2014-07-17 15:36:06

கார்மேல் அன்னை திருநாளையொட்டி, கார்மேல் துறவு இல்லத்தில் மும்பை கர்தினால் கிரேசியஸ் திருப்பலி


ஜூலை,17,2014. நீதி, நேர்மை, நாணயம் ஆகிய பண்புகளை வெளிப்படுத்தும் வாழ்வை மேற்கொள்கிறோமா அல்லது, உலகம் காட்டும் நேர்மையற்ற பாதைகளில் நமது தொழில், உறவு அனைத்தும் செல்கின்றனவா என்ற கேள்வியை மும்பைப் பேராயர் கர்தினால் ஆச்வல்ட் கிரேசியஸ் எழுப்பினார்.
ஜூலை 16, இப்புதனன்று கொண்டாடப்பட்ட கார்மேல் அன்னை திருநாளையொட்டி, மும்பையில் அமைந்துள்ள கார்மேல் துறவு சபைக் கன்னியர்கள் இல்லத்தில் திருப்பலியாற்றிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், திருநாளின் வாசகங்களில் ஒன்றான, அரசர்கள் முதல் நூல் பகுதியை மையப்படுத்தி மறையுரை வழங்கினார்.
தான் புதுநன்மை பெற்ற நாளன்று கார்மேல் அன்னையின் உருவம் தாங்கிய உத்தரியம் பெற்றதையும் மகிழ்வுடன் நினைவு கூர்ந்த கர்தினால் கிரேசியஸ் அவர்கள், கார்மேல் துறவு சபைக் கன்னியர்கள், மும்பை உயர் மறைமாவட்டத்தை தங்கள் செபங்களால் தாங்கிவருவதற்கு தன் நன்றியைக் கூறினார்.
இத்துறவு இல்லத்தின் தலைவியான அருள் சகோதரி Marie Gemma அவர்கள், திருப்பலிக்கு வந்திருந்தோரை வரவேற்றுப் பேசியபோது, வெற்றி, புகழ் இவற்றையே பெரிதுபடுத்தும் இவ்வுலகில், வேறு பல உன்னத விழுமியங்கள் இருப்பதை மரியன்னை நமக்குச் சொல்லித்தருகிறார் என்று கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.