2014-07-09 16:23:29

ஜூலை 13, கடல் ஞாயிறு கடைபிடிக்கப்படுவதையொட்டி திருப்பீட அவையின் செய்தி


ஜூலை,09,2014. புதிய நாடுகளைக் காணும் ஆவல் கொண்டோரும், நாடுகளைக் கைப்பற்ற படையெடுத்தோரும் கடலில் சந்தித்தனர் என்றாலும், அதே கடல் வழியே, வர்த்தகமும், கலாச்சாரப் பரிமாற்றங்களும் நடைபெற்றுள்ளன என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூலை 13, வருகிற ஞாயிறன்று, கடல் ஞாயிறு கடைபிடிக்கப்படுவதையொட்டி, நாடுவிட்டு நாடுசெல்வோர் மற்றும் பயணிகள் நலனுக்கென உருவாக்கப்பட்டுள்ள திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் அந்தோனியோ மரிய வேலியோ அவர்கள் வெளியிட்டுள்ள ஓரு செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கடல்வழி வர்த்தகங்களில் பல்லாயிரம் மக்கள் ஈடுபட்டிருந்தாலும், அவர்களின் பணிகள் நேரடியாக நம் கண்களில் படுவதில்லை என்பதால், இந்த ஞாயிறன்று அவர்களை சிறப்பாக நினைவுகூர்வது நமது கடமை என்று கர்தினால் வேலியோ அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் குடும்பங்களிலிருந்தும் நண்பர்களிடமிருந்தும் பிரிந்து, பல நாட்கள் கடலில் பயணம் செய்யும் ஊழியர்கள், தனிமையை உணரும் தருணங்கள் அதிகம் என்று கூறிய கர்தினால் வேலியோ அவர்கள், கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேலாக கத்தோலிக்கத் திருஅவை இப்பணியாளர்களுடன் பயணம் செய்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தார்.
கடலின் விண்மீன் என்றழைக்கப்படும் மரியன்னை, கடலுடன் தொடர்புடைய அனைவரையும் தன் அருள் காவலில் வைத்திருக்கவேண்டும் என்ற வேண்டுதலுடன், கர்தினால் வேலியோ அவர்கள் தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.