2014-07-09 14:52:13

ஜூலை 10,2014. புனிதரும் மனிதரே........ 18 வயது மறைசாட்சி


பிலிப்பீன்ஸ் நாட்டின் செபு தீவில் 1654ல் பிறந்தார் பேத்ரோ கலூங்சோத். கலூங்சோத், அருட்பணி தியோகோவுக்குத் துணையாளராக ஒரு வேதியராக பணியாற்றினார்.
1668ல் மறைப்பணி ஆற்றுவதற்காக குவாம் தீவுக்குச் சென்றபோது அருட்பணி தியோகோ தம்மோடு துணையாளராக கலூங்சோதை கூடவே அழைத்துச் சென்றார். இஸ்பானிய மறைப்பணியாளர் பலரும் அங்கு உழைத்தனர். அவ்வமயம் குவாம் தீவு செபு மறைமாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கலூங்சோத்தின் முயற்சியால் பலர் அத்தீவில் மனம் மாறினார்கள் என்பர்.
மறைப்பணியாளர்களின் செயல்பாட்டை அங்கு சிலர் எதிர்த்து வந்தனர். 1672, ஏப்ரல் 2ம் தேதி ஒரு குழந்தைக்குத் திருமுழுக்கு வழங்கச் சென்றபோது எதிரிகள் ஒன்றுசேர்ந்து, அருட்பணி தியோகோவையும் அவருடைய உதவியாளர் 18 வயதான பேத்ரோ கலூங்சோதையும் ஈட்டிகளால் தாக்கினர். இளம் வயதினரான பேத்ரோ அந்தத் தாக்குதலிலிருந்து எளிதாகத் தப்பியிருப்பார். ஆனால் அருட்பணி தியோகோவைத் தனியே விட்டுவிட அவருக்கு மனம் இசையவில்லை. அவர்கள் கையில் ஆயுதமும் இல்லை. கலூங்சோதின் நெஞ்சை ஈட்டி ஊடுருவியது. காயமுற்று தரையில் வீழ்ந்தார் கலூங்சோத். கிராவோ என்னும் எதிரி ஓடிச்சென்று கைவாளை உருவி கலூங்சோதின் தலையைக் கொய்தார். தரையில் விழுந்துகிடந்த அருட்பணி தியோகோவால் கலூங்சோதைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் தம் கையில் இருந்த சிலுவையை எடுத்து கலூங்சோதுக்கு ஆசி வழங்கி பாவ மன்னிப்பும் அளித்தார். கலூங்சோதின் உயிர் பிரிந்தது.
இறந்த இருவரின் உடல்களையும் இழுத்து, கடற்கரைக்குக் கொண்டு சென்றனர் எதிரிகள். அவர்களது கால்களில் பெருங்கற்களைக் கட்டி, படகில் ஏற்றிக் கடலினுள் சென்று, அங்கு அவ்வுடல்களை வீசிவிட்டனர். அவ்வுடல்கள் கண்டுபிடிக்கப்படவேயில்லை.
பேத்ரோ கலூங்சோதுக்கு திருத்தந்தை இரண்டாம் ஜான் பால், இரண்டாயிரமாம் ஆண்டு மார்ச் 5ம் தேதி அருளாளர் பட்டம் அளித்தார்.
2012, அக்டோபர் 21ம் நாள், அகில உலக மறைபரப்பு ஞாயிறன்று, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், பிலிப்பீன்சு நாட்டு மறைச்சாட்சியாளர் பேத்ரோ கலூங்சோதை புனிதராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.