2014-07-09 16:26:36

அருள் பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் இரமதான் மாத இறுதியில் ஒரு கொடையாக மீண்டும் கிடைப்பார் - JRS அமைப்பின் தலைவர்


ஜூலை,09,2014. ஜூன் 2ம் தேதி, ஆப்கானிஸ்தான் நாட்டில், அடையாளம் தெரியாத ஒரு குழுவால் கடத்திச் செல்லப்பட்ட இயேசு சபை அருள் பணியாளர் அலெக்சிஸ் பிரேம் குமார் அவர்கள், இரமதான் மாதத்தின் இறுதியில் Eid al-Fitr எனப்படும் ஒரு கொடையாக மீண்டும் கிடைப்பார் என்ற நம்பிக்கையை, இயேசு சபையின் உயர் அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளார்.
புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டுள்ள, JRS எனப்படும், அகில உலக இயேசு சபை அமைப்பின் தலைவர், அருள் பணியாளர் Peter Balleis அவர்கள் JRS வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார்.
அருள் பணியாளர் பிரேம் அவர்கள் கடத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், கடந்த ஒரு மாதம், இத்துயர நிகழ்வில் தங்கள் செபங்களாலும், மற்றும் ஆலோசனைகளாலும் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறியுள்ள அருள் பணியாளர் Balleis அவர்கள், அருள் பணியாளர் பிரேமின் பாதுகாப்பு கருதி, இயேசு சபையும் வேறு பல அமைப்புக்களும் மேற்கொண்டு வரும் முயற்சிகளை வெளிப்படையாக எடுத்துரைக்க இயலவில்லை என்பதையும் கூறியுள்ளார்.
அருள் பணியாளர் பிரேம் அவர்களின் ஆன்மீக பலத்தையும், அர்ப்பண உணர்வையும் அனைவரும் அறிந்துள்ளோம் எனினும், அவரது உடல் நலம் குறித்து ஆழ்ந்த கவலையும் கொண்டுள்ளோம் என்று JRS தலைவரின் அறிக்கை கூறுகிறது.
அருள் பணியாளர் பிரேம் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் மூடப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் செயல்படத் துவங்கியுள்ளன என்றும் JRS தலைவர், அருள் பணியாளர் Balleis அவர்கள் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : JRS.net








All the contents on this site are copyrighted ©.