2014-07-14 15:32:20

வாரம் ஓர் அலசல் – வார்த்தைகள் வாழ்வளிக்கட்டும்


ஜூலை,14,2014 RealAudioMP3 . பிரேசில் நாட்டில் கடந்த ஜூன் 12ம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2014, ஜூலை 13 இஞ்ஞாயிறோடு நிறைவுக்கு வந்துள்ளது. விறுவிறுப்பான இறுதிப் போட்டியில் 113-வது நிமிடத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி, 24 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையைக் கைப்பற்றியது ஜெர்மனி. உலக கோப்பை வென்ற ஜெர்மனி அணிக்கு, சாம்பியன் பட்டத்துடன், 207 கோடி ரூபாயும், இரண்டாவது இடம் பிடித்த அர்ஜென்டினா அணிக்கு 148 கோடி ரூபாயும் பரிசுகள் வழங்கப்பட்டன. கடந்த பல நாள்களாக இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது இரசிகர்களின் காரசார உணர்ச்சி பொங்கிய வார்த்தைகள் சிலரைச் சங்கடப்படுத்தின, பலரை சேர்ந்து பேச வைத்தன. அதுவும் அரையிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி ஜெர்மனியோடு 1-7 எனும் கணக்கில் தோல்வியடைந்தபோது, சமயம் பார்த்து சிங்கத்தின் குகைக்குள் புகுந்து, அதனை அடக்கி ஆட்கொள்வது ஐரோப்பியக் கால்பந்துக் கலாச்சாரம். இது பிரேசிலிடம் இல்லை என்று ஊடகங்கள் விமர்சித்தன. அரையிறுதிக்குக்கூட செல்ல முடியாமல் இத்தாலி அணி நாடு திரும்பியபோது, இலட்சக்கணக்கில் இவ்வளவு பணத்தை வாங்கிக்கொண்டு சரியாக விளையாடவில்லையே என்று பலர் கோபமாகப் பேசியதும் காதில் விழுந்தது.
எந்த ஒரு போட்டியிலும் வெற்றியும் இருக்கும், தோல்வியும் இருக்கும். இதில் இவ்விரு தரப்புகளுமே நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளாகின்றன. பொதுவாக நம் வாழ்க்கையில் எதற்குப் பஞ்சம் வந்தாலும் எதிர்மறை விமர்சன வார்த்தைகளுக்கு மட்டும் பஞ்சமே வராது. பல நேரங்களில் அவை பிறர் வாழ்வைச் சிதைக்கும் சுடு சொற்களாக வெளிவருகின்றன. நாவினால் சுடப்படும் இந்தச் சுடுசொற்கள் ஏற்படுத்தும் மனக்காயங்கள், ஆறாத வடுக்களாக இருந்து, சிலவேளைகளில் மரணத்தில்கூட முடிந்து விடுகின்றன. அன்பு நேயர்களே, நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் பிறருக்கு ஆசீர்வாதங்களாக, பிறரை உற்சாகமூட்டுபவைகளாக இருக்க வேண்டும். இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் மத்தேயு நற்செய்தி, 13ம் பிரிவிலுள்ள விதைப்பவர் உவமை பற்றி விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.......
RealAudioMP3 “நம் வாயிலிருந்து எத்தகைய வார்த்தைகள் வெளி வருகின்றன? அந்த வார்த்தைகள் நிறைய நன்மைகளையும் செய்யும், நிறைய தீமைகளையும் செய்யும். நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் புண்படுத்தும் அல்லது குணப்படுத்தும், அவை ஊக்கப்படுத்தும் அல்லது சோர்வடையச் செய்யும். நம் இதயத்திலிருந்து வெளிவருவதுதான் முக்கியம், இதயத்துக்குள் செல்பவை அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் இவ்வுவமை பேசியதுபோல இன்று நம் ஒவ்வொருவரிடமும் பேசுகிறது. நிலமாகிய நம் இதயத்தில் இறைவன் சோர்வின்றி அயராது தம் வார்த்தையையும் தம் அன்பையும் விதைத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் நாம் எத்தகைய மனநிலையோடு அதை ஏற்கிறோம்? நம் இதயம் பாறையாக, வழியோரமாக, முட்புதராக, எப்படி இருக்கிறது? நம் இதயம், முட்களும் கற்களும் இன்றி நன்றாகச் செப்பனிடப்பட்டிருந்தால் அது நல்ல விளைச்சலைக் கொடுக்கும்....”
என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார். மெய்யியல் மேதை சாக்ரடீஸ் அவர்கள் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருசமயம், ஒருவர் சாக்ரடீஸ் முன்னால் ஓடிவந்து நின்று, அது உங்களுக்குத் தெரியுமா? எனத் தொடங்கினார். உடனே சாக்ரடீஸ் அவரைத் தடுத்து நிறுத்தி, நீங்கள் சொல்லப்போவது உண்மையிலேயே நடந்ததா? அல்லது நீங்கள் கேள்விப்பட்டதா? என்று கேட்டார். அதற்கு அவர், நான் கேள்விப்பட்டதுதான் என்றார். சரி, அது நல்ல விடயம்தானே? என சாக்ரடீஸ் கேட்டதற்கு, நல்லதா எனத் தெரியாது, ஆனால் அது சுவையானது என்றார் அவர். சாக்ரடீஸ் அடுத்த கேள்வியை அவரிடம் கேட்டார். சரி, நீங்கள் சொல்லப்போகும் செய்தி உங்களுக்கோ அல்லது எனக்கோ பயனுள்ளதா? என்று கேட்க, அவர், பயன் ஏதும் இல்லை, ஆனால்..... என்று ஏதோ சொல்ல வந்தார். அவர் சொல்லி முடிப்பதற்குள் சாக்ரடீஸ் அவரிடம், நண்பரே, உங்கள் செய்தி அவசியமானதாக எனக்குத் தோன்றவில்லை. எனது பேச்சு மற்றவருக்குப் பயன்பட வேண்டும். எனக்கும் வேலை இருக்கின்றது, நான் போய் வருகிறேன் என்று விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தைவிட்டு நடக்க ஆரம்பித்தார்.
