2014-07-11 16:12:10

தேர்தல் முடிந்துள்ள நிலையில் மக்கள் அமைதி காக்குமாறு இந்தோனேசிய சமயத் தலைவர்கள் அழைப்பு


ஜூலை,11,2014. இந்தோனேசியாவில் இப்புதனன்று நடந்து முடிந்துள்ள அரசுத்தலைவர் தேர்தலில், அரசுத்தலைவர்க்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் தாங்கள் வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துவரும் இவ்வேளையில், அந்நாட்டு மக்கள் அமைதி காக்குமாறு அழைப்புவிடுத்துள்ளனர் இந்தோனேசிய சமயத் தலைவர்கள்.
தேர்தல் முடிவுகள் இம்மாதம் 22ம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும்வேளை, அரசுத்தலைவர்க்குப் போட்டியிட்ட ஜகார்த்தா ஆளுனர் Joko Widodo, முன்னாள் இராணுவ அதிபர் Prabowo Subianto ஆகிய இரு வேட்பாளர்களும் தாங்களே இத்தேர்தலில் வெற்றியடைந்துள்ளதாக அறிவித்துவருகின்றனர்.
இந்த வேட்பாளர்களின் இந்த அறிவிப்பையொட்டி ஜகார்த்தாவில் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய, இந்தோனேசிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பின் செயலர் Andreas A Yewangoe அவர்கள், வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகளுக்குக் கீழ்ப்படிய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
போட்டியிட்ட கட்சிகள் வெற்றிக்கு அல்லது தோல்விக்குத் தயராக இருக்க வேண்டும் எனவும், தங்களது கணிப்புகளை மிகைப்படுத்திச் சொல்வது பல்வேறு குழுக்கள் மத்தியில் கலவரங்கள் உருவாகக் காரணமாகும் எனவும் எச்சரித்துள்ளார் Yewangoe.

ஆதாரம் : UCAN







All the contents on this site are copyrighted ©.