2014-07-19 15:12:17

மோசூல் நகரம், ஈராக் வரலாற்றில் முதன்முறையாக கிறிஸ்தவர்களின்றி காலியாக உள்ளது, முதுபெரும் தந்தை சாக்கோ கவலை


ஜூலை,19,2014. ஈராக் வரலாற்றில் முதன்முறையாக மோசூல் நகரம் கிறிஸ்தவர்களின்றி காலியாக உள்ளது என்ற கவலையைத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு கல்தேய வழிபாட்டுமுறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை லூயிஸ் இரஃபேல் சாக்கோ.
‘இஸ்லாமிய அரசு’என்ற தனிநாடாக தன்னிச்சையாக அறிவித்துள்ள ISIS போராளிகள் அமைப்பு கிறிஸ்தவர்களுக்கு எதிராக விடுத்துவரும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மோசூல் நகரிலிருந்த கடைசி கிறிஸ்தவக் குடும்பமும் அந்நகரைவிட்டு வெளியேறி, குர்த் இனத்தவர் பகுதிக்குச் சென்றுவிட்டது எனக் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
ஈராக் அரசை எதிர்த்துப் போராடிவரும் ISIS போராளிகள் அமைப்பு, தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள சிரியா மற்றும் ஈராக் பகுதியை ஒன்றிணைத்து ‘இஸ்லாமிய அரசு’என்ற தனிநாடாக அறிவித்துள்ளது. மோசூல் நகரில் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியாப் பிரிவு முஸ்லீம்களின் வீட்டுக் கதவுகளைத் தட்டி, அவர்கள் சிறப்பு வரிகள் செலுத்த வேண்டும், இல்லாவிடில் கொலை செய்யப்படுவார்கள் எனவும் ISIS போராளிகள் மிரட்டி வருகின்றனர் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
மேலும், ஈராக்கில் மனிதாபிமானப் பணிகள் செய்யும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கையின்படி, கடந்த ஜூனில் மட்டும் 1,500க்கும் மேற்பட்ட அப்பாவி குடிமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் அதே மாதத்தில் 6 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, வருங்காலத்தில் லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய நாட்டை உருவாக்கவும் ISIS போராளிகள் திட்டமிட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
ISIS என்பது ‘இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா’என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கம் ஆகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.