுவிட்டனர். புயல் அடங்கிய பின்னர், பிரான்சிசும், ஆப்ரிக்க அடிமைகளும் அந்தக் கப்பலில் தொடர்ந்து பயணம் செய்து மூன்று நாள்கள் கழித்து பாதுகாப்பாக லீமா நகர் சென்றடைந்தனர். அங்கு மற்ற மறைப்பணியாளர்களோடு சேர்ந்து கிறிஸ்துவை அறிவித்தார் துறவி பிரான்சிஸ். இருபது ஆண்டுகள் கொலம்பியா, பெரு, அர்ஜென்டினா, பராகுவாய் போன்ற நாடுகளில் கிறிஸ்துவை அறிவித்து 1610ம் ஆண்டு ஜூலை 14ம் தேதி காலமானார். புனித பிரான்சிஸ் சொலானோவின் விழா, பிரான்சிஸ்கன் சபையில் ஜூலை 24ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.