2014-07-23 14:41:53

அமைதி ஆர்வலர்கள் : 1938, 1944ல் நொபெல் அமைதி விருது பெற்ற நிறுவனங்கள்(The Nansen International Office for Refugees, The Red Cross)


ஜூலை,23,2014. பேராசையால் நசுக்கப்பட்ட இதயங்களின் தனிமையே இன்றைய உலகின் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது என்ற கூற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இச்செவ்வாயன்று காணப்பட்டது. மனிதரின் பேராசையே இன்று உலகின் சில பகுதிகளில் அப்பாவி மக்கள் அமைதியின்றி தவிப்பதற்குக் காரணம். இம்மக்கள் வாழும் இடங்களின் தொடர் மோதல்களால் இலட்சக்கணக்கில் இவர்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளில் குடியேறுகின்றனர். இவ்வாறு 1930களில் போர்களால் புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவதற்கென உருவானதே நான்சன் அனைத்துலக புலம்பெயர்வோர் அலுவலகம். அனைத்து நாடுகளின் கூட்டமைப்பு கழகத்தின் அங்கீகாரத்துடன் நான்சன் அனைத்துலக புலம்பெயர்வோர் அலுவலகம் 1931ம் ஆண்டு, ஏப்ரல் ஒன்றாந்தேதி செயல்படத் தொடங்கியது. இந்த அலுவலகம், 1922ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Fridtjof Nansen அவர்களின் பெயரில் இயங்கியது.
நார்வே நாட்டு நாடுகாண் பயணியாகிய Fridtjof Nansen, அறிவியலாளரும், தூதரக அதிகாரியும், மனிதாபிமானியுமாவார். இவர் வட துருவத்தில் மேற்கொண்ட ஆய்வுப் பயணங்களும், அவர் கையாண்ட தொழில்நுட்பங்களும், அவருக்குப்பின் வந்த தலைமுறைகள், பனியுறைந்த ஆர்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொள்ள உதவியது. நான்சென், 1921ம் ஆண்டில், அனைத்து நாடுகள் கூட்டமைப்பு கழகத்தில், புலம்பெயர்வோர் பிரிவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, இவர் தனது வாழ்வின் இறுதி பத்தாண்டுகளை அக்கூட்டமைப்பு கழகத்திற்கென அர்ப்பணித்தார். முதல் உலகப் போர் மற்றும் அது தொடர்புடைய சண்டைகளில் புலம்பெயர்ந்தோருக்கு இவர் ஆற்றிய பணி சிறப்பாக இருந்தது. போர்களினால் நாடுகளின்றி இருந்த புலம்பெயர்ந்த மக்களுக்கு "நான்சென் கடவுச்சீட்டு" என்ற பெயரில் இவர் சான்றிதழ்கள் வழங்கினார். இச்சான்றிதழ்களை ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகள் அங்கீகரித்தன. நான்சென் 1930ம் ஆண்டில் திடீரென இறக்கும்வரை இவர் புலம்பெயர்ந்த மக்களுக்காகப் பணியாற்றி வந்தார். இவர் ஆற்றிய பணிகளைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்துடன், அனைத்து நாடுகள் கூட்டமைப்பு கழகம், அனைத்துலக புலம்பெயர்வோர் அலுவலகம் ஒன்றை உருவாக்கி அதற்கு நான்சன் பெயரையே சூட்டியது. இந்த அலுவலகம் புலம்பெயர்வோர்க்கு ஆற்றிய பணிகளைப் பாராட்டி இதற்கு 1938ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.
