2014-07-15 15:46:07

திருத்தந்தை பிரான்சிஸ் : குடிபெயர்தல், இன்றைய சமூகங்களுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது


ஜூலை,15,2014. இன்றைய சமூகங்களுக்கு குடிபெயர்தல் என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாக, மெக்சிகோவில் நடக்கும் குடிபெயர்தல் குறித்த கருத்தரங்குக்கு வழங்கியுள்ள செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
“மனிதகுல குடிபெயர்வும், வளர்ச்சியும்” என்ற தலைப்பில் திருப்பீட பங்கேற்புடன் மெக்சிகோவில் நடக்கும் கருத்தரங்குக்குச் சிறப்பு செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாடுவிட்டு நாடு குடிபெயர்தல் என்ற கூறு மிகப்பெரும் வாக்குறுதியுடன் பெரும் சவால்களையும் உள்ளடக்கியது என அதில் கூறியுள்ளார்.
பலர் தங்கள் குடும்பங்களைவிட்டு கட்டாயமாகப் பிரிக்கப்படுதல், வன்முறைகளை எதிர்கொள்ளுதல், உயிரிழத்தல் போன்றவைகளும் குடிபெயர்தலின் ஒரு பகுதியாக மாறிவிட்டது குறித்து கவலையை வெளியிட்டுள்ள திருத்தந்தை, நீதியான, சகோதரத்துவ, மற்றும், மேலும் சிறந்த ஓர் உலகை அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்புவதே இதற்கான தீர்வாக இருக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், அன்பு இளையோரே, தரம் குறைந்த வாழ்வுடன் நிறைவடைந்து விடாதீர்கள். சிறந்த வாழ்வு மிக உன்னதக் கொள்கைகளுடன் சவால்களை முன்வைக்கிறது என இளையோரை நோக்கிக் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.