2014-07-05 15:12:36

பொதுக்காலம் 14ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 ஜூலை 4, இவ்வெள்ளியன்று, அமெரிக்க ஐக்கிய நாடு சுதந்திர நாளைக் கொண்டாடியது. தங்கள் நாடுகளில் அடக்குமுறை பிரச்சனைகளைச் சந்தித்த பல்லாயிரம் மக்கள், 18 மற்றும், 19ம் நூற்றாண்டுகளில் சுதந்திரத்தைத் தேடிச்சென்ற ஒரு நாடாக அமெரிக்க ஐக்கிய நாடு விளங்கியது. சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க இம்மக்கள் அமெரிக்கக் கடற்கரையை நெருங்கியபோது, அங்கு நிறுவப்பட்டிருந்த சுதந்திரத் தேவதையின் சிலை அவர்களை வரவேற்றது.
இச்சிலை வைக்கப்பட்டுள்ள மேடையில், கவிதையொன்று பொறிக்கப்பட்டுள்ளது. Emma Lazarus என்ற யூதப் பெண்கவிஞர் இயற்றியுள்ள அக்கவிதையின் ஒரு சில வரிகள் நமது ஞாயிறு சிந்தனையை இன்று ஆரம்பித்து வைக்கின்றன:
"உங்கள் நடுவே களைப்புற்று, வறுமையுற்று,
சுதந்திரத்தைச் சுவாசிக்க ஏங்கும் மக்களை எனக்குக் கொடுங்கள்.
உங்கள் கடற்கரையில் ஒதுங்கும் குப்பைகள் போன்ற
மக்களை எனக்குக் கொடுங்கள்.
வீடற்று, புயல்சூழ்ந்த கடலில் தத்தளிக்கும்
மக்களை என்னிடம் அனுப்புங்கள்..."

சுதந்திரத் தேவதை விடுக்கும் அழைப்பை நம்பி அமெரிக்கக் கரையை அடைந்த மக்களை அந்நாடு வரவேற்ற வரலாற்றை நாம் அறிவோம். இத்தகைய அழைப்பு தற்போது அங்கு கிடையாது. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குள் அவ்வளவு எளிதாக யாரும் நுழைந்துவிட முடியாது என்பது உலகறிந்த உண்மை.
சுதந்திர தேவதையின் மேடையில் பொறிக்கப்பட்டுள்ள இந்த வார்த்தைகள், இன்று நாம் கேட்கும் நற்செய்தியின் எதிரொலியாக அமைந்துள்ளது. அன்றும், இன்றும், என்றும் மாறாமல் ஒலிக்கும் இயேசுவின் இந்த அழைப்பு, பொருளுள்ளதாக விளங்குகிறது:
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (மத்தேயு 11: 28)

காயப்பட்டக் கடவுளை நமக்கு அடையாளம் காட்டும் விழா, இயேசுவின் திரு உடல், திரு இரத்தத் திருவிழா என்று இரு வாரங்களுக்கு முன் நாம் குறிப்பிட்டோம். அவ்விழாவைத் தொடர்ந்து வந்த வெள்ளியன்று, காயப்பட்ட அந்த இறைவன், ஈட்டியால் குத்தப்பட்ட தன் இதயத்தை நமக்கு வெளிப்படுத்திய விழாவாக, இயேசுவின் திரு இதயப் பெருவிழாவையும் நாம் சிறப்பித்தோம். அப்பெருவிழாவின்போது நமக்கு வழங்கப்பட்ட நற்செய்தி, இஞ்ஞாயிறன்று மீண்டும் நமக்கு வழங்கப்பட்டுள்ளது. விவிலியத்தின் ஒரு சில கூற்றுகள், எத்தனை முறை ஒலித்தாலும், அவை பொருளுள்ள வார்த்தைகளாக இருக்கும். இயேசுவின் இதயத்திலிருந்து வரும் பொருள் செரிந்த இவ்வழைப்பு, இத்தனை நூற்றாண்டுகளாக பல கோடி மக்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் வழங்கி வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். (மத்தேயு 11: 28)

கேட்பதற்கு எளிதாக, இதமாக ஒலிக்கும் இவ்வழைப்பை நம்மில் பலர் முழுமையாக நம்பி, ஏற்றுக்கொள்வதில்லை. இயேசு கூறுவது, எதார்த்தமான, நடைமுறை வாழ்வுக்கு ஒத்துவராத வார்த்தைகள் என்றும், இதை ஓரு மென்மையான ஆன்மீக அழைப்பாக மட்டுமே கருதமுடியும் என்றும் நாம் நினைப்பதால், இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம். நாம் வாழ்வில் சந்திக்கும் சுமைகளைச் சமாளிக்க பல அறிவுப்பூர்வமான வழிகளை நாம் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதுவதால், இந்தத் தயக்கம் நமக்குள் உருவாகிறது.
நமது தயக்கத்தைப் புரிந்தவர்போல இயேசு, இந்த அழைப்பை விடுப்பதற்கு முன், ஓர் எச்சரிக்கையையும் விடுக்கிறார். இது இன்றைய நற்செய்தியின் முதல் பகுதியாக ஒலிக்கிறது. இயேசுவின் வார்த்தைகளை ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் மறைத்து, குழந்தைகளுக்கு இறைவன் வெளிப்படுத்துகிறார் என்பதை இயேசு குறிப்பிடுகிறார். வயதில் வளர்ந்துவிட்டதால், இவ்வுலக வழிகளை கற்றுக்கொண்டதால் நாம் இயேசு கூறும் வழிகளிலிருந்து விலகிச் செல்வதை அவர் மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

