2014-07-19 15:19:47

பொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 கனத்த இதயத்துடன் நாம் இந்த ஞாயிறு சிந்தனையைத் துவக்குகிறோம். இரத்தவெறி கொண்டு, அப்பாவி மக்களைக் கொன்றுவரும் இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகளை எண்ணியும், வெளிப்படையான காரணம் ஏதுமின்றி, உக்ரைன் நாட்டில் எரிந்து விழுந்த மலேசிய விமானத்தில் உயிரிழந்தோரை எண்ணியும் நம் மனம் கனத்துப் போயுள்ளது.
உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ சில நாடுகள் சண்டையிடுவதை நாம் ஏன் ஞாயிறு சிந்தனைக்குக் கொணரவேண்டும் என்ற கேள்வி எழலாம். இன்று உலகின் எந்த ஒரு மூலையில் பிரச்சனைகள் வெடித்தாலும், அவை உலகில் ஏனைய நாடுகளையும், அங்கு வாழும் நம் ஒவ்வொருவரையும் பாதிக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்.
இஸ்ரேல், பாலஸ்தீன மோதல், இரு சிறு நாடுகளுக்கிடையே நிகழும் பிரச்சனை அல்ல. அதன் பின்னணியில் பல நாடுகள், பல பன்னாட்டு நிறுவனங்கள், அந்த நிறுவனங்களுடன் தொடர்புகொண்டுள்ள நாம் என்று அனைவரும் இந்தப் பிரச்சனையின் ஒரு பகுதியாகிறோம்.

இஸ்ரேல் இராணுவம், வரைமுறை ஏதுமில்லாமல், அப்பாவி மக்கள் மீது தன் படைபலத்தைக் காட்டிவருகிறது என்றால், அந்த நாட்டை, அந்நாட்டின் இராணுவத்தை அத்தனை சக்தி மிக்கதாக மாற்றியதில் நமக்கும் பங்கு உண்டு என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். புரியவில்லையா? விளக்க முயல்கிறேன்.
இஸ்ரேல் நாட்டில், பல அரசுகளும், வங்கிகளும் தங்கள் பணத்தை பல வழிகளில் முதலீடு செய்துள்ளன. இந்தப் பணத்தின் ஒருபகுதி முதியோரின் ஓய்வுத் தொகையிலிருந்து திரட்டப்பட்ட பணம் என்பதற்குத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. தங்கள் ஓய்வு காலத்தின் பாதுகாப்பு கருதி முதியோர் தங்கள் அரசிடமும், வங்கிகளிலும் தங்கள் ஓய்வூதியத்தை செலுத்தியுள்ளனர். சில அரசுகளும், வங்கிகளும், இஸ்ரேல் அரசின் பல திட்டங்களில் இந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளன. இஸ்ரேல் அரசின் முக்கியத் திட்டங்களில் ஒன்று, அதன் வலிமை மிக்க இராணுவம். எனவே, தீர ஆய்வு செய்தால், அரசிடமும், இவ்வங்கிகளிலும் தங்கள் ஓய்வூதியத்தை ஒப்படைத்த முதியவர்களும், இஸ்ரேல் இராணுவம், தற்போது மேற்கொண்டுள்ள இத்தாக்குதல்களுக்கு ஏதோ ஒருவகையில் காரணமாக உள்ளனர் என்பதுதானே எதார்த்தம்?

ஓய்வுகாலம் என்ற நிலத்தில் பாதுகாப்பு என்ற பயிரை வளர்க்க, முதியோர் தங்கள் பணத்தை அரசிடமும், இவ்வங்கிகளிலும் ஒப்படைத்தனர். ஆனால், அவர்கள் ஒப்படைத்த பணம், வன்முறை என்ற களைகளை வேற்று நாடுகளில் வளர்த்துவிட்டன.
முதியோர் ஒன்று சேர்ந்து தீர்மானித்து, வன்முறை என்ற களைகளை வளர்க்க உதவும் இவ்வரசிடமிருந்தும், வங்கிகளிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தை எடுத்துவிட்டால், இஸ்ரேல் அரசின் வல்லமை ஓரளவாகிலும் குறையும். இந்த வன்முறைத் தாக்குதல்கள் ஓரளவாகிலும் கட்டுப்படுத்தப்படும். உலகின் ஏதோ ஒரு மூலையில், ஏதோ சில நாடுகள் போரில் ஈடுபட்டால், அதில் நாமும் ஏதோ ஒருவகையில் பிணைக்கப்படுகிறோம் என்பது ஓரளவாகிலும் தெளிவாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

