2014-07-07 16:12:53

பாவத்தினால் நாம் அனுபவிக்கும் துன்பம் நம்மை தூய்மைப்படுத்துகின்றது


ஜூலை,07,2014. வாழ்வைச் சீரமைத்தலும், இறைவனை நோக்கிய மனமாற்றமும் ஒவ்வொரு மனிதருக்கும் தேவையான ஒன்றே என சிறைக்கைதிகளிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தவறு செய்யாதவர்கள் என்று எவரும் இல்லை, ஆனால் இறைவனிடம் மன்னிப்புக்கேட்டு, அதே தவறை மீண்டும் செய்யாவண்ணம் வாழ்வில் திருந்திய மனதுடன் செயல்படுவதே தேவையானது என, தென் இத்தாலிய நகரான Iserniaவில் சிறைக்கைதிகளைச் சந்திக்கச் சென்றபோது உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நான் குற்றமிழைக்கவில்லை, நான் திருத்தியமைக்கப்படத் தேவையில்லை என்று உரைப்பவர் பொய்யர் எனவும் கூறினார்.
தங்கள் வாழ்வை நன்முறையில் சீரமைக்கும் பணி, சிலரால் வீட்டில் செய்யப்படுகிறது, ஒரு சிலரால் பணித்தளங்களில் செய்யப்படுகிறது, உங்களால் சிறைகளில் மேற்கொள்ளப்படுகிறது எனவும் ஆறுதல் வார்த்தைகளை அவர்களுக்கு எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வைச் சீரமைக்கும் பணி நம் அனைவருக்குமே அவசியமான ஒன்று என எடுத்துரைத்தார்.
பாவத்தினால் நாம் துன்பங்களைத் தாங்கும்போது அது நம்மை தூய்மைப்படுத்துகின்றது என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுள் எப்போதும் மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்பதை ஒருநாளும் மறந்துவிடாதீர்கள் என்பதையும் நினைவூட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.