நமது மனச்சுமைகளை, வாழ்வுச் சுமைகளை இறக்கிவைக்க, அல்லது அவற்றை மறப்பதற்கு உதவியாக இவ்வுலகம் காட்டும் வழிகள் ஏராளம். இவ்வுலகம் காட்டும் வழிகள் சரியானவைதானா என்ற கேள்வி அடிக்கடி நமக்குள் எழுந்தவண்ணம் உள்ளது. பிரச்சனைகளைத் தீர்ப்பதாக நினைத்துக்கொண்டு, இவ்வுலகம் காட்டும் தவறான பல வழிகளை எண்ணிப் பார்க்கும்போது, கதையொன்று நினைவுக்கு வருகிறது. கோழிப்பண்ணை வைத்திருந்த ஒருவர், தன் பண்ணையில் திடீரென 10 கோழிகள் இறந்ததும், பயந்துபோய், அருகிலிருந்த கோழி வளர்ப்புத் துறையைத் தேடிச் சென்றார். தன் கோழிகள் இறந்த விடயத்தை அவர் சொன்னதும், அங்கிருந்த ஓர் அதிகாரி, மீதமுள்ள கோழிகளுக்கு 'ஆஸ்பரின்' மருந்தைக் கொடுக்கச் சொன்னார். கோழி வளர்ப்பவர், அந்த மருந்தைக் கொடுத்த இரண்டு நாட்களில், மீண்டும் 20 கோழிகள் இறந்தன. இம்முறை அவ்வதிகாரி, வேப்பெண்ணெயைக் கொடுப்பது நல்லது என்று சொல்லி அனுப்பினார். அவ்விதமே செயல்பட்ட கோழிப்பண்ணைக்காரர், இம்முறை 30 கோழிகள் இறந்தன என்று முறையிட்டார். இம்முறை, 'பெனிசிலின்' கொடுத்தால் எல்லாம் சரியாகும் என்று சொல்லி அனுப்பினார் அனைத்தும் தெரிந்த அவ்வதிகாரி. 'பெனிசிலின்' கொடுக்கப்பட்ட இரு நாட்களில் பண்ணையில் இருந்த அனைத்து கோழிகளும் இறந்தன. இதைக் கேள்விப்பட்ட அதிகாரி, "சே! என்ன அவமானம்! என்னிடம் இன்னும் பலவகை மருந்துகள் உள்ளனவே! அவற்றையெல்லாம் முயற்சி செய்வதற்கு முன் இப்படி அனைத்து கோழிகளும் அநியாயமாய் இறந்துவிட்டனவே!" என்று வருத்தப்பட்டார்.

வேடிக்கையாக ஒலிக்கும் இந்த உவமை, இவ்வுலகின் போக்கை படம்பிடித்துக் காட்டுகிறது. பிரச்சனைகளைத் இவ்வுலகம் எவ்விதம் தீர்க்கின்றது என்ற பாடத்தையும் சொல்லித்தருகிறது. "பெருஞ்சுமை சுமந்திருப்போரே, வாருங்கள்! இதோ, உங்களுக்காகவே நாங்கள் உருவாக்கியுள்ள விடுமுறைத் திட்டம்" என்றோ, "இந்த மாத்திரையை விழுங்கினால் பத்து நொடியில் பறந்திடும் உங்கள் சுமைகள்" என்றோ கூவிக் கூவி விற்கும் எத்தனை விளம்பரங்களை நாம் பார்த்திருக்கிறோம்!
நாம் சுமக்கும் சுமைகளுக்கு, கடற்கரை விடுமுறைகள், மயக்கவைக்கும் மருந்துகள், மதுபானங்கள், போதைப் பொருள்கள்... தீர்வாக அமையும் என்று இவ்வுலகம் சொல்லித் தருகிறது. இத்தீர்வுகள், நம் சுமைகளை மறக்கவும், மறுக்கவும் நம்மைத் தூண்டும் பொய்யான வழிகள். சுமைகளிலிருந்து தப்பிக்கும் வழிகள்.