அனைத்து நாடுகள் கூட்டமைப்பு கழகத்தின் ஒரு பிரிவாக, புலம்பெயரும் மக்களுக்கு உதவுவதற்கென சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் 1921ம் ஆண்டில் அலுவலகம் ஒன்றை நான்சன் தொடங்கினார். நான்சென் கடவுச்சீட்டுகளை இலவசமாக வழங்குவதற்கு ஆகும் செலவுகள் உட்பட, இந்த அலுவலகத்தின் நிர்வாகச் செலவுகளுக்கு மட்டுமே அனைத்து நாடுகள் கூட்டமைப்பு உதவியது. மற்ற செலவுகளுக்கு தனியாள்களின் நன்கொடைகள் உதவின. இந்த நான்சன் அலுவலகம் புலம்பெயரும் மக்களுக்கு பொருளாதார, சட்ட மற்றும் அரசியல் சார்ந்த உதவிகளைச் செய்தது. 1923ம் ஆண்டில் அர்மேனிய புலம்பெயர்ந்தோர் உட்பட இரஷ்யப் புலம்பெயர்ந்தோருக்கு உதவியது. அதற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து அசீரியர்கள், அசீரிய கல்தேயர்கள், துருக்கிய புலம்பெயர்ந்தோருக்கென தனது பணிகளை விரிவுபடுத்தியது. நான்சென் அவர்களின் இறப்புக்குப் பின்னர் இந்த அலுவலகம் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதனால் புலம்பெயர்ந்தோருக்குச் செய்துகொடுக்கும் வேலைவாய்ப்பு உதவிகளை நிறுத்தியது. 1933ம் ஆண்டில் 14 நாடுகள் ஏற்றுக்கொண்ட புலம்பெயர்வோர் உடன்பாட்டை நான்சன் அனைத்துலக புலம்பெயர்வோர் அலுவலகமும் ஏற்றது. இது ஓர் அளவான மனித உரிமைகள் அறிக்கையாக இருந்தது. 1935ம் ஆண்டுக்குப் பின்னர் பராகுவாய் நாட்டில் சார் புலம்பெயர்ந்தோருக்கு குடியிருப்புக்களை அமைத்துக் கொடுத்தது. சிரியாவிலும், லெபனனிலும் நாற்பதாயிரம் அர்மேனியப் புலம்பெயர்ந்தோருக்கு வீடுகளைக் கட்டிக்கொடுத்து கிராமங்களை உருவாக்கியது. பின்னர் எரிவானில் மேலும் பத்தாயிரம் பேருக்கும், மொத்தத்தில் ஏறத்தாழ பத்து இலட்சம் புலம்பெயர்ந்தோருக்கு இந்த அலுவலகம் உதவியுள்ளது.
ஜெர்மனியில் நாத்சிச கொள்கைப்பற்றாளர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் ஜெர்மனி நாட்டுப் புலம்பெயர்ந்தோர் பிரச்சனை உருவாகியது. 1933ம் ஆண்டில் அனைத்து நாடுகள் கூட்டமைப்பு, ஜெர்மனியிலிருந்து வந்த புலம்பெயர்ந்தோருக்கென தூதரக அலுவலகத்தைத் தொடங்கிய பின்னர் இப்பிரச்சனை கடுமையானது. இந்த அலுவலகம் பின்னாளில், ஆஸ்ட்ரியா, முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவின் வடக்கு, தென் மேற்கு, மேற்கு(Sudetenland) ஆகிய பகுதிகளிலிருந்து வந்த புலம்பெயர்ந்தோர்க்கும் இந்தத் தூதரக அலுவலகம் தனது பணியை விரிவுபடுத்தியது. இதில் ஏற்பட்ட பிரச்சனைகளால், 1938ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இந்தத் தூதரக அலுவலகமும், நான்சன் அனைத்துலக புலம்பெயர்வோர் அலுவலகமும் ஒரே நேரத்தில் மூடப்பட்டன. அதேநேரம், அதற்கு அடுத்த நாளில் இலண்டனில், அனைத்து நாடுகள் கூட்டமைப்பு கழகத்தின் பாதுகாவலில், புதிய புலம்பெயர்வோர் அலுவலகம் திறக்கப்பட்டது. இருந்தபோதிலும் நான்சன் அனைத்துலக புலம்பெயர்வோர் அலுவலகத்திற்கு 1938ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது.
1939ம் ஆண்டு முதல் 1943ம் ஆண்டுவரை நொபெல் அமைதி விருது யாருக்கும் வழங்கப்படவில்லை. நொபெல் விருதின் விதிகளின்படி அவ்வாண்டுகளுக்கான விருதுப் பணத்தின் மூன்றில் ஒரு பாகம் இவ்விருதின் மொத்த சேமிப்பு நிதிக்கும், மூன்றில் இரண்டு பாகம் அதன் சிறப்பு நிதிக்குமென ஒதுக்கப்பட்டது. 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டுவரை இரண்டாம் உலகப் போர் நடந்த காலமாகும். பின்னர் இப்போரில் காயமடைந்தவர்களுக்கு மகத்தான சேவை ஆற்றிய அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்துக்கு 1944ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்டது. இச்செஞ்சிலுவை சங்கம், 1917, 1963 ஆகிய இரு ஆண்டுகளிலும் நொபெல் அமைதி விருதைப் பெற்று, இதனை மூன்று முறைகள் பெற்றுள்ள பெருமையையும் தக்கவைத்துள்ளது. அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தைத் தோற்றுவித்த சுவிட்சர்லாந்து நாட்டு Henry Dunant அவர்களுக்கே, முதல் நொபெல் அமைதி விருது 1901ம் ஆண்டில் வழங்கப்பட்டது. Henry Dunant அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தைத் தொடங்குவதற்கு மூல காரணமாக இருந்ததே Solferino சண்டையாகும். இது இத்தாலியின் விடுதலைக்காக நடந்த இரண்டாவது போராகும்.