தன் வயலில் நல்ல கோதுமைக் கதிர்கள் வளர வேண்டுமென்றால், தன்னைச் சுற்றியுள்ள வயல்களிலும் நல்ல கதிர்கள் வளர வேண்டும் என்ற எண்ணத்துடன், அந்த வயல்களின் உரிமையாளர்களுக்கு நல்ல விதைகளைக் கொடுத்தவரைப் பற்றி சென்ற வாரம் நாம் சிந்தித்தோம். அதேபோல், இவ்வுலகம் என்ற வயலில் களைகள் அதிகம் வளர்ந்தால், அதற்கு நாம் அனைவரும் பொறுப்பு என்ற உணர்வுடன் இன்றைய ஞாயிறு சிந்தனையைத் தொடர்வோம்.

இந்த ஞாயிறன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், நிலத்தில் விதைக்கப்பட்ட கோதுமையையும், களைகளையும் குறித்து இயேசு அழகான ஓர் உவமையைக் கூறியுள்ளார். இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகளிலும், அமைதியை விரும்பும் கதிர்களாக வளர்ந்துள்ள மக்கள் பல்லாயிரம். அவர்கள் நடுவே, வெறுப்பு, வன்முறை, பழிக்குப் பழி என்ற உணர்வுகளை வளர்க்கும் களைகளாக அரசுகளும், ஒரு சில அடிப்படைவாதக் குழுக்களும் வளர்ந்துள்ளன. இந்தக் களைகள் தற்போது, அவ்விரு நாடுகளிலும் வளர்ந்துள்ள மக்கள் என்ற கதிர்களை விழுங்கி வருகின்றன.

இஸ்ரேல் நாட்டில் பிறந்தாலும், இஸ்ரேல் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து, அமைதியை நிலைநாட்ட அங்கு வளர்ந்துள்ள ஓர் அழகிய கதிரின் பெயர், Adam Keller. Tel Aviv நகரில், Gush Shalom என்ற அமைதி இயக்கத்தை நிறுவிய Adam Keller என்ற யூதர், இஸ்ரேல் இராணுவத்தில், கட்டாயத்தின் பேரில் இணைந்தாலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் பணியாற்ற மறுத்தார். எனவே பல முறை சிறை தண்டனை பெற்றார். இவருக்கு, 33 வயதானபோது, இஸ்ரேல் இராணுவம் பயன்படுத்திவந்த அனைத்து போர் வாகனங்களிலும் "இஸ்ரேல் வீரர்களே, ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பணியாற்றச் செல்லாதீர்கள்" என்ற வாசகத்தை எழுதி வைத்தார். இதற்காகவும் இவர் தண்டனைகள் பெற்றார்.
அமைதியை விரும்பும் அழகிய கதிராக வளர்ந்துள்ள Adam Keller அவர்கள், ஜூலை 18, இச்சனிக்கிழமை, Tel Aviv நகரில் Habima என்ற சதுக்கத்தில் அமைதிப் பேரணி ஒன்றை முன்னின்று நடத்தினார். அந்தப் பேரணிக்கு அவர் விடுத்த அழைப்பில், இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடைபெறும் மோதலைக் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்:
அப்பாவி குடிமக்களைச் சுடுவது எந்த ஒரு நாட்டிலும் விதி முறைகளுக்கு முரணானது. எனினும் இரு தரப்பினரும் இந்த விதிமுறைகளை மீறி வருகின்றனர். Hamas போராளிகள் இஸ்ரேல் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். இஸ்ரேல் இராணுவம், பதிலுக்கு, Gaza பகுதியில் வாழும் குடிமக்கள் மீது தாக்குதல்கள் நடத்துகின்றது.
இவ்விரு தரப்பினரும் சமமான, இணையான அமைப்புக்களா? இல்லவே இல்லை. அமெரிக்க ஐக்கிய நாடு அள்ளித்தரும் நிதி உதவியுடன் இஸ்ரேல் அரசு, தன்னைக் காத்துக்கொள்ள "Iron Dome", அதாவது, "இரும்புக் கூரை" என்ற தற்காப்புத் தொழில்நுட்பத்தைக் அமைத்துள்ளது. எனவே, Hamas நடத்தும் தாக்குதல்கள், இஸ்ரேல் பகுதியில் அதிக சேதத்தை உருவாக்காத வாண வேடிக்கைகளாக மாறுகின்றன. அதிகப்படியாக, இஸ்ரேல் மக்கள் இழப்பதெல்லாம் இரவுத் தூக்கம்தான். ஆனால், இந்த 'இரும்புக் கூரை' வசதி இல்லாத ஏழை பாலஸ்தீன குடிமக்கள், இஸ்ரேல் இராணுவத்தால் பெருமளவில் கொல்லப்படுகின்றனர்.
கடற்கரையில் கால்பந்தாட்டம் ஆடிய சிறுவர் முதல், வயது முதிர்ந்தோர் வரை, ஒன்றுமறியா அப்பாவி மக்களின் உயிர்கள் ஒவ்வொரு நாளும் பலியாகின்றன. இஸ்ரேல் இராணுவமும், Hamas போராளிகளும் மேற்கொண்டுள்ள அர்த்தமற்ற தாக்குதல்களை நிறுத்துமாறு, இச்சனிக்கிழமை இரவு, Habima சதுக்கத்தில் பேரணி ஒன்று நடைபெறுகிறது. அமைதியை விரும்புவோர், நம் எதிர்காலச் சந்ததியரைக் காப்பாற்ற விரும்புவோர் இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வாருங்கள்.

