2014-07-09 16:11:45

வத்திக்கான் நிதித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களும், புதிய முயற்சிகளும் - கர்தினால் ஜார்ஜ் பெல்


ஜூலை,09,2014. வத்திக்கானின் நிலையான சொத்துக்களைப் பாராமரித்துவரும் APSA என்றழைக்கப்படும் நிதி அமைப்பு, வத்திக்கானின் பொது நிர்வாகத்திலிருந்து, பொருளாதாரத் துறைக்கு மாற்றப்படுகிறது என்ற ஆணையை, 'Motu Proprio' என்றழைக்கப்படும் தன் தனிப்பட்ட ஆணையாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்புதனன்று வெளியிட்டார்.
வத்திக்கான் நிதித் துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களையும், புதிய முயற்சிகளையும் குறித்து, திருப்பீட நிதித் துறையின் தலைவர் கர்தினால் ஜார்ஜ் பெல் அவர்கள், இப்புதனன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, திருத்தந்தையின் இப்புதிய ஆணையைப் பற்றி குறிப்பிட்டார்.
ஒன்பது கர்தினால்களின் ஆலோசனைக் குழு, திருத்தந்தையுடன் அண்மையில் மேற்கொண்ட சந்திப்பின்போது, இந்த மாற்றங்களும், புதிய முயற்சிகளும் விவாதிக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதலைப் பெற்றுள்ளன என்று கர்தினால் பெல் அவர்கள் தெரிவித்தார்.
APSA என்றழைக்கப்படும் நிதி அமைப்பு, ஓய்வூதியம், வத்திக்கான் ஊடகத்துறை, IOR எனப்படும் சமயப் பணிகள் துறை ஆகிய நான்கு துறைகளில் மாற்றங்கள் உருவாகும் என்பதை கர்தினால் பெல் அவர்கள் விளக்கிக் கூறினார்.
இந்த மாற்றங்களை உருவாக்க, பல நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிபுணர்கள் இவ்வமைப்புக்களில் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கர்தினால் பெல் எடுத்துரைத்தார்.
IOR எனப்படும் சமயப் பணிகள் துறையின் புதியத் தலைவராக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 51 வயது நிரம்பிய பொருளாதார நிபுணர் Jean-Baptiste de Franssu அவர்கள் இப்புதன் முதல் பொறுப்பேற்கிறார் என்பதையும் கர்தினால் பெல் அவர்கள் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.