2014-07-21 16:28:34

காசாவை விட்டு வெளியேற அருள்பணியாளர்கள் மறுப்பு


ஜூலை,21,2014. காசா பகுதியில் இஸ்ரேல் துருப்புகளின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றபோதிலும், அப்பகுதி மக்களுடனேயே தங்கியிருக்க விரும்புவதாக அங்கு பணியாற்றும் அருள்பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அச்சம், மனஅழுத்தம், தொடர்ந்த ஓசை போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற பெற்றோர் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், குழந்தைகள் இதன் பாதிப்புகளால் நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர் என்று, காசாவில் பணியாற்றும் அர்ஜெண்டினா அருட்பணியாளர் ஹோர்கே ஹெர்னாண்டஸ் அவர்கள் தெரிவித்தார்.
குற்றங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்த, அருட்பணியாளர் ஹோர்கே ஹெர்னாண்டஸ் அவர்கள், மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்துவரும் நிலையிலும், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தே மிகுந்த அக்கறைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ஜூன் மாதத்தில் 3 இஸ்ரேல் இளையோர் கடத்தப்பட்டு கொலைச் செய்யப்பட்டது, அதைத்தொடர்ச்சியாக ஜூலை 2ம் தேதி பாலஸ்தீன இளைஞர் ஒருவர் எருசலேமில் கொலைச் செய்யப்பட்டது ஆகியவற்றைத் தொடர்ந்து, இஸ்ராயேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே மோதல்கள் அதிகரித்துள்ளன.

ஆதாரம் : CNA








All the contents on this site are copyrighted ©.