2014-07-10 15:54:13

வெனிசுவேலா நாட்டில் நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கவேண்டும் - அந்நாட்டு ஆயர்கள்


ஜூலை,10,2014. கத்தோலிக்கர்களை பெரும்பான்மையினராகக் கொண்டுள்ள வெனிசுவேலா நாட்டில் மனதை வீழ்ச்சியடையச் செய்யும் எதிர்மறையான எண்ணங்களைக் களைந்து, நம்பிக்கையை உயர்த்திப் பிடிக்கவேண்டும் என்று அந்நாட்டு ஆயர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
வெனிசுவேலா ஆயர்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தை அண்மையில் துவங்கிவைத்த ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Diego Rafael Padrón Sanchez அவர்கள், நாட்டில் நிலவிவரும் பல்வேறு பிரச்சனைகள் மக்களின் நம்பிக்கையை வெகுவாக குறைத்துள்ளன என்று குறிப்பிட்டார்.
ஒருவரை ஒருவர் நம்பாமல், அடுத்தவரை ஏற்றுக்கொள்ளாமல் வாழ்வதே, நாட்டில் உருவாகியுள்ள பல பிரச்சனைகளின் ஆணிவேராக அமைந்துள்ளது என்று குறிப்பிட்ட பேராயர் பத்ரோன் சான்செஸ் அவர்கள், மனம் திறந்த உரையாடல் பல பிரச்சனைகளைத் தீர்க்கும் என்பதை எடுத்துரைத்தார்.
எளிய மக்கள், இளையோர், உட்பட சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரின் கருத்துக்களை திறந்த மனதுடன் கேட்கவும், அவற்றை ஏற்கவும் அரசு முன்வர வேண்டும் என்று பேராயர் பத்ரோன் சான்செஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.