2014-07-07 15:11:53

வாரம் ஓர் அலசல் – உயரப் பறக்க வேண்டியவர்கள்


ஜூலை,07,2014. தமிழகத்தில் அண்மையில், ஒருநாள் மாலையில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஓர் ஊரில் பேருந்து சிறிது நேரம் நின்றது. இரண்டு பேர் அமரும் இருக்கையில் மாறி அமர்ந்து, வெளியே நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென, இந்த இருக்கையில் அமரவா? என்று, ஒரு பெண் குரல் கேட்டது. நானும் சிறிது தள்ளி உட்கார்ந்து இடம் கொடுத்தேன். சிறிது நேரத்தில் பேருந்து புறப்பட்டது. அங்கு வந்து அமர்ந்தவர் 24 வயது மதிக்கத்தக்க ஓர் இளம்பெண். அவர் பெயர் சுமதி. பெயரை மாற்றிச் சொல்கிறேன். சிறிது தூரம் சென்ற பின்னர் நானாகப் பேச்சுக்கொடுத்தேன். படிக்கிறீர்களா அல்லது வேலை செய்கிறீர்களா என்று கேட்டேன். அதற்கு சுமதி, நான் ஏரோநாட்டிக்கல் பொறியியல் முடித்து மத்திய அரசில் வேலைக்காக நேர்முகத் தேர்வு எழுதியுள்ளேன். இன்னும் இரு நாள்களில் தேர்வு முடிவு தெரிந்துவிடும். இந்த வேலைதான் எனது வாழ்வை நிர்ணயிக்கப்போவது, செபித்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். அவர் பார்ப்பதற்கு நல்ல துடிப்பான இளம் பெண்ணாக, இலட்சியக்கனவுப் பெண்ணாக எனக்குத் தெரிந்தார். நல்ல படிப்பு, நல்ல எதிர்காலம் உங்களுக்கு உண்டு என வாழ்த்திச் சொன்னபோது சுமதி சொன்னார், நான் ஏரோநாட்டிக்கல் படித்ததற்கே ஒரு பின்னணி உண்டு என தனது வாழ்வைப் பகிர்ந்து கொண்டார்.
எனது பெற்றோர் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். எனக்கு 1 வயது நடந்தபோது எனது தந்தை இறந்துவிட்டார். எனது தந்தை வீட்டார் எனது அம்மாவை ஏமாற்றி சொத்துக்களையெல்லாம் எழுதி வாங்கிக் கொண்டனர். இப்பொழுது நானும் எனது அம்மாவும், எங்கள் பாட்டி மற்றும் மாமா வீட்டில் வாழ்ந்து வருகிறோம். எனக்கு யாருடைய அன்பும் கிடையாது. அம்மாவின் அன்புகூட அவ்வளவாக இல்லை. எனது பாட்டி இந்நாள்வரை என்னைத் தொட்டுத் தூக்கியது கிடையாது. என்னைத் தொடுவது தீட்டு என்று பாட்டி நேரிடையாகவே சொல்லிவிட்டார்கள். வீட்டில் யாருமே என்னிடம் பாசமாக இருக்க மாட்டார்கள். எனக்கு ஏழு இலட்சம் ரூபாய் படிப்புக்கடன் இருக்கிறது. எனக்கு வேலை கிடைத்து அந்தக் கடனைக் கட்டிய பின்னர் எனது வாழ்வுக்குப் பணம் சேர்க்க வேண்டும். நான் சிறுபிள்ளையாக இருந்தபோது ஒருநாள் எனது பாட்டியும், மாமா குடும்பத்தினரும் ஒரு மினி வேனில் சுற்றுலா செல்லப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் வேனில் ஏறியபோது நானும் செல்வேன் என அடம் பிடித்தேன். அப்போது எனது பாட்டி, நீ எங்களோடு வரக் கூடாது. நீ தீட்டுப்பட்டவள், உன்னை நாங்கள் தொடக்கூடாது, நீ எங்களோடு ஒட்டக் கூடாது என்று சொல்லி என்னை அவர்களோடு அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர். அப்போது அழுதுகொண்டிருந்த என்னிடம் என் அம்மா, வானத்தைக் காட்டி, சுமதி கண்ணு, நீ உயரப் பறக்க வேண்டியவள், நீ இந்த வேனில் பயணம் செய்ய வேண்டியவள் இல்லை என்று சொன்னார்கள். எனது அம்மா வானத்தைக் காட்டியபோது ஒரு விமானம் மேலே பறந்துகொண்டிருந்தது. அது எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நான் உயரப் பறக்க வேண்டியவள் என்று சொல்லிக்கொண்டு அந்தச் சிறு வயதில் என்னைத் தேற்றிக் கொண்டேன். அன்று ஆழமாகப் பதிந்த அந்த ஆவல்தான் இன்று இவ்வளவு துன்பங்களுக்கு மத்தியில் என்னை Aeronautical படிப்பை முடிக்க வைத்தது.
