2014-07-22 16:46:42

ஈராக் துறவுமடத்திலிருந்து இஸ்லாமியத் தீவிரவாதிகளால் துறவிகள் வெளியேற்றம்


ஜூலை,22,2014. ஈராக்கின் வடபகுதியில் 4ம் நூற்றாண்டிலிருந்தே இருந்துவரும் கத்தோலிக்கத் துறவுமடத்தைக் கைப்பற்றியுள்ள இஸ்லாமியப் புரட்சியாளர்கள், அங்குள்ள துறவியரை வெளியேற்றியுள்ளனர்.
Qaraqosh என்ற இடத்திற்கு அருகேயுள்ள சிரிய வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் துறவியர் இல்லத்தைக் கைப்பற்றிய ஈராக்கின் இஸ்லாமியப் புரட்சியாளர்கள், துறவிகள் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும், அவர்கள் எந்த ஒரு பொருளையும் தங்களுடன் எடுத்துச் செல்லக்கூடாது எனவும் கட்டளையிட்டுள்ளனர்.
அத்துறவுமடத்தில் பாதுகாக்கப்பட்டுவந்த சில புனிதப் பொருட்களையும் எடுத்துச் செல்ல இஸ்லாமியத் தீவிரவாதிகள் அனுமதி மறுத்துள்ளனர். சில உடைகளை மட்டுமே எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்ட இந்தத் துறவியர், கால் நடையாகவே சிலமணி நேரம் நடந்து நகரை அடைந்துள்ளனர்.
ISIL என்ற இந்த இஸ்லாமிய தீவிரவாதக் குழு, சிரியாவின் நான்கில் ஒரு பகுதியையும், ஈராக்கின் 40 விழுக்காட்டுப் பகுதியையும் தன் கீழ் கொண்டுள்ளது.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.