2014-07-19 15:12:11

திருத்தந்தை பிரான்சிஸ் : AMIA குண்டு வெடிப்பு தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி தேவை


ஜூலை,19,2014. இருபது ஆண்டுகளுக்கு முன்னர் புவனோஸ் அய்ரெஸ் யூதமத மையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி தேவை என வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அர்ஜென்டீனாவின் இஸ்ரேல் பரஸ்பர கழகமான AMIAவின் ஏழு மாடிக் கட்டிடம், 1994ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி வாகன குண்டுவெடிப்பால் தாக்கப்பட்டதில் அம்மையம் முழுவதும் அழிந்தது. இதில் 85 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலின் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள ஒலி-ஒளிச் செய்தியில், இந்த வன்முறைக்குப் பலியாகியுள்ளோரின் குடும்பங்களின் துன்பங்களை மறக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அறிவற்ற இந்த வன்முறைச் செயலில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் தான் செபிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இம்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் வலிறுத்தியுள்ளார்.
இத்தாக்குதலுக்கு, அர்ஜென்டீனா நீதிமன்றம் ஈரானைக் குற்றம்சாட்டியுள்ளவேளை, ஈரான் அதனை மறுத்துள்ளது.
மேலும், இறைவன் மகிழ்ச்சியோடு கொடுப்பவரை அன்பு கூருகிறார், எனவே இவ்வுலகப் பொருள்களின் மீதுள்ள அன்பிலிருந்து விடுபட்டு, கொடுப்பதில் தாராளமாக இருப்பதற்கு நாம் கற்றுக்கொள்வோம் என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.