இதற்கு நேர்மாறாக, இயேசு கூறுவது, பொய்யான, தவறான வாக்குறுதி அல்ல. சுமைகளுடன் அவரிடம் சென்றால், இளைப்பாறுதல் கிடைக்கும் என்பதே அவர் தரும் வாக்குறுதி. அத்துடன், இன்றைய நற்செய்தியில் அவர் கூறும் மற்றொரு உருவகம் மிக ஆழமான, அர்த்தமுள்ள உருவகம். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். (மத்தேயு 11: 29) என்பது இயேசு விடுக்கும் அடுத்த அழைப்பு.
இரு மாடுகளைக் கொண்டு நிலத்தை உழும்போது, அவ்விரு மாடுகளும் இணைந்து செயல்பட, அவற்றின் கழுத்துப் பகுதியை இணைப்பதகுப் பொருத்தப்படும் கட்டையை நுகம் என்று அழைக்கிறோம். கலிலேயா பகுதியில் நுகம் செய்யும் கலையில் தேர்ச்சி பெற்றவர் இயேசு; எனவே, அவர் அனுபவத்திலிருந்து இந்த வார்த்தைகளைக் கூறுகிறார் என்று புகழ்பெற்ற விவிலிய விரிவுரையாளர், William Barclay அவர்கள் கூறியுள்ளார். Barclay அவர்கள் இந்த வரிகளுக்கு விளக்கம் தரும்போது, நாசரேத்தில் இயேசுவின் தச்சுக்கூடத்தின் மீது விளம்பரப் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தால், அதில், பொறிக்கப்படும் வார்த்தைகள் இவ்விதம் இருந்திருக்கும்... அதாவது, "உங்களுக்குப் பொருத்தமான நுகம் இங்கு செய்து தரப்படும்" என்ற வார்த்தைகளே அங்கு காணப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இயேசு விடுக்கும் இவ்வழைப்பை இரு வழிகளில் சிந்திக்கலாம். அல்லது, ஒன்று, இயேசு தன் தச்சுக்கலைத் திறமையால், நம் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான நுகத்தையே செய்து தருவார். அதாவது, நம்மை மிகவும் அழுத்தி வதைக்காத நுகத்தையே அவர் நம் தோள் மீது சுமத்துவார் என்ற கோணத்தில் சிந்திக்கலாம். அல்லது, இயேசுவிடம் வந்தால், நுகத்தை நாம் தனியே சுமக்கத் தேவையில்லை அவர் ஏற்கனவே அந்த நுகத்தின் மறுபாதியைச் சுமந்தவண்ணம் நிற்கிறார்; தன் நுகத்தில் நம்மையும் இணைவதற்கு அழைக்கிறார் என்ற பொருளை உணர்கிறோம். அவரோடு இணைந்து நாம் சுமப்பதனால், "என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்பதையும் அவர் இன்றைய நற்செய்தியில் தெளிவுபடுத்துகிறார்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள் என்று இயேசு அழைக்கும்போது, என்னிடம் வந்தால், உங்கள் சுமைகளைப் பறந்தோடச் செய்வேன் என்ற பொய்யான விளம்பரத்தை இயேசு தரவில்லை. மாறாக, அவர் சொல்வதெல்லாம் இதுதான்: "சுமையோடு என்னிடம் வாருங்கள். நான் ஒரு சுமைத்தாங்கியாக இருந்து, உங்கள் சுமைகளை ஏற்றுக்கொள்வேன். உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னுடன் இணைந்து நீங்களும் நுகத்தை ஏற்று, உங்கள் பணியைத் தொடருங்கள். நான் உங்களுடன் இருப்பதால், நீங்கள் சுமக்கும் நுகம் அழுத்தாது, சுமையும் எளிதாகும்" என்பதே, சுமைகளைச் சமாளிக்க இயேசு கூறும் தீர்வுகள்.

சுமைகளைச் சுமப்பது ஒவ்வொருவர் வாழ்விலும் தவிர்க்கமுடியாத எதார்த்தம். இருப்பினும், இச்சுமைகளை இனம் காணும் தெளிவு நமக்கு வேண்டும். தேவையான சுமைகளை நாம் சுமப்பதில் தவறில்லை. ஆனால், பெரும்பாலான நேரங்களில், தேவையற்ற சுமைகளை நமக்கு நாமே சுமத்திக்கொண்டு, அவற்றின் பாரத்தால் நொறுங்கிப் போகிறோம். எனவே, தேவையான, தேவையற்ற சுமைகளை இனம் காணும் தெளிவு நமக்குக் கிடைக்கவேண்டும் என்று முதலில் மன்றாடுவோம்.

வாழ்வில் நாம் சுமக்க வேண்டிய, தேவையான சுமைகளை நாம் தனியே சுமப்பதில்லை. இறைவனும் நம்முடன் இணைந்து தோள் கொடுக்கிறார். இந்த உண்மையைப் புரிந்துகொள்ளவும், நம்பி ஏற்றுக்கொள்ளவும் இறைவன் நம்மைப் பக்குவப