ஆம். எம் வானொலி நண்பர்களே, நம் வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் பிறருக்குப் பயன் அளிப்பதாய் இருக்க வேண்டும். இல்லாவிடில் மௌனமாகவே இருந்துவிடுவதே மேலானது. சிலரைப் பார்க்கிறோம். எப்போதும் அவர்கள் அடுத்தவர் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள், அதுவும் நல்ல செய்திகளாக இருக்காது. ஊரில் ஒருவருக்கொருவர் சண்டையை மூட்டிவிடும் ஒரு பெண்ணை புனித பிலிப்புநேரி எவ்வாறு திருத்தினார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். அப்புனிதர் அப்பெண்ணிடம் ஒரு கோழியை வாங்கி வரச்சொல்லி அந்தக் கோழியின் இறகுகளை ஒவ்வொன்றாக அந்த ஊரில் பிய்த்துப் போடச் சொன்னார். பின்னர் திரும்பி தன்னிடம் வந்த அந்தப் பெண்ணிடம், அந்த இறகுகள் அனைத்தையும் பொறுக்கி வரச் சொன்னார் அப்புனிதர். மீண்டும் ஊருக்குள் சென்ற அப்பெண் வெறுங்கூடையோடு அப்புனிதரிடம் திரும்பி வந்து, காற்றில் அவை அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன என்று சொன்னார். அப்போது புனித பிலிப்புநேரி அவர்கள், இதேபோல் தான் உனது வாயிலிருந்து வெளிவரும் சொற்களை நீ திரும்பப் பெற முடியாது. அதனால் நாவடக்கமுள்ள பெண்ணாக இரு என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.
ஒருசில முன்கோபிகள் இருப்பார்கள். கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்தபடி வயது வரம்பில்லாமல் எல்லாரையும் பேசி விடுவார்கள். பின்னர் அவர்களிடம் வருத்தப்படுவார்கள். இப்படி நடந்து கொண்ட தனது முன்கோபி மகனைத் திருத்த விரும்பினார் ஒரு தந்தை.
ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் கோபப்படும்போது சம்பந்தப்பட்டவர்களைத் திட்டுவதை விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மரவேலியில் ஓர் ஆணியை ஆத்திரம் தீரும்வரை அறைந்து விடும்படி அறிவுரை சொன்னார். முதல் நாள், வேலியில் ஏறக்குறைய ஐம்பது ஆணிகளை அறைந்தான் அவன். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள்முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொண்டான். நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப்பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்கவேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை. அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க அவனுக்கு முழுதாக ஒரு நாள் எடுத்தது. எல்லா ஆணிகளையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா மகனிடம், வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களைக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்" என்று எடுத்துக் கூறினார்.
நம் வாயிலிருந்து அணுகுண்டுகளாக வார்த்தைகள் வெடிக்கும்போது, அவை பிறர் வாழ்வில் அதிகச் சிதைவினையும், மிக ஆழமான பள்ளத்தையும் ஏற்படுத்துகின்றன. அவை பிறரில் உயிர்ச் சேதமற்ற மரணங்களையும் ஏற்படுத்துகின்றன. இதன் பாதிப்பை உணர்த்தும் விதத்தில், காவியக்கவி என்ற வலைத்தளத்தில் காணப்பட்ட வரிகளில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம்.
கொல்லாதே சொல்லாலே நல்லால்லே நல்லால்லே, நல்லவரே வல்லவரே பொல்லாப்பு வேண்டாமே, நாவினால் சுட்ட வடு ஆறாதே ஆறாதே, நயம் மிக்க சொற்கள் நற்றமிழில் ஏராளம். தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும், வீணாக வார்த்தைகளை விரயம் செய்வதுவோ, வேண்டியவரை எல்லாம் வேதனையில் ஆழ்த்துவதோ, பார்த்ததுபோல் எதையும் அளப்பதுவோ நன்றோ? கருத்துச் சொல்ல வேண்டும் என்றால் வாழ்ந்து பாரு, வாழ்க்கைகள் வேறு வேறு, வரும் துன்பம் வேறு, சூழ்நிலைகள் வேறு வேறு, மனநிலைகள் வேறு. அதேநேரம், அன்பு நெஞ்சங்களே, பிறரின் புண்பட்ட சொற்களால் காயமடைந்துள்ளீர்களா, அப்படியானால், “உன் முதுகுக்குப் பின்னால் பேசுபவர்களைப் பற்றிக் கவலைப்படாதே. நீ அவர்களுக்கு இரண்டு அடி முன்னால் இருக்கிறாய் என்று பெருமைப்படு” என்ற கூற்றை நினைத்துக்கொள்ளுங்கள். எவரும் தான் வாழ்வதற்காகப் பிறரை வார்த்தைகளால் கொல்ல வேண்டாம். நம் பேச்சுக்கள் எப்பொழுதும் பிறருக்கு நன்மை செய்யட்டும், மகிழ்ச்சியைத் தரட்டும், ஆசீர்வாதங்களாக அமையட்டும்.







All the contents on this site are copyrighted ©.