2014-07-09 13:46:27

அமைதி ஆர்வலர்கள் : 1936ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Saavedra Lamas


ஜூலை,09,2014. 1936ம் ஆண்டில் நொபெல் அமைதி விருது பெற்ற Carlos Saavedra Lamas அவர்கள், மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு வெளியே, இலத்தீன் அமெரிக்காவிலிருந்து நொபெல் அமைதி விருது பெற்ற முதல் நபராவார். 1878ம் ஆண்டு நவம்பர் ஒன்றாந் தேதி அர்ஜென்டீனா நாட்டு புவனோஸ் அய்ரெஸ் நகரில் தேசப்பற்று மிகுந்த குடும்பத்தில் பிறந்த Saavedra Lamas, Lacordaire கல்லூரியில் சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். இவர் அந்நாட்டு அரசுத்தலைவர் Roque Sáenz Peña அவர்களின் மகளை மணமுடித்தார். 1903ம் ஆண்டில் புவனோஸ் அய்ரெஸ் பல்கலைகழகத்தில் சட்டக்கல்வியில் முனைவர் பட்டப் படிப்பில் இவர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றார். பிரான்சின் பாரிசிலும் படித்த Saavedra Lamas, அர்ஜென்டீனாவின் La Plata தேசிய பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். புவனோஸ் அய்ரெஸ் பல்கலைகழகத்திலும் பணியாற்றி, அங்கு சமூகவியல் பாடப் பிரிவைத் தொடங்கினார். மேலும், அப்பல்கலைகழகத்தில் அரசியல் பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்புச் சட்டக் கல்விப் பேராசிரியாரவும் இருந்தார். இவர் அர்ஜென்டீனா நாட்டுக் கல்வியில் இரு துறைகளில் முக்கியமானவராகவும் திகழ்ந்தார்.
அர்ஜென்டீனா நாட்டு தொழில் சட்டத் துறையில் முக்கியமானவராகத் திகழ்ந்த Saavedra Lamas, அந்நாட்டில் தொழில் சட்டத்தில் பல்வேறு ஒப்பந்தங்களை உருவாக்கினார். தொழில் ஒப்பந்தம் குறித்து உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட கோட்பாடு அவசியம் என்பதை இவர் வலியுறுத்தினார். அதற்காக, 1924ல் அனைத்துலக சமூக ஒப்பந்தங்கள், 1927ல் சமூக மற்றும் தொழில் சட்ட மையம், 1933ல் தேசிய சட்ட விதிமுறை போன்றவற்றை தயாரித்து வெளியிட்டார். அர்ஜென்டீனாவில் பாதிக்கப்பட்டிருந்த தொழிலுக்குச் சாதகமாக நடைமுறை விதிகளையும் எழுதினார். 1919ம் ஆண்டில் அனைத்துலக ILO தொழில் நிறுவனம் உருவாக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்த Saavedra Lamas, ஜெனீவாவில் 1928ம் ஆண்டில் நடந்த ILO நிறுவன கருத்தரங்குக்கு தலைமை தாங்கியதோடு, அக்கருத்தரங்கில் கலந்துகொண்ட அர்ஜென்டீனா பிரதிநிதிகள் குழுவுக்குத் தலைவராகவும் செயல்பட்டார். அனைத்துலக சட்டத்தில் இவருக்கு இருந்த ஆர்வத்தில், புகலிடம், காலனி ஆதிக்கம், குடியேற்றம், நடுநிலை வகிப்பு, அனைத்துலக அமைதி உட்பட பல தலைப்புகளில் மேடைகளில் பேசினார், கட்டுரைகள் எழுதினார் மற்றும் அவை சார்ந்த சட்ட விதிமுறைகளை உருவாக்கினார். இவையனைத்தின் அனுபவங்கள் மற்றும் ஆய்வுகளின் பலனாக, இவர் தனது 70வது வயதில் Vida internacional-அனைத்துலக வாழ்வு என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
Saavedra Lamas அவர்கள் 1906ம் ஆண்டில் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். 1907ம் ஆண்டில் புவனோஸ் அய்ரெஸ் நகரசபையின் பொதுச் செயலரான இவர், அதற்கு அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பணியில், கடல்நீர் உரிமைகள், விவசாயம், கரும்பு உற்பத்தி, அரசு நிதிகள், காலனி ஆதிக்கம், குடியேற்றம் ஆகியவற்றில் சட்டங்கள் அமைக்கப்பட ஊக்குவித்தார். ஆயினும் இவரது ஆர்வமெல்லாம் வெளிநாட்டு விவகாரங்களில் இருந்தது. இத்தாலியோடு அர்ஜென்டீனா நடுநிலை ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு இவர் தலைமை வகித்தார். Saavedra Lamas அவர்களால் தயாரிக்கப்பட்ட போருக்கு எதிரான ஒப்பந்தத்தில் 1933ம் ஆண்டு அக்டோபருக்கும், 1934ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கும் இடையில், அமெரிக்க ஐக்கிய நாடு, இத்தாலி மற்றும் 14 இலத்தீன் அமெரிக்க நாடுகள் கையெழுத்திட்டன..