1859ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, வட இத்தாலியின் Solferino கிராமத்தில், பிரான்ஸ் பேரரசர் 3ம் நெப்போலியனின் ஆதரவுடன் சர்தீனியப் படைகளும், ஆஸ்ட்ரிய-ஹங்கேரிப் படைகளும் போரிட்டன. இந்த Solferino சண்டையில் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட படை வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கான படை வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் உறுப்புகளை இழந்தனர். அச்சமயம் தனது தொழில் விடயமாக, தற்செயலாக, பேரரசர் 3ம் நெப்போலியனை அங்குப் பார்க்கச் சென்ற இளம் சுவிஸ் தொழிலதிபர் Henry Dunant இப்போரில் காயமடைந்தவர்களைப் பார்க்க நேர்ந்தது. இவர்கள் மருத்துவ உதவியின்றி துன்புறுவதைக் கண்டார். உடனடியாக அவ்வூர் மக்களை அழைத்து ஆலயங்களிலும், துறவு இல்லங்களிலும், தற்காலிகக் கூடாரங்களிலும் இப்போரில் காயமடைந்த இரு தரப்பு படைவீரர்களுக்கும் சிகிச்சை அளிக்க வழி செய்தார் Dunant. இவர்கள் எல்லாரும் நம் சகோதரர்கள் என்று சொல்லி உள்ளூர் மக்களை உற்சாகப்படுத்தினார். இதுவே செஞ்சிலுவைச் சங்கம் உருவாகக் காரணமானது.
Solferinoவிலிருந்து சுவிட்சர்லாந்து திரும்பிய Dunant, 1862ம் ஆண்டில் “Solferino, ஒரு நினைவு” என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதி, போர்க் காலங்களில் காயமடைந்த படைவீரர்களுக்கும், நோயாளிகளுக்குமென தன்னார்வத் தொண்டு கழகங்களை அனைத்து நாடுகளும் உருவாக்க வேண்டுமெனத் தூண்டினார். இந்நூலில் உலக அமைதிக்கான தனது பரிந்துரைகளை முன்வைத்தார். இந்நூல், ஐரோப்பா முழுவதும் நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்தது. படிப்படியாக செஞ்சிலுவைச் சங்கமும் தோன்றியது.
1939ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதியன்று போலந்தை ஜெர்மனி ஆக்ரமித்ததையொட்டி பிரான்சும் பிரிட்டனும் ஜெர்மனிமீது போர் தொடுப்பதாக அறிக்கை விடுத்தன. முழுவீச்சில் போர் தொடங்கியது. வரலாற்றில் மிகக் கொடூரமாய் நடந்த போர் எனச் சொல்லப்படும் இரண்டாம் உலகப் போரில், முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளும், பத்து கோடிக்கு மேற்பட்ட மக்களும் நேரிடையாக ஈடுபட்டனர். இப்போரில், நாடுகள் தங்களின் அனைத்துப் பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தின. வரலாற்றில் முதன்முறையாக இப்போரில்தான் அணுகுண்டுகள் வீசப்பட்டன. இந்தப் போரில், உலகின் அப்போதைய மக்கள் தொகையில் 2.5 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள், அதாவது 6 கோடிக்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். யூத இன ஒழிப்பு நடவடிக்கையில் 6 இலட்சத்துக்கு மேற்பட்ட யூதர்கள் இறந்தனர். ஆனால் இன்று யூதர்கள் பாலஸ்தீனியர்களை நசுக்கி வருகின்றனர்.
"நாம் ஒருவர் மற்றவருக்கு உரியவர்கள் என்பதை மறந்து வாழ்வதே நம்மில் அமைதி இல்லாமல் இருப்பதற்குக் காரணம்" என்று சொன்னார் அருளாளர் கொல்கத்தா அன்னை தெரேசா. புனித பூமியில் அமைதி இல்லை. தொடர் வன்முறைத் தாக்குதல்கள். இப்பகுதியிலும், உலகிலும் அமைதி நிலவச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.