2014-07-22 15:04:19

விவிலியத்
தேடல் மினா நாணய உவமை பகுதி - 8


RealAudioMP3 மினா நாணய உவமையில் நாம் சந்திக்கும் இறுதி சவாலை இன்றையத் தேடலில் சிந்திக்க வந்திருக்கிறோம். தன்னிடம் கொடுக்கப்பட்ட நாணயத்தை எவ்வகையிலும் பயன்படுத்தாமல், அதை ஒரு கைக்குட்டையில் பொதிந்து வைத்த மூன்றாவது ஊழியரை தலைவன் கடிந்து கொள்கிறார். அதற்குப் பின், அங்கு நடந்ததாக இயேசு விவரிக்கும் ஒரு நிகழ்வு நமது சிந்தனைக்குச் சவாலாக அமைகின்றது. இதோ அவ்வரிகள்:
லூக்கா 19: 24-26
பின்பு உயர் குடிமகன் அருகில் நின்றவர்களிடம், “அந்த மினாவை அவனிடமிருந்து எடுத்து, பத்து மினாக்கள் உள்ளவருக்குக் கொடுங்கள்என்றார். அதற்கு அவர்கள், “ஐயா, அவரிடம் பத்து மினாக்கள் இருக்கின்றனவேஎன்றார்கள். அவரோ, “உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும் என உங்களுக்குச் சொல்கிறேன்என்றார்.

சமூகநீதி என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், உயர் குடிமகன் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளாக ஒலிக்கின்றன. உள்ளவர்களிடமிருந்து செல்வங்களைப் பறித்து, இல்லாதவர்களுக்கு கொடுக்கவேண்டும். ஆனால், நற்செய்தியின் இக்கூற்று உள்ளவர்-இல்லாதோருக்கு இடையே உள்ள இந்த அநீதியை இன்னும் அதிகரிப்பதைப் போல் ஒலிக்கிறது. இயேசுவின் இந்த உவமை சமூக நீதியை நிலைநாட்ட சொல்லப்பட்ட உவமை அல்ல என்பதை நாம் முதலில் உணரவேண்டும். அந்தக் கருத்தை இயேசு விவிலியத்தின் வேறு இடங்களில் வலியுறுத்தியுள்ளார்.
உள்ளவர், இல்லாதோர் என்று இயேசு இங்கு குறிப்பிடுவது பொறுப்புக்களைப் பற்றியே தவிர, செல்வத்தைப் பற்றியல்ல என்பதை நாம் உணர்ந்தால், இவ்வரிகள் வழியே இயேசு சொல்லித்தர விழையும் பாடத்தைப் புரிந்துகொள்ள முடியும். இவ்வுலகில் நாம் காணும் நடைமுறைப் பழக்கத்தை சிறிது எண்ணிப் பார்ப்போம். பொறுப்புடன் செயல்படுவோருக்கு கூடுதலாக பொறுப்புக்கள் வந்து சேருவதையும், பொறுப்பற்ற வகையில் நடந்துகொள்வோரிடமிருந்து அனைத்து பொறுப்புக்களும் நீக்கப்படுவதையும் நாம் பார்த்ததில்லையா? இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது உவமையின் இறுதி வரிகள் எனக்குச் சொல்லித்தந்த விளக்கம் இதுதான்:
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடைகளில் கவனம் செலுத்தி, அவற்றில் மகிழ்வும், நிறைவும் அடைவோர் அக்கொடைகளைப் பலுகிப் பெருகச் செய்து மேலும் மேலும் நிறைவடைவர். இதைத்தான் "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்" என்ற இந்த வார்த்தைகள் சொல்வதாக நான் உணர்கிறேன்.
இதற்கு எதிர் துருவமாக இருப்பவர்கள் தங்கள் கொடைகளைப் பற்றி சிந்திக்காமல், தங்கள் குறைகளைப் பெரிதுபடுத்துபவர்கள். அது மட்டுமல்ல... அக்குறைகளை இறைவனே தந்தார் என்று குற்றம் சாட்டுபவர்கள். நிறைகளை மறந்துவிட்டு, குறைகளிலேயே கவனம் அனைத்தையும் செலவிடுவதால், இவர்களது நிறைகளும் கொடைகளும் புதையுண்டு போகின்றன. இதைத்தான், "இல்லாதோரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

மினா நாணய உவமையில் சவால்கள் நிறைந்த பகுதிகள் இருந்தாலும், நமக்குப் பாடமாக அமையும் பகுதிகளில் நாம் கவனம் செலுத்தி வந்துள்ளோம். இந்த உவமையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பல பாடங்களை கடந்த சில வாரங்களாகச் சிந்தித்தோம். இறுதியாக, இன்னும் மூன்று பாடங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

