2014-07-14 15:26:02

புனிதரும் மனிதரே : தனது தந்தையாலே கொலைசெய்யப்பட்ட மறைசாட்சி (St Barbara)


மூன்றாம் நூற்றாண்டில் உரோமையப் பேரரசர் மாக்சிமியான் ஆட்சி செய்த காலத்தில் தியோஸ்கோருஸ் என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார். இவர் வேற்று தெய்வங்களை வழிபடுபவர். குணத்திலும் கொடூரமானவர். தனது மகளை வீட்டுக்கு வெளியே செல்லவிடாமல் அவளுக்கென ஒரு கோபுரம் கட்டி அதில் தனியே வாழ வைத்திருந்தார். ஒரு சமயம் இவர் வெளியூர் சென்றபோது அந்தக் கோபுரம் அருகே தனது மகளுக்கென ஒரு குளியல் அறை கட்டுமாறும் அதில் இரண்டு ஜன்னல்கள் வைக்குமாறும் தனது ஊழியர்களிடம் கட்டளையிட்டுச் சென்றார். ஆனால் அவர் ஊரிலிருந்து திரும்பி வந்தபோது அங்கு மூன்று ஜன்னல்கள் கட்டப்பட்டிருந்தன. வெகுண்டெழுந்தார் தியோஸ்கோருஸ். உடனே அவரது மகள் தான் ஒரு கிறிஸ்தவர் என்றும், மூவொரு கடவுளின் நினைவாக மூன்று ஜன்னல்களை அமைத்ததாகவும் தெரிவித்தாள். உடனே தனது மகளைக் கொலை செய்வதற்காக அவர் தனது இடைவாளை உருவியபோது, அந்தக் கோபுரத்தில் அற்புதமாக ஒரு துவாரம் உருவாகி அருகிலிருந்த மலைக்கு அவரது மகள் எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டார். அவரும் அம்மலைக்குச் சென்றார். அங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இருவரில் ஒருவர் அப்பெண்ணை அவரிடமிருந்து மறைத்தார். ஆனால் மற்றவரோ அப்பெண்ணை அவரது தந்தையிடம் காட்டிக்கொடுத்தார். உடனே அந்த இடையர் கல்லானார். அவரது ஆட்டு மந்தையும் வெட்டுக்கிளிகளாக மாறின. வெஞ்சினம் கொண்ட தியோஸ்கோருஸ், தனது மகளை தரதரவென இழுத்துக்கொண்டுபோய் அந்த மாநிலத் தலைவர் மார்த்தினியான் என்பவர் முன்னிலையில் நிறுத்தினார். அப்பெண் தனது கிறிஸ்தவ விசுவாசத்தை மறுதலிக்குமாறு சித்ரவதைப்படுத்தப்பட்டார். அப்பெண் அடைக்கப்பட்டிருந்த இருட்டறை இரவில் ஒளிமயமாகி அவரின் காயங்களைக் குணப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் அப்பெண் சித்ரவதை செய்யப்பட்டு அடைக்கப்படுவதும், காலையில் அக்காயங்கள் குணமாவதுமாக இருந்தன. பின்னர் அப்பெண்ணைத் தீயிலிட்டு எரிப்பதற்கு நெருப்புப் பந்தங்களை அருகில் கொண்டுசென்ற போதெல்லாம் அவரை அவை ஒன்றும் செய்யவில்லை. இறுதியில் தந்தை தியோஸ்கோருசே தனது மகளின் தலையை வெட்டிக் கொன்றார். தனது மகளை கொலைசெய்துவிட்டு வீடு திரும்பியபோது தியோஸ்கோருசை மின்னல் தாக்கி அதில் கருகி இறந்தார். இந்தப் பெண்தான் மறைசாட்சி புனித பார்பரா. கி.பி.267ம் ஆண்டில் இவர் மறைசாட்சியானார் எனச் சொல்லப்படுகிறது. இவரது விழா டிசம்பர் 4. புனித பார்பரா இடி மின்னலுக்கும், இத்தாலிய கடற்படைக்கும் பாதுகாவலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.