2014-07-21 16:25:18

திருத்தந்தை : நம்மில் புதைந்து கிடக்கும் நன்மைத்தனத்தின் விதைகளையே இறைவன் பார்க்கிறார்


ஜூலை,21,2014. நம்மில் தீமைகள் பல இருந்தாலும் நமக்குள் புதைந்து கிடக்கும் நன்மைத்தனத்தின் விதைகளையே இறைவன் பார்க்கிறார் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கோதுமை பயிரிடையே சாத்தான் களைகளை விதைத்துச் சென்றது பற்றிய உவமை குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செபஉரையில் எடுத்துரைத்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
நன்மைத்தனங்களின் நடுவே தீமைகளை விதைத்துச் செல்லும் தீயோனின் செயல் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துவக்கத்தில் இவற்றைப் பிரித்துப் பார்த்து களைகளை அகற்றுவது கடினம் எனினும், இறுதியில் இறைவனே அவற்றிற்கு தீர்ப்பளித்து அகற்றுவார் என்றார்.
களைகளை முதலிலேயே பிடுங்கிவிடுவோம் என வேலையாட்கள் அவசரப்பட்டாலும் நல்ல கதிர்களையும் தெரியாமல் பிடுங்கிவிடும் ஆபத்து இருப்பதை தெரிவித்து, தான் பொறுமையுடையவர் என இறைவன் காட்டியதையும் இங்கு எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நம்மில் தீமைகள் பல இருந்தாலும் நமக்குள் புதைந்து கிடக்கும் நன்மைத்தனத்தின் விதைகளையே இறைவன் உற்றுநோக்கி, அவை வளர்ந்து பலன் தர, பொறுமையாகக் காத்திருக்கிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த காலக்கட்டத்தில் அவர் நம்மை மன்னித்து ஏற்கவும் செய்கிறார் என மேலும் உரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.