முதல் பாடம் - பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்த மனித சமுதாயத்தில் நாம் ஒவ்வொருவரும் தனித் திறமை உடையவர்கள். நமது குறைகளையும் திறமைகளாக மாற்றும் வழிகள் உண்டு. குறைகளைத் திறமைகளாக மாற்றி தங்களையும், பிறரையும் வளர்த்தவர்கள் இன்றும் உலகில் பல ஆயிரம் பேர் உள்ளனர்.
தற்கொலை முயற்சி தன்னைச் சிறைப்படுத்திய சக்கர நாற்காலி வாழ்வு என்ற குறையை, மற்றவர்களுக்கு தொலைபேசி வழியே ஆலோசனை வழங்கும் நிறைவாக மாற்றிய இளம்பெண்ணைப் பற்றி இரு வாரங்களுக்கு முன் நாம் சிந்தித்தோம்.
நான் பணியாற்றிய கல்லூரியில் உள்ள மாணவர் விடுதியில் நிகழ்ந்த ஒரு சம்பவம் என் நினைவுக்கு இப்போது வருகிறது. அந்த மாணவர் விடுதியில் பார்வை இழந்த ஒரு மாணவர் புதிதாகச் சேர்ந்தார். அவருக்கு உதவிகள் செய்வதற்கு நல்ல உள்ளங்கள் பலர் விடுதியில் இருந்தனர். சில மாதங்களில் அந்த மாணவர் கல்லூரி, விடுதி என்று பழக்கப்பட்ட இடங்களிலெல்லாம் எந்தத் துணையும் இல்லாமல் தானாகவே சென்றார். ஒரு நாள், விடுதியில் இரவு உணவு நடைபெற்ற நேரத்தில் மின் தடை ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தபோது, பார்வை இழந்த இவர் மட்டும் தயக்கமின்றி அந்த இருளில் எழுந்து, தன் நண்பர்களை அந்த இருளில் உணவு அரங்கத்திலிருந்து வழி நடத்திச் சென்றார்.

2வது பாடம் - கொடுக்கப்பட்டுள்ள திறமைகளை தன் சுயநலனுக்காக மட்டுமே பயன்படுத்தாமல், பிறருக்கும் பயனளிக்குமாறு செயலாற்ற வேண்டும் என்ற பாடத்தையும் இந்த உவமை நமக்குச் சொல்லித் தருகிறது. இக்கருத்தை வலியுறுத்த இதோ ஒரு வரலாற்று நிகழ்வு.
மூன்று ஆண்டுகளுக்கு முன், (அக்டோபர் 5, 2011) இவ்வுலகை விட்டு மறைந்தவர் Apple கணணி உலகை உருவாக்கிய Steve Jobs. இவர் ஒருநாள் Pepsico என்ற பெரியதொரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த John Sculley என்பவரைச் சந்தித்தார். Pepsicoவின் தலைமைப் பொறுப்பை John Sculley ஏற்றதிலிருந்து அந்த நிறுவனம் வெற்றிகளைக் குவித்தது. அதன் ஆண்டு வருமானம் பல மடங்கு பெருகியது. இருந்தாலும், ஜான் மனதில் ஒரு நெருடல். தன் நிறுவனம் மேற்கொண்டுள்ள போட்டிகள், பல வேளைகளில் கட்டுக்கடங்காமல் போவதைக் கண்டு அவருக்கு நெருடல் ஏற்பட்டது.
தன் மனசாட்சியோடு போராடிக்கொண்டிருந்த ஜானைச் சந்தித்த Steve Jobs, அவரிடம் ஒரு கேள்வி கேட்டார்: "ஜான், நீ எஞ்சியுள்ள உன் வாழ் நாட்களில் சர்க்கரை கலந்த ஒரு திரவத்தை விற்க விழைகிறாயா? அல்லது, இந்த உலகத்தை மாற்றும் புரட்சியொன்றில் சேர விழைகிறாயா?" இந்தக் கேள்வி ஜான் மனதில் ஆழமான பாதிப்புக்களை உருவாக்கியது. அதுவரை அவர் கட்டியெழுப்பிய Pepsico என்ற கோட்டையை, அதனுள் அவர் அனுபவித்த பாதுகாப்பை விட்டுவிட்டு, Steve உடன் Apple நிறுவனத்தில் சேர்ந்தார். அதற்கு பின் நடந்தவை இன்றும் பேசப்படும் ஒரு வரலாறு ஆனது.
John Sculley தன் சுயநலத்தையே மையப்படுத்தி, Pepsicoவிலேயே தன் அனைத்துத் திறமைகளையும் புதைத்து சுகம் கண்டிருந்தால், அவருக்கு வழங்கப்பட்ட மற்ற திறமைகளுக்கு அவரால் சரியான கணக்கு கொடுத்திருக்க முடியுமா?

