2014-07-17 15:38:28

சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் விடுத்துள்ள எச்சரிக்கை


ஜூலை,17,2014. "ஆகஸ்ட் மாதம் முதல் தேதிக்கு முன்னர் உங்கள் கிராமங்களை விட்டு வெளியேறுங்கள் அல்லது, விளைவுகளைச் சந்திக்கத் தாயாராக இருங்கள்" என்ற எச்சரிக்கையை சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு விடுத்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் மாவட்டத்தில் வாழும் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு பல வேளைகளில் தொல்லைகள் கொடுத்து வருகின்றது என்றும், இவற்றின் சிகரமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றும் அனைத்துலக கிறிஸ்தவக் கழகத்தின் தலைவர் சஜன் ஜார்ஜ் அவர்கள் ஆசிய செய்தியிடம் கூறியுள்ளார்.
Belar என்ற கிராமத்தில், இந்துக்கள் அல்லாதவர் கிராமத்திற்குள் நுழையக்கூடாது என்றும், கிராமத்தில், இந்து விழாக்களைத் தவிர வேறு எந்த விழாவும் கொண்டாடப்படக் கூடாது எனவும் கிராம அவை என்ற அமைப்பு ஆணைகள் பிறப்பித்துள்ளது.
ஒரு சில கிராமங்களில், ரேஷன் முதற்கொண்டு பல்வேறு அடிப்படை வசதிகள் கிறிஸ்தவர்களுக்கு மறுக்கப்பட்டு வருகின்றன என்று சஜன் ஜார்ஜ் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாரதீய ஜனதா கட்சியின் ஒரு முக்கிய அங்கமாக விஷ்வ ஹிந்து பரிஷத் என்ற அமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.