2014-07-08 16:05:45

திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணம், வட கொரியாவுடனான பதட்டத்தைக் குறைக்க உதவும், தலத்திருஅவை நம்பிக்கை


ஜூலை,08,2014. வருகிற ஆகஸ்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் கொரிய நாட்டுக்கு மேற்கொள்ளவுள்ள திருப்பயணம், வட கொரியாவுடனான பதட்டநிலைகளைக் குறைக்க உதவும் என்று கத்தோலிக்கர் உறுதியாக நம்புவதாக அந்நாட்டுத் திருஅவை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வருகிற ஆகஸ்ட் 14 முதல் 18 வரை இடம்பெறும் திருத்தந்தையின் தென் கொரியத் திருப்பயணம் புதுமைகளைச் செய்யும் எனவும், இரு கொரிய நாடுகளும் உரையாடலில் ஈடுபட உதவும் எனவும் தென் கொரிய மக்கள் நம்புகின்றனர் என, செயோல் பேராயர் கர்தினால் Andrew Yeom Soo-jung அவர்கள் கூறியுள்ளார்.
புனிதபூமித் தலைவர்களை அழைத்ததுபோன்று, வட கொரிய அரசுத்தலைவர் Kim Jong-un, தென் கொரிய அரசுத்தலைவர் Park Geun-hye ஆகிய இருவரையும் அமைதிக்காகச் செபிப்பதற்கு திருத்தந்தை அழைப்பார் எனவும் மக்கள் நம்புவதாகத் தெரிவித்தார் கர்தினால் Soo-jung.
தென் கொரியாவில் இடம்பெறும் ஆசிய இளையோர் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அந்நாட்டுக்குச் செல்கிறார் திருத்தந்தை.

ஆதாரம் : Zenit








All the contents on this site are copyrighted ©.