2014-07-10 15:54:44

திருத்தந்தையின் கொரிய பயணத்தை முன்னிட்டு, பிரபலமான கலைஞர்கள் இணைந்து வெளியிட்டுள்ள பாடல் ஒலி-ஒளி நிகழ்ச்சி


ஜூலை,10,2014. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் மாதம் கொரியாவில் மேற்கொள்ளும் பயணத்தை முன்னிட்டு, அந்நாட்டின் பிரபலமான நடிகர்கள், இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் இணைந்து ஒரு பாடலை ஒலி-ஒளி வடிவில் இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளனர்.
குடும்பம், தோழமை என்ற பொருள்படும் 'Koinonia' என்ற கிரேக்க மொழி வார்த்தையைத் தலைப்பாகக் கொண்டு வெளியிடப்பட்ட இந்த ஒலி-ஒளி நிகழ்ச்சி, Seoul பேராலயத்தில் பதிவு செய்யப்பட்டது என்றும், இதில் கலந்துகொண்ட அனைத்து கலைஞர்களும் தங்கள் சேவைகளை இலவசமாக வழங்கினர் என்றும் ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி முதல் 18ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கொரியா நாட்டில் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்தப் பாடல் ஒளிபரப்பப்படும் என்று திருப்பயண தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
மதம், இனம் என்ற பல பிரிவுகளைக் கடந்து, நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை திருத்தந்தையின் வருகை கொரிய மக்களுக்கு உணர்த்தவேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த ஒலி-ஒளி காட்சி உருவாக்கப்பட்டுள்ளது என்று இதன் இயக்குனர் Won Dong-youn அவர்கள் கூறினார்.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.