மூன்றாவதாக நாம் சிந்திக்கும் முக்கியப் பாடம் - இன்றைய உலகில் திறமைகள் மட்டும் போதாது, கூடவே பல நேர்மையற்ற, குறுக்கு வழிகளில் சிந்திக்கும் ஆற்றல், அடுத்தவரின் வாய்ப்புக்களைத் தட்டிப் பறித்து முன்னேறுதல் போன்ற பாடங்களே முன்வைக்கப் படுகின்றன. இந்தச் சூழலில், நேர்மைக்கும், மனம் தளராத உழைப்புக்கும் இன்னும் இவ்வுலகில் இடம் உண்டு என்பதையும் இயேசு இவ்வுவமையை வழியே நமக்கு நினைவுபடுத்துகிறார். இந்த உண்மையை வலியுறுத்தும் ஒரு கதையுடன் நம் 'மினா நாணய உவமை'யின் தேடலை நிறைவு செய்வோம்.

புகழ்பெற்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த முதலாளிக்கு வாரிசு யாருமில்லை. எனவே தன் நிறுவனத்தை நடத்துவதற்குத் தகுதியான ஒருவரை அவர் தேர்ந்தெடுக்க விரும்பினார். தன் நிறுவனத்தில் பொறுப்பான நிலையில் பணியாற்றிய இளம் ஊழியர்கள் இருபது பேரை ஒரு நாள் சந்தித்தார்.
"இளம் நண்பர்களே, நான் நிறுவனப் பொறுப்பிலிருந்து ஒய்வு பெற விழைகிறேன். எனக்கு வாரிசு யாருமில்லை என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, உங்களில் ஒருவரை நான் முதலாளியாக்க விரும்புகிறேன்" என்று அவர் கூறியதும், இளையோர் மத்தியில் அதிர்ச்சி கலந்த அமைதி நிலவியது.
"உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு விதையைத் தரப்போகிறேன். இது மிகவும் சிறப்பு மிக்க விதை. இதை எடுத்துச் சென்று, மண்ணில் ஊன்றி, நீர் ஊற்றி வளர்த்து வரவேண்டும். ஓராண்டு சென்று நாம் மீண்டும் சந்திப்போம். அப்போது, இப்பணியை யார் நல்ல முறையில் முடித்திருக்கிறீர்களோ அவரை நான் என் வாரிசாக தேர்ந்தெடுப்பேன்" என்று சொல்லி ஆளுக்கொரு விதையைக் கொடுத்தார்.
இளம் ஊழியர்களில் ஒருவரான ஜேம்ஸ், அன்று மாலை வீட்டுக்குச் சென்றதும், தன் மனைவியிடம் நடந்ததைச் சொல்லி, அவரிடம் அந்த விதையைக் கொடுத்தார். அவர்கள் பெரிய ஒரு தொட்டி வாங்கி, மண்ணும் உரமும் இட்டு, அந்த விதையை அதில் நட்டனர். ஒவ்வொரு நாளும் நேரம் தவறாமல் நீர் ஊற்றி வந்தனர். ஒரு மாதமாகியும் அந்த தொட்டியில் நடப்பட்ட விதையில் எவ்வித மாற்றமும் இல்லை. பணித்தளத்திலோ, ஏனைய ஊழியர்கள் தங்கள் விதைகள் வளர்ந்து வருவதைக் குறித்து ஒவ்வொரு நாளும் ஆர்வமாகக் கதை கதையாக சொன்னார்கள். ஜேம்ஸின் கலக்கம் ஒவ்வொரு நாளும் கூடியது. இருந்தாலும், அவரது மனைவியின் தூண்டுதலால், அந்த விதை மீது கூடுதல் கவனம் காட்டி வந்தார். ஆறு மாதங்கள் சென்றன, ஓராண்டும் உருண்டோடியது. ஜேம்ஸ் நட்டுவைத்த விதையில் எவ்வித மாற்றமும் தோன்றவில்லை.
ஓராண்டுக்குப்பின், முதலாளி குறிப்பிட்ட அந்த நாள் வந்தது. அன்று ஜேம்ஸ் வேலைக்குப் போக விரும்பவில்லை. முதலாளி கொடுத்த விதையை தன்னால் வளர்க்க முடியவில்லை என்பதை வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. ஆனால், அவரது மனைவி அவரிடம், "நீங்கள் நடந்ததை அப்படியே முதலாளியிடம் கூறுங்கள். அதனால் வரும் விளைவை நாம் சந்திப்போம்" என்று தைரியம் சொல்லி அனுப்பினார்.
