2014-07-15 15:47:33

ஏழ்மையும் குடிபெயர்தலும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்துள்ளது, திருப்பீடச் செயலர்


ஜூலை,15,2014. மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாட்டுக்குள் குடியேற முயல்பவர்கள் தொடர்புடைய நெருக்கடி குறித்து விவாதிக்க மெக்சிகோ சென்றுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
மக்கள் குடிபெயர முயல்வது குறித்த பிரச்சனைக்குச் சுமுகமான தீர்வு காண உதவும் நோக்கில் திருப்பீடத்திற்கும், மெக்சிகோ அரசுக்கும் இடையே ஒன்றிணைந்த திட்டம் ஒன்றைத் தீட்டுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் ஹோசே அந்தோணியோ மெதேவுக்கும், கர்தினால் பரோலின் அவர்களுக்கும் இடையே நடந்த சந்திப்பின்போது ஹொண்டூராஸ், குவாத்தமாலா, எல் சால்வதோர் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
குடிபெயர்வோர் குறித்த கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் பரோலின் அவர்கள், ஏழ்மையும் குடிபெயர்தலும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளதால், ஏழ்மை குறித்த பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகள் தனியாக பிற நாடுகளுக்குக் குடிபெயர முயல்தல், வன்முறை, இலஞ்ச ஊழல், போதைப்பொருள் கடத்தல் போன்ற பிரச்சனைகள் குறித்தும் எடுத்தியம்பிய திருப்பீடச் செயலர், தனிமனித உரிமைகள் மதிக்கப்பட அரசியல் தலைவர்களின் அர்ப்பணத்திற்கும் அழைப்பு விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.