அமைதிக் கதிர்களை வளர்க்க விரும்பும் Adam Keller அவர்கள், களைகளை அகற்றி, கதிர்களை வளர்க்கும் பணிக்கென அனைவருக்கும் இந்த அழைப்பை விடுத்துள்ளார். நமது ஊடகங்கள், கதிர்களை விட, களைகளைப் பற்றி பேசுவதிலேயே குறியாக இருக்கின்றன என்பது நமக்குத் தெரிந்த உண்மை. கடந்த இரு நாட்களாக ஊடகங்கள், களைகளின் தாக்கத்தைப் பற்றிக் கூறும் இரு செய்திகளின் சுருக்கத்தை இங்கே தர விழைகிறேன்:

இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் காசா பகுதியில் உள்ள ஒரு கத்தோலிக்கப் பங்குக் கோவிலின் அடுத்த கட்டிடம் தரைமட்டமானது. காசா பகுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கென, அன்னை தெரேசாவின் அருள் சகோதரிகள் நடத்திவரும் இல்லத்தை ஆபத்து சூழந்ததால், அங்கிருந்த சகோதரிகள், மாற்றுத் திறன் கொண்ட 28 குழந்தைகளுடனும், வயதான 9 பெண்களுடனும் பங்குக் கோவிலில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும், இவ்வியாழன் நடந்த தாக்குதலால் குழந்தைகளும் சகோதரிகளும் அச்சத்துடன் வாழ்கின்றனர் என்றும் அருள் சகோதரி ஒருவர் (Laudis) கூறினார்.
இந்தச் செய்தியை ஆய்வு செய்யும்போது, அன்னை தெரேசா அருள் சகோதரிகள் அப்பகுதியில் ஆற்றிவரும் அன்புப் பணிகள் என்ற பயிர்களைப் பாழாக்கும்வண்ணம், இஸ்ரேல் இராணுவத் தாக்குதல்கள் களைகளைப் போல் வளர்ந்து, கதிர்களைக் கொன்றுவிடும் ஆபத்தை உணர்கிறோம்.

இதோ, 2வது செய்தி: காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்றுவரும் தாக்குதல்களால் அப்பகுதியில் உள்ள மருத்துவ உதவிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன என்று அகில உலக மருத்துவ மற்றும் மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டுள்ள 41 அமைப்புகள் அறிக்கையொன்றை விடுத்துள்ளன.
இத்தாக்குதல்களால் பெருமளவில் காயமடைந்துள்ளோர் சாதாரண குடிமக்களே என்று கூறும் இவ்வறிக்கை, அப்பகுதியில் ஏற்பட்டுள்ள மின்சக்தி துண்டிப்பு, எரிபொருள் பற்றாக் குறை ஆகியவை, இந்தப் பிரச்னையை ஆபத்தான அளவு அதிகரித்துள்ளன என்று கூறுகிறது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக, பாலஸ்தீன அரசு இயக்கிவந்த ஆம்புலன்ஸ் துரித வண்டிகள் 25 விழுக்காடு நிறுத்தப்பட்டுள்ளதால், காயமடைந்தோர் மருத்துவ மனைகளை அடைவதற்கும் வழியின்றி உள்ளது என்றும், மின்சக்தி துண்டிப்பால் அவசர மருத்துவ சிகிச்சைகள் நடைபெறாமல் காயமடைந்தோர் இறக்கும் நிலையில் உள்ளனர் என்றும் இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
Action Aid, Oxfam, HelpAge International போன்ற 41 மருத்துவ மற்றும் மனிதாபிமான அமைப்புக்கள் இந்த அறிக்கையை உறுதி செய்து கையெழுத்திட்டுள்ளன.
இச்செய்தியிலும், கதிர்களின் வளர்ச்சியை வேரறுக்கும் களைகளின் தாக்கத்தை நாம் உணர்கிறோம்.

இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளிடையே நிலவி வரும் அர்த்தமற்ற உயிர் புலிகளைப் பற்றி இந்த ஞாயிறு பேசுவதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று... பழிக்குப் பழி, அழிவு என்ற களைகளை வளர்த்துவரும் இவ்விரு நாடுகளும், அமைதிக் கதிர்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற வேண்டுதல் நம்மிடமிருந்து எழவேண்டும். இது முதல் காரணம்.
கதிர்களை வளர்க்க இவ்வுலகில் பொறுமை கூடுதலாகத் தேவை என்பதை இன்றைய உவமை நமக்குச் சொல்லித் தருகிறது. இது இரண்டாவது காரணம். கதிர்களும், களைகளும் இணைந்து வளரும் உலகிற்கு இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள் சிறந்த எடுத்துக்காட்டுகள். அங்கு நடப்பதெல்லாம் வெறும் போர் மட்டுமல்ல. அமைதி முயற்சிகளும் அங்கு ஏராளமாக நடைபெற்று வருகின்றன.

எடுத்துக்காட்டாக, Adam Keller என்ற அந்த அமைதி விரும்பி, இச்சனிக்கிழமை மேற்கொண்ட பேரணி, அமைதி, அன்பு, மன்னிப்பு என்ற விதைகளை விதைத்துள்ளன என்று நம்புவோம். Adam Keller நடத்திய பேரணியின் தாக்கத்தைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
வன்முறை என்ற களையின் தாக்கம் உடனடியாக வெளிப்படும். ஆனால், அன்பு, அமைதி, ஒப்புரவு என்ற கதிர்கள் வளர, அவற்றின் தாக்கத்தை உணர நமக்குப் பொறுமை வேண்டும். இந்தப் பொறுமையை இன்றைய உவமையில் நில உரிமையாளர் வடிவில் நாம் காண்கிறோம்.
தாங்கள் விதைத்த கோதுமை கதிர்கள் மத்தியில் பகைவன் ஒருவன் களைகளை விதைத்துவிட்டான் என்பதை அறிந்ததும், பணியாளர்கள் செயலில் இறங்கத் துடித்தனர். அவர்கள் ஆர்வத்திற்குக் கடிவாளம் மாட்டிய நில உரிமையாளர் சொல்லும் வார்த்தைகள் பொருளுள்ளவை:
மத்தேயு நற்செய்தி 13: 29-30
பணியாளர்கள் அவரிடம், “நாங்கள் போய் களைகளைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?” என்று கேட்டார்கள். அவர், “வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், 'முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன் என்றார்.

இந்தப் பொறுமையை, களைகள் மத்தியில் கதிர்களும் வளரும் என்ற நம்பிக்கையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் தன் புனித பூமி திருப்பயணம் முதல், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் 8ம் தேதியன்று இவ்விரு நாடுகளின் தலைவர்களும் வத்திக்கான் வந்திருந்து, திருத்தந்தையின் முன்னிலையில் அமைதிக்காக வேண்டினர். இவ்வெள்ளி காலையில், இஸ்ரேல் அரசுத் தலைவர், Shimon Peres அவர்களையும், பாலஸ்தீன அரசுத் தலைவர் Mahmoud Abbas அவர்களையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது, தான் அவ்விரு நாடுகளுக்காக தொடர்ந்து செபித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வெறுப்பு, வன்முறை என்ற களைகள் சூழ்ந்திருக்கும் இவ்வுலகில், நாம் நம்பிக்கையைத் தளரவிடாமல், அன்பு, அமைதி, ஒப்புரவு, மன்னிப்பு என்ற நற்கதிர்களை வளர்க்கும் வரம் வேண்டுவோம். அமைதியின் இளவரசனாம் இயேசு பிறந்த புனித பூமியில், அமைதிக் கதிர்கள் மீண்டும் செழித்து வளரவேண்டும் என்று, திருத்தந்தையுடன் இணைந்து, அறுவடையின் தலைவராம் தந்தை இறைவனிடம் மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.