2014-07-10 15:58:44

வரலாற்றில் பல போர்களைச் சந்தித்துள்ள இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளிடையே மீண்டும் ஒரு போர் சூழும் ஆபத்து - ஐ.நா. பொதுச் செயலர்


ஜூலை,10,2014. வரலாற்றில் பல போர்களைச் சந்தித்துள்ள இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகள் மீண்டும் ஒரு போரில் ஈடுபடும் ஆபத்து அதிகரித்துள்ளது, எனவே, இவ்விரு நாடுகளுக்கும் இடையே உருவாகியுள்ள பதட்டங்களை நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் விண்ணப்பித்துள்ளார்.
இஸ்ரேல் இளையோர் மூவரும், பாலஸ்தீன இளையோர் ஒருவரும் அண்மையில் கொலையுண்டதைத் தொடர்ந்து, இவ்விரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல்கள் உருவாகியுள்ளதைக் குறித்து இப்புதனன்று தன் கவலையை வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், அண்மையக் காலங்களில் இவ்விரு நாடுகளும் கண்டிராத அளவு வெறுப்பு உணர்வுகள் அங்கு உருவாகியுள்ளன என்று சுட்டிக் காட்டினார்.
இப்புதன் கிழமை முழுவதும் இஸ்ரேல் பிரதமருக்கும், பாலஸ்தீன அரசுத் தலைவருக்கும், இன்னும், எகிப்து, அமெரிக்க ஐக்கிய நாடு தலைவர்களுக்கும் தொலை பேசியில் தொடர்பு கொண்டதை எடுத்துரைத்த பான் கி மூன் அவர்கள், இந்நிலையைச் சீரமைக்க அனைத்து நாடுகளும் துரித கதியில் செயல்படவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நீதியை நிலை நாட்டுவதற்குப் பதிலாக, இரு நாடுகளும் பழிக்குப் பழி என்பதிலேயே கவனம் செலுத்துவது மிகுந்த ஆபத்தானது என்றும், இந்த வன்முறை வளையத்தை உடைக்க, அரசியல் ஞானம் அதிகம் தேவை என்றும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : UN








All the contents on this site are copyrighted ©.