அலுவலகத்திற்கு தன் தொட்டியை எடுத்து வந்த ஜேம்ஸ் அங்கு ஏனைய ஊழியர்கள் வைத்திருந்த தொட்டிகளைப் பார்த்தார். ஒவ்வொன்றிலும் வகை, வகையான சிறு மரங்கள் பல்வேறு வண்ணங்களில் காட்சியளித்தன. ஜேம்ஸ் தன் தொட்டியை ஓரமாகக் கொண்டுபோய் வைத்தார். அதைக் கண்ட மற்ற ஊழியர்கள் ஜேம்ஸை எள்ளி நகையாடினர்.
முதலாளி அந்த அறைக்குள் வந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து தொட்டிகளையும் வரிசையாகப் பார்வையிட்டார். இறுதியில் ஜேம்ஸ் வைத்திருந்த தொட்டியையும் பார்த்தார். அது யாருடையது என்று அவர் கேட்டதும், ஜேம்ஸ் அச்சத்துடன் முன் வந்தார். கொடுக்கப்பட்டப் பணியைச் சரிவரச் செய்யவில்லை என்பதற்காக தன்னை பணிநீக்கம் செய்யப்போகிறார் என்று அஞ்சியபடியே அவர் முதலாளியை அணுகினார். அந்தத் தொட்டியில் ஏன் எதுவும் வளரவில்லை என்று முதலாளி ஜேம்ஸிடம் விளக்கம் கேட்டார். ஜேம்ஸ் கடந்த ஓராண்டளவாய் தானும், தன் மனைவியும் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் எடுத்துச் சொன்னார். தங்கள் முயற்சிக்கு ஏன் பலன் கிடைக்கவில்லை என்பது தெரியவில்லை என்பதையும் கூறினார்.
உடனே, முதலாளி, ஜேம்ஸ் தோள் மீது கைவைத்து அணைத்தபடி, "இதோ, என் வாரிசு, உங்கள் முதலாளி!" என்று கூறினார். மற்ற ஊழியர்கள் அதிர்ந்து நின்றனர். அப்போது முதலாளி தொடர்ந்தார்: "நண்பர்களே, சென்ற ஆண்டு இதே நாள் உங்களை நான் சந்தித்தபோது, உங்களுக்கு ஒரு விதை கொடுத்தேன். அந்த விதை சிறப்பான விதை என்றும் சொன்னேன். அந்த விதையின் சிறப்பு இதுதான். நான் உங்கள் அனைவருக்கும் கொடுத்த விதை, ஏற்கனவே வேகவைக்கப்பட்ட விதை. எனவே, அதில் உயிர் கிடையாது. அது வளர்வதற்கு வாய்ப்பே இல்லை. நான் கொடுத்த விதை வளரவில்லை என்பதை அறிந்த நீங்கள் அனைவரும், அந்த விதையை எடுத்துவிட்டு, வேறொரு விதையை நட்டு, வளர்த்துவிட்டீர்கள். ஜேம்ஸ் மட்டுமே நான் கொடுத்த விதையை அப்படியே கொண்டு வந்திருக்கிறார். எனவே, அவர்தான் என் நிறுவனத்தின் பொறுப்பாளர்" என்று கூறினார்.
குறைகளையும் நிறைகளாகப் பயன்படுத்தும் பக்குவத்தை இறைவன் நமக்கு வழங்கவேண்டும். கொடுக்கப்பட்டுள்ள திறமைகளை பலருக்கும் பயன்படும் வகையில் நாம் பயன்படுத்தவேண்டும். நேர்மையோடு, மனம் தளராத உழைப்போடு நாம் திறமைகளைப் பயன்படுத்தும்போது வெற்றி நிச்சயம் என்பதை நாம் நம்பவேண்டும். இந்தப் பாடங்களையும் இன்னும் பல பாடங்களையும் 'மினா நாணய உவமை' வழியே நமக்கு வழங்கிய இறைமகன் இயேசுவுக்கு நன்றி கூறுவோம்.








All the contents on this site are copyrighted ©.