2014-07-10 15:17:40

புனிதரும் மனிதரே : அடித்தவரை அன்போடு நோக்கியவர் (St. Gal of Clermont)


ஒருமுறை கொடூரன் ஒருவன் திடீரென ஓர் ஆயர் முன்வந்து அவரைத் தடியால் அடித்துவிட்டான். அப்போது அருகில் நின்றவர்களுக்குக் கடுமையாய்க் கோபம் வந்தது. ஆனால் அடித்தது யார் என்று தெரிந்தும், அந்த ஆள்மீது ஆயர் வெறுப்பையோ கோபத்தையோ காட்டவில்லை. ஆயரின் கருணையைக் கண்ட அந்தக் கொடூரன் ஆயரிடம் மன்னிப்புக் கேட்டு மனம் மாறினான். இன்னொருமுறை, அருள்பணியாளர்கள் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, அவர்களின் பிரதிநிதியாகப் பணியாற்றிய ஒருவர் ஆயர் மீது தவறாகக் குற்றம் சுமத்தத் தொடங்கினார். ஆயர் என்ன பதில் சொல்வார் என எல்லாரும் கவலையுடன் எதிர்பார்த்தனர். ஆனால் ஆயரோ எதுவுமே பேசாமல் அவ்விடத்தைவிட்டு வெளியேறி அந்நகரில் இருந்த ஆலயங்களைத் தரிசிக்கச் சென்றார். இதனால் மனது குத்துண்ட அந்த அருள்பணியாளர், விரைந்து ஓடி தெரு என்றும் பார்க்காமல் ஆயரின் முன்பாக மண்டியிட்டு மன்னிப்பு வேண்டினார். இந்த ஆயர்தான் கிளேர்மோண்ட் நகர் ஆயர் புனித கால் (Gall). பிரான்சில் மதிப்புமிக்க செல்வக் குடும்பத்தில் 489ம் ஆண்டு பிறந்த இவர் திருமண வயதை எட்டியபோது பெற்றோர் பெண் பார்த்தார்கள். ஆனால் திருமண வாழ்வை விரும்பாத இவர் யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார். Cournon ஆதீனம் சென்று துறவியாக வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால் அதன் தலைவர் அவரிடம் முதலில் போய் உன் பெற்றோரின் அனுமதி பெற்றுவா எனத் திருப்பி அனுப்பிவிட்டார். வேறு வழியின்றி கால் அவர்கள் திரும்பிச் சென்று பெற்றோரின் அனுமதி பெற்று வந்தார். Austrasia அரசர் முதலாம் Theuderic, Auvergneஐ ஆக்ரமித்தபோது கால் அவர்களைக் கைது செய்து சிறையில் வைத்தார். சில ஆண்டுகள் கழித்து விடுதலையானார் கால். 527ம் ஆண்டில் கிளேர்மோண்ட் ஆயரான கால், அரசியலிலும், சமய வாழ்விலும் முக்கிய பங்கு வகித்தார். இவர் கி.பி.553ம் ஆண்டில் காலமானார். கிளேர்மோண்ட் புனித கால் விழா ஜூலை 01.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.