2014-07-11 16:12:03

சுற்றுலாத் தலங்களுக்குச் சுற்றுலா பயனாக அமைய வேண்டும், திருப்பீட அவை


ஜூலை,11,2014. உலக அளவில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா நடவடிக்கைகள், சுற்றுலாத் தலங்களில் வாழும் மக்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சாரங்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டுமென்று திருப்பீட குடியேற்றதாரர் அவை கேட்டுக்கொண்டுள்ளது.
வருகிற செப்டம்பர் 27ம் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக சுற்றுலா தினத்துக்கென திருப்பீட குடியேற்றதாரர் அவை இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள செய்தியில், உலக சுற்றுலாக்கள் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மையப்படுத்தியதாய் இருக்க வேண்டுமென்று கேட்டுள்ளது.
பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய மூன்று துறைகளையும் மதிப்பதாய் சுற்றுலாக்கள் அமைய வேண்டுமென்றும், பொருளாதார வளர்ச்சியின் முக்கிய காரணியாக உள்ள சுற்றுலாக்கள் உள்ளூர் வளர்ச்சிக்கு 3 முதல் 5 விழுக்காடுவரை பங்களிக்கின்றன என்றும் அச்செய்தி கூறுகிறது.
சுற்றுலா செல்லும் இடங்கள், அழகான மற்றும் வசதியான உள்கட்டமைப்புக்களை மட்டும் கொண்டிராமல் அந்தந்த இடங்களில் வாழும் மக்களின் கலாச்சார வாழ்வையும் உள்ளடக்கியது என்பதால், சுற்றுலாத் தலங்களில் வாழும் மக்கள், சுற்றுலா வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க வழி அமைக்கப்பட வேண்டுமென்றும் அச்செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“சுற்றுலாவும், சமூக வளர்ச்சியும்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இச்செய்தியில், திருப்பீட குடியேற்றதாரர் அவையின் தலைவர் கர்தினால் மரிய அந்தோணியோ வேலியோ, அதன் செயலர் ஆயர் ஜோசப் களத்திப்பரம்பில் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.