2014-07-18 17:11:39

அடுத்தவர் நலனுக்கென 67 நிமிடங்கள் - அனைத்துலக நெல்சன் மண்டேலா நாளின் மையக்கருத்து


ஜூலை,18,2014. அடுத்தவர் நலனுக்கென 67 நிமிடங்கள் இன்று செலவிட முடியுமா? என்ற கேள்வியுடன் ஜூலை 18, இவ் வெள்ளியன்று அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தன் 95வது வயதில் மறைந்த தென்னாப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களின் பெயரால், ஒவ்வோர் ஆண்டும் ஐ.நா.அவை ஜூலை 18ம் தேதியை, அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் என கடைப்பிடித்து வருகிறது.
இந்நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா.அவை பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், நெல்சன் மண்டேலா அவர்களின் அயராத முயற்சியால் இவ்வுலகில் இனவெறி மறைந்துள்ளதெனினும், மக்களைத் துன்புறுத்தும் வறுமை, பாகுபாடுகள், வன்முறைகள் என்ற பல தளைகளிலிருந்து இவ்வுலகம் இன்னும் விடுபடவேண்டும் என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
95 ஆண்டுகள் வாழ்ந்த நெல்சன் மண்டேலா அவர்கள், தன் வாழ்வின் 67 ஆண்டுகளை, பொது நலனுக்கென செலவிட்டதன் நினைவாக, இந்த உலக நாளன்று, ஒவ்வொருவரும் 67 நிமிடங்கள் பிறர் நலனுக்கென செலவிட ஐ.நா.அவை கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில் கடைபிடிக்கப்பட்ட இந்த உலக நாளையொட்டி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுதல், சேரிகளில் கல்வி கற்றுத் தருதல் போன்ற பணிகளில் மக்கள் ஈடுபட்டிருந்தனர் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று கூறுகிறது.
இவ்வாண்டு, இந்த நாளை கடைபிடிக்கும் வகையில், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள், நெல்சன் மண்டேலா அவர்களின் பேரன் Kweku Mandela Amuah அவர்களுடன் இணைந்து, Manhattan பகுதியில் களைகளை அகற்றுதல், மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறார் என்றும் இச்செய்தி கூறுகிறது.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.