1915ம் ஆண்டில் அர்ஜென்டீனா நீதித்துறை மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட Saavedra Lamas, கல்வித்துறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார். வளர்ந்துவரும் தொழிற்சாலை நாட்டுக்குத் தேவையான மனித சக்தியை ஊக்குவிக்கும் தொழிற் பயிற்சிக்கல்விக்குப் பாடத்திட்டங்களை உருவாக்கி, கல்வித்துறையின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்தார். 1932ம் ஆண்டில் Agustín P. Justo அர்ஜென்டீனாவின் அதிபரானபோது அவர், Saavedra Lamas அவர்களை வெளியுறவுத் துறை அமைச்சராக நியமித்தார். ஆறு ஆண்டுகள் இப்பதவியில் இருந்தபோது அர்ஜென்டீனாவை அனைத்துலக அளவில் மதிப்புமிக்க நாடாக உயர்த்தினார் Saavedra Lamas. தென் அமெரிக்காவின் ஒவ்வொரு தூதரக விவகாரத்திலும் இவர் வகித்த முக்கியமான பங்கால், 13 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அர்ஜென்டீனா நாடு உலக நாடுகளின் கூட்டமைப்பில் இணைவதற்கு வழி அமைத்தது. இவரது காலத்தில் உலக அளவில் நடந்த எல்லாக் கூட்டங்களிலும் அர்ஜென்டீனா நாடு கலந்து கொண்டது.
1932ம் ஆண்டு முதல் 1935ம் ஆண்டு வரை பராகுவாய் நாட்டுக்கும் பொலிவியா நாட்டுக்கும் இடையே நடந்த Chaco போர் முடிவுக்கு வருவதற்கு Saavedra Lamas அவர்கள் ஆற்றிய பணி உள்ளூர்ப் பகுதிகளில் மட்டுமல்லாமல், அனைத்துலக அளவிலும் சிறப்பிடம் பெற்றது. இவர் வெளியுறவு அமைச்சர் பணியை ஏற்றவுடனேயே இந்த இரு நாடுகளின் விவகாரத்தைத் தீர்த்து வைப்பதற்கு தூதரக வழியில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினார். அமெரிக்க நாடுகளின் வரைபடத்தில் வலுக்கட்டாயமாய் மாற்றங்கள் கொண்டுவருவதை அங்கீகரிப்பதைப் புறக்கணிக்கும் அறிக்கை 1932ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதியன்று வாஷிங்டனில் வெளியாவதற்கு இவரே காரணமானார். அடுத்து, போரைத் தவிர்ப்பது மற்றும் ஒப்புரவு உடன்படிக்கை ஒன்றையும் இவர் உருவாக்கினார். 1933ம் ஆண்டு அக்டோபரில் ஆறு தென் அமெரிக்க நாடுகள் இதில் கையெழுத்திட்டன. பின்னர், இரண்டு மாதங்கள் கழித்து Montevideoவில் நடந்த 7வது அமெரிக்க நாடுகளின் கருத்தரங்கில் அனைத்து அமெரிக்க நாடுகளும் இதில் கையெழுத்திட்டன. 1935ம் ஆண்டில் ஆறு அமெரிக்க நடுநிலை நாடுகளை, இடைநிலை வகிக்க வைத்து அவற்றின் உதவியால் பராகுவாய் நாட்டுக்கும் பொலிவியா நாட்டுக்கும் இடையே நடந்த Chaco போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் Saavedra Lamas. அதேநேரம், இவர், 1934ம் ஆண்டில் தென் அமெரிக்காவின் போருக்கு எதிரான உடன்படிக்கை ஒன்றை உலக நாடுகளின் கூட்டமைப்பில் சமர்ப்பித்தார். அங்கு அந்த உடன்படிக்கையில் ஏழு நாடுகள் கையெழுத்திட்டன. இவரின் இந்த அனைத்து முயற்சிகளையும் ஒருமித்துப் பாராட்டிய உலக நாடுகளின் கூட்டமைப்பு, Saavedra Lamas அவர்களை 1936ம் ஆண்டில் அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. அதே ஆண்டில் நொபெல் அமைதி விருதுக் கழகமும் இவருக்கு நொபெல் அமைதி விருதை அறிவித்து பெருமைப்படுத்தியது.
1938ம் ஆண்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற Saavedra Lamas, அதன் பின்னர் கல்விப்பணி வாழ்வுக்குத் திரும்பினார். புவனோஸ் அய்ரெஸ் பல்கலைகழகத்தின் அதிபராக 1941ம் ஆண்டு முதல் 1943ம் ஆண்டுவரை பணிபுரிந்தார். பின்னர், மேலும் மூன்று ஆண்டுகள் அங்குப் பேராசிரியராகவும் பணியாற்றியானார். Saavedra Lamas, தனது பணியில் மிகவும் நெறிமுறையுடன் நடந்து கொண்டவர். நொபெல் அமைதி விருதுடன் பிரான்சின் Grand Cross of the Legion of Honor விருது, இன்னும் பத்து நாடுகளின் கவுரவ விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டன. Saavedra Lamas அவர்கள் தனது 80வது வயதில் மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டு 1959ம் ஆண்டு மே 5ம்தேதி காலமானார். இவரது நொபெல் அமைதி விருது தங்கப் பதக்கம் தென் அமெரிக்க அடைமானக் கடை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டு 2014ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏலத்துக்கு விடப்பட்டது.
அமைதி என்னும் துறைமுகத்தை அடைவதற்குமுன் பெரும்புயல்களையும், அலைகளையும் சமாளித்துத்தான் ஆக வேண்டும். கடுமையான சோதனைகளை எதிர்கொள்ளாமல் மனிதர் சிகரத்தை எட்டிப் பிடிக்க முடியாது என்று சொன்னவர் சுவாமி விவேகானந்தர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.