2014-07-08 15:09:16

விவிலியத்
தேடல் மினா நாணய உவமை பகுதி - 6


RealAudioMP3 சென்னையின் புறநகர் பகுதியில், போரூருக்கு அருகே மவுலிவாக்கம் என்ற இடத்தில் அண்மையில் ஏற்பட்ட அடுக்குமாடி கட்டிட விபத்து, நமக்குள் வேதனையையும், கேள்விகளையும் உருவாக்கின. இந்தக் கட்டிட விபத்தில் 61 பேர் உயிரிழந்தனர் என்றும், 27 பேர் மீட்கப்பட்டனர் என்றும் செய்திகள் கூறியுள்ளன. மீட்புப் பணியில் ஈடுபட்டோருக்கு தமிழக அரசு சார்பில், ஜூலை 8ம் தேதி, இச்செவ்வாயன்று, பாராட்டு விழா நடைபெற்றது என்ற செய்தியும், இந்தக் கட்டிட விபத்தைக் குறித்து, தமிழக முதல்வருக்கு முன்னாள் முதல்வர் கேள்விகளை எழுப்பியுள்ளார் என்ற மற்றொரு செய்தியும் வெளியாயின.
விபத்தையும், மனித உயிர்பலிகளையும் மூலதனமாக்கி, அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் விளம்பரங்களும், விவாதங்களும் நமக்குப் பழக்கமாகிப்போன வேதனைதான். ஆனால், எவ்வித விளம்பரமும் தேடாமல், ஊடகங்களின் கவனத்தை ஈர்க்காமல், பல மனிதாபிமானச் செயல்களும் இந்த விபத்து நடந்த இடத்தில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக, தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்ற தீயணைப்புப் படையினரும், பிறரும் அங்கு வந்து சேர்வதற்கு முன், இன்னும் பல நல்ல உள்ளங்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களுக்கு பாராட்டு விழாவோ, விருதுகளோ கிடைக்கப் போவதில்லை. உயிர்காக்கும் ஒப்பற்ற பணியைச் செய்தோம் என்ற மன திருப்தியே இவர்களுக்குக் கிடைக்கும் விருது.
இத்தகையோரை மையப்படுத்திய ஒரு செய்தியை என் நண்பர் அன்டனி ராஜ் ஜோசப் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைத்தார். இச்செய்தி என் உள்ளத்தில் ஆழமான தாக்கங்களை உருவாக்கின. "நாம நினைக்கிறமாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு" என்ற தலைப்பில் வந்திருந்த அந்த மின்னஞ்சல் வரிகளை உங்களுடன் அப்படியே பகிர்ந்துகொள்கிறேன்:

"நாம நினைக்கிறமாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு"
அன்றைய தினம், போரூரில் அடுக்கு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தவுடன், முதல் அரை மணி நேரத்தில் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்ட பலரில் எனது நண்பனும் ஒருவன். இரவெல்லாம் ஓயாத கத்தல், கதறலுக்கு மத்தியில் வெறும் கைகளாலேயே பலரை உயிருடன் மீட்டுள்ளனர் இத்தகைய பல நண்பர்கள்.
அதன்பிறகு, தீயணைப்புப் படையினரும், மற்ற பல துறையினரும் வந்து அந்தப் பொறுப்பினை ஏற்று மீட்புப் பணிகளைத் தொடர்ந்திருக்கிறார்கள். இவன் காலில் கல் விழுந்து அடிபட்டு, மறுநாள் வீட்டுக்கு வந்திருக்கிறான். எனது நண்பன் அங்கு நடந்த சம்பவம் ஒன்றினைச் சொன்னான்.
முதல் மணி நேரத்திலேயே அங்கு நூற்றுக்கும் மேலான பொதுமக்கள் வந்திருந்து மீட்புப் பணிகளில் உதவிடும்போது, யாரோ ஒருவர் நூற்றுக்கணக்கான பிஸ்கெட் பாக்கட்டுகளை வாங்கி வந்து மீட்புப் பணியிலிருந்தவர்களுக்குத் தந்துள்ளார்.
இன்னுமொருவர், ஓடிச்சென்று தெருவில் சென்று கொண்டிருந்த டீ விற்கும் சைக்கிளை அப்படியே அழைத்து வந்துள்ளார். டீ வண்டிக்காரர் அங்கிருந்த எல்லோருக்கும் டீ கொடுத்துள்ளார். நண்பர், தனது பாக்கெட்டிலிருந்து ஐநூறு ரூபாயை எடுத்து டீ வண்டிக்காரருக்கு தர முயல, டீ வண்டிக்காரர் அப்போது சொன்னது, "அய்யே.. இப்போ இதுதான் ரொம்ப முக்கியமா? நா ஓடிப்போய் இன்னொரு கேன் டீ கொண்டுட்டு வரேன். நீ போய், மாட்டிட்டு இருக்கவங்க யாரையாவது தூக்க முடியுமான்னு பாரு.. அத்த வுட்டுட்டு, காசு கொடுக்குது பாரு"..
இதை எனது நண்பன் என்னிடம் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு, “நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்குடா!” என்றான்.

“நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்குடா!” என்று அந்த இளையவரைச் சொல்லவைத்தது, விபத்து நடந்த இடத்தில் காட்டப்பட்ட அடிப்படை மனித உணர்வுகள். மனசாட்சி, மனிதாபிமானம், மென்மையான உள்ளம், பிறருக்கு உதவும் ஆவல் என்ற உயரியப் பண்புகள், மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளக் கொடைகள். இக்கொடைகளைக் குழிதோண்டி புதைத்துவிட்டு, அதற்கு மேல் தங்கள் சுயநலக் கோட்டைகளைக் கட்டியெழுப்ப, மனசாட்சியின்றி, தரக்குறைவான கட்டிடங்களைக் கட்டும் மனிதர்கள் வாழும் அதே உலகில், மனசாட்சியைப் போற்றிப் பாதுகாக்கும் ஆயிரமாயிரம் உள்ளங்களும் வாழ்கின்றன. இறைவன் தங்களுக்கு வழங்கிய அடிப்படை மனிதப் பண்புகளைக் கொண்டு நல்லவை பலவற்றை இவ்வுலகில் இவர்கள் வளர்த்து வருகின்றனர். எனவே, “நாம நினைக்கிற மாதிரி இந்த உலகம் அவ்வளவு மோசமில்லை போலிருக்கு!” என்பதை இச்செய்தி நம் உள்ளத்தில் ஆணிபோல் அறைகிறது.
இதையொத்தக் கருத்துக்களை, நாம் கடந்த சில வாரங்களாக, 'மினா நாணய உவமை' வழியே சிந்தித்து வந்துள்ளோம். தங்களிடம் பொதுவாக வழங்கப்பட்ட பத்து மினா நாணயங்களை ஆளுக்கொன்றாக பிரித்துக்கொண்ட பத்து பணியாளர்கள், தாங்கள் பெற்ற நாணயத்தைக் கொண்டு என்ன செய்தனர் என்ற தேடலில் ஈடுபட்டு வருகிறோம். அவர்களில் மூவர் சமர்ப்பிக்கும் கணக்கில் நமது தேடல் தொடர்கிறது.

சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் செய்தித் தாள்கள் பல குட்டி விளம்பரங்களைத் தாங்கி வரும். வேலைக்கு ஆட்கள் தேவை, மணமகன் அல்லது மணமகள் தேவை, வீட்டு மனை வாங்க, விற்க என்று பல வகையில் இந்த விளம்பரங்கள் இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வெளியான ஒரு குட்டி விளம்பரத்தில் இவ்வரிகள் காணப்பட்டன:
"நீங்கள் தனிமையில் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றாலோ தொலைபேசியில் என்னைக் கூப்பிடுங்கள். நான் ஒரு சக்கர நாற்காலியில் இருக்கிறேன். அதனால், நான் எங்கும் வெளியில் செல்வதில்லை. நாம் தேவைப்பட்ட நேரம் தொலைபேசியில் பேசலாம். கூப்பிடுங்கள்" என்று அந்த விளம்பர வரிகள் இருந்தன. இந்த வரிகளை விளம்பரப்படுத்தியவர் நான்சி என்ற இளவயது பெண். இந்த விளம்பரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. நான்சியுடன் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 30 பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இவர் செய்து வந்த இந்த அற்புத பணியைக் குறித்து கேள்விப்பட்ட இவாஞ்செலிக்கல் சபையின் சிறந்த போதகரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான, Tony Campolo என்பவர் நான்சியைத் தேடிச் சென்றார். அவர் நான்சியிடம், "உங்களைச் சக்கர நாற்காலியில் முடக்கிப்போட்டது எது?" என்று கேட்டார். நான்சி சொன்ன பதில் அவரை அதிர்ச்சியடையச் செய்தது. "நான் தற்கொலை முயற்சி செய்தேன். அதனால் இப்போது சக்கர நாற்காலியில் வாழ்கிறேன்" என்று நான்சி கூறினார். தொடர்ந்து நான்சி தன்னைப்பற்றி கூறினார்:
"என் சிறுவயது முதல் நான் தனிமையில் துன்புற்றேன். எனக்கென்று நண்பர்கள் இல்லை. நான் செய்து வந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன், நான் வாழ்ந்து வந்த அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்தேன்.
என் உயிர் போகவில்லை, ஆனால், அந்த விபத்தால் என் இடுப்புக்குக் கீழ் உணர்விழந்து போனேன். நான் மருத்துவ மனையில் இருந்தபோது, இயேசு எனக்குத் தோன்றி, 'நான்சி, இதுவரை நீ முழு உடலோடும், முடமான மனதோடும் வாழ்ந்து வந்தாய். இனிமேல் நீ முடமான உடலோடு வாழப் போகிறாய். ஆனால், உன் மனம் இனி முழுமையடைந்துள்ளது' என்று சொல்லிச் சென்றதை நான் உணர்ந்தேன்" என்று அவர் கூறினார்.
தன்னைப்போல் தனிமையில் வாடும் பலருக்கு தான் எவ்வகையில் உதவிகள் செய்ய முடியும் என்பதைச் சிந்தித்த நான்சி, இந்த விளம்பரத்தை வெளியிட்டார். இன்றும் அவர் தனிமையில் துன்புறும் பலருக்கு ஒவ்வொரு நாளும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். வழக்கமாக சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் பிறரது உதவிகளைத் தேட வேண்டியிருக்கும். தன்னைக் கவனித்துக்கொள்ள ஆட்கள் தேவை என்று அவர்கள் விளம்பரங்கள் கொடுக்க வாய்ப்புண்டு. ஆனால், நான்சியைப் பொருத்தவரை, உதவிகள் பெறுவதைவிட தருவதையே அவர் தன் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
சக்கர நாற்காலியில் இருந்தபடியே சரித்திரம் படைத்துள்ள, சாதனைகள் புரிந்துள்ள பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு சக்கர நாற்காலி ஒரு சிறையோ, குறையோ அல்ல. மாறாக, மற்றவர் குறை தீர்க்கும் ஒரு கருவியாக அவர்கள் தங்கள் சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்தியுள்ளனர்.

குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள்...கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. நமக்குள்ள குறையைப் பெரிதுபடுத்தி, நம்மிடம் உள்ள மற்ற கொடைகளையும் பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோமா என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது, நாம் கடந்த சில வாரங்களாகச் சிந்தித்து வரும் 'மினா நாணய உவமை'. நமக்குத் தரப்பட்டுள்ள கொடைகள் அனைத்திற்கும் நாம் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் இவ்வுவமை நமக்கு இடித்துரைக்கிறது.
ஒவ்வொரு பொறுப்பும் நமக்குத் தரப்படும்போது, அதன் முடிவில் கணக்கை ஒப்படைக்கவேண்டியிருக்கும். ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி, கணக்கு வழக்குகளை முடித்து ஒப்படைப்பது. கணக்கு-வழக்கு என்பது நாம் பயன்படுத்தும் ஒரு பொதுவான சொற்றொடர். நமது வரவு செலவு கணக்கு சரியாக இருந்தால், அங்கு வழக்கு தேவையில்லை. எப்போது கணக்கு சரிவர அமையாமல் இருக்கிறதோ, அங்கு கணக்கை விட வழக்கு அதிகமாகி விடும். மினா நாணய உவமையில் நாம் சந்திக்கும் மூன்றாவது பணியாளர் தன் கணக்கை ஒப்படைக்க வந்ததும், அங்கு கணக்கிற்குப் பதிலாக வழக்கே நடைபெறுகிறது.
மத்தேயு நற்செய்தியில் நாம் வாசிக்கும் ‘தாலந்து உவமை’யையும், லூக்கா நற்செய்தியிலும் சொல்லப்பட்டுள்ள ‘மினா நாணய உவமை’யையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'தாலந்துகள்' அல்லது 'திறமைகள்' என்பதை இருவேறு கண்ணோட்டங்களில் நம்மால் பார்க்க முடியும். இவ்விரு கண்ணோட்டங்களில் நமது தேடலை அடுத்தவாரம் தொடர்வோம். அதுவரை, தங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள கொடைகளை, திறமைகளை இவ்வுலகில் பிற மனிதர்களுக்கென பயன்படுத்தும் நல்ல உள்ளங்கள் பற்றிய செய்திகளைக் கேட்டு, மன நிறைவு கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.