அந்தச் சிறிது நேரப் பேருந்துப் பயணத்தில் இளம்பெண் சுமதி தனது நெஞ்சில் காயம்பட்டிருந்த பல்வேறு உணர்வுகளைப் பகிந்துகொண்டார். 24 வயதுக்குள் இத்தனை துன்பங்களா என்று மனது கனத்தாலும், சுமதியின் துடிப்பையும் துணிச்சலையும் பார்த்து இந்தப் பெண் நல்ல ஒரு தமிழ்ப் பெண்ணாக, மனிதம் நிறைந்த இலட்சியப் பெண்ணாக சிறகுவிரிப்பார் என்ற உறுதியான எண்ணமும் தோன்றியது. வாழத் துடிக்கும் அன்பு வத்திக்கான் வானொலி இளையோரே, நீங்கள் உயரப் பறக்க வேண்டியவர்கள். உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதும் உயர்ந்தவைகளாகவே அமைய வேண்டும். கடந்த சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென் இத்தாலியின் மொலிசே மாநிலத்துக்கு ஒருநாள் திருப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அம்மாநிலத்தின் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இளையோரை Castelpetrosoவில் சந்தித்து உரையாற்றினார். இளையோர் தங்கள் வாழ்வை பெரிய மற்றும் உறுதியான காரியங்களில் அமைப்பதற்கான ஆவலில் வளருமாறு கேட்டுக்கொண்டார். அவர் இளையோரிடம் மேலும் சொன்னார்...
இக்காலச் சமுதாயமும், கலாச்சாரங்களும் இளையோருக்கு ஏற்ற சூழலை முன்வைக்கவில்லை. வாழ்வின் துன்ப சோதனைகளின்போது பிரிந்துவிடாமல் உறுதியாய் நிற்கும் ஆழமான நட்புறவுகள் போன்ற முக்கியமான விழுமியங்களுக்காகவும், பெரிய காரியங்களுக்காகவும் மனித இதயம் எப்பொழுதும் ஏங்குகின்றது. மனித இதயம் அன்பு கூரவும், என்றென்றும் அன்பு கூரப்படவும் விரும்புகின்றது. இக்காலக் கலாச்சாரம் மிகச் சிறந்த மற்றும் உயரிய இலட்சியங்களையும், நம் உண்மையான இறுதி இலக்கையும் ஊக்குவிப்பதில்லை. இளையோரே, பெரிய மற்றும் உறுதியான காரியங்களால் கட்டியெழுப்பும் ஆவல் உங்கள் வாழ்விலிருந்து திருடப்பட்டுவிட உங்களை அனுமதிக்காதீர்கள். சிறிய இலட்சியங்களில் உங்கள் வாழ்வை அமைக்காதீர்கள். உண்மையான மகிழ்ச்சிக்கான வழிகளைத் தேடுங்கள். துணிச்சலுடன் இருங்கள். உங்களையும் கடந்துசென்று இயேசுவோடு உங்கள் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்குத் துணிச்சலைக் கொண்டிருங்கள். இதை நாமாகச் செய்ய முடியாது. உலகின் பெரிய சவால்கள் மற்றும் உலகின் போக்குகளுக்கு மத்தியில் சரியான பாதையை நாமாகக் கண்டுபிடிக்க முடியாது. அப்படிக் கண்டுபிடித்தாலும் அதை விடாஉறுதியுடன் பற்றிக்கொள்ளவும், உயரே ஏறிச்செல்லவும், எதிர்பாராத தடைகளைச் சந்திக்கவும் நம்மிடம் போதுமான சக்தி கிடையாது. எனவே இறைவன் துணையை நாடுங்கள்...
RealAudioMP3 இவ்வாறு மொலிசோ மாநில இளையோரிடம் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வாழ்வுக்குத் தேவையான இன்னும் பல காரியங்களையும் எடுத்துச் சொன்னார். அன்பு நெஞ்சங்களே, திருத்தந்தை கூறியதுபோன்று, நாம் நம் வாழ்வை பெரிய மற்றும் நிலையான காரியங்களில் அமைப்பதற்கு எப்போதும் ஆவல் கொள்ள வேண்டும். நம்மில் வளரும் அந்த ஆவல், இந்த நவீன உலகம் காட்டும் போலித் தோற்றங்களால் திருடப்பட்டுவிடாமல் இருப்பதில் கவனமாய் இருக்க வேண்டும். இன்று இந்தியாவில் பல இளையோர், தங்களுக்கும், தங்களது சமூகத்திற்கும் பெரும் கேட்டினை விளைவிக்கும் சீரழிவுக் கலாச்சாரத்துக்குள் சிக்கிக்கொண்டுள்ளனர். சினிமா, கிரிகெட் நட்சத்திரங்களைத் தங்களது கதாநாயகர்களாகக் கொண்டாடி, சிந்திக்க திராணியற்றவர்களாக, சுயத்தையும் சுயமரியாதையையும், மாண்பையும் இழந்து உயிரற்ற பொருள்கள்போல் மாறிவருகின்றனர். எனவே இளையோரே, சில்லறைத்தனமான எண்ணங்களும், பழக்கவழக்கங்களும் உங்களில் வேரூன்றாதபடி பார்த்துக் கொள்ளுங்கள். நம் எண்ணங்களுக்கு நாம்தான் காவலர்கள். ஜூலை 11, வருகிற வெள்ளிக்கிழமையன்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் உலக மக்கள் தொகை நாளைக் கடைப்பிடிக்கிறது. “உகாண்டா நாட்டுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு இன்றைய இளையோரில் முதலீடு செய்வோம்” என்ற தலைப்பில் இந்த உலக நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒரு நாடு முன்னேறுவதற்கு இளையோர் சக்தியை அந்த நாடு நன்றாகப் பயன்படுத்த வேண்டும். அதேநேரம் இளையோரின் வாழ்வும் உயரிய இலட்சியக் கனவுகளால் நிறைந்திருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் உயரப் பறக்க வேண்டியவர்கள்.
மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் அமெரிக்க கருப்பின மக்களுக்காகப் போராடிக் கொண்டிருந்த சமயம் அது. ஆங்காங்கே நிறவெறி வெள்ளையினத்தவரின் வெறுப்பையும் அவர் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஒருநாள் பொதுக் கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது, செருப்பு ஒன்று அவர்மேல் வந்து விழுந்தது. என்ன நடக்கப் போகிறதோ என, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர் அவர்கள் அந்தச் செருப்பைக் கையிலெடுத்துக் கொண்டு, “யாரோ ஒருவர் அன்பளிப்பாக செருப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்; ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது. இன்னொன்றையும் அனுப்பி வைத்தால் போட்டுக்கொள்ள வசதியாக இருக்கும்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
உயரிய இலட்சியங்களையும், மேலான எண்ணங்களையும் கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் எதிர்ப்படும் வசவுகளையும் தங்கள் வசமாக்கி வாழ்வை வசப்படுத்திக் கொள்கின்றனர். நாம் முதலில் கேட்ட இளம்பெண் சுமதி, 24 வயதுக்குள் எத்தனையோ தீண்டாமை புறக்கணிப்புக்களையும் வசவுகளையும் சந்தித்திருக்கிறார். ஆனால் நீ உயரப் பறக்க வேண்டியவள் என்று, அன்று அம்மா விதைத்த விதை இன்று சுமதியை இலட்சியப் பெண்ணாக மாற்றியுள்ளது. ஒருசமயம் ஒரு சிற்றெரும்பு ஒரு மண்புழுவிடம், மண்ணைத் தின்று வாழ்வது ஒரு பிழைப்பா, ஒரே இடத்தில் எப்படித்தான் இருக்கிறாயோ?, என்னைப் பார் இந்தச் சிறிய உடம்பை வைத்துக்கொண்டு எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறேன்! என்று பெருமையடித்துக் கொண்டது. ஒருநாள் அந்த நிலத்தின் உரிமையாளர் உழுதுகொண்டே வரும்போது மண்புழு கலப்பையில் மாட்டி இரண்டு துண்டானது. இதைப் பார்த்த எறும்புக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. சோம்பேறியே! செத்துத் தொலை! உன்னால் யாருக்கு நன்மை என்று சொன்னது எறும்பு. அப்போது இரண்டு துண்டாய்க் கிடந்த மண்புழு எறும்புவிடம், மண்ணைத் தின்று உரமாக மாறுவதே கடவுள் எனக்குக் கொடுத்த பணி. நீ நினைப்பது போல் கடவுள் என்னைச் சாகச் சொல்லவில்லை. மாறாக, கடவுள் இரண்டு துண்டாகிப்போன என்னை, இரண்டு மண்புழுக்களாக வளரும் வாய்ப்பைத் தந்துள்ளார் என்று சொன்னது. இளையோரே, இலட்சியத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கும்போது இடையில் தடைகள் வருவதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அவற்றுள் தலைகுனிந்து முடங்கிவிடாமல் இலட்சியப் பயணத்தில் முன்னோக்கி நடங்கள். உங்கள் இலட்சியம் என்னவென முதலில் குறித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் உயரப் பறக்க வேண்டியவர்கள்.








All the contents on this site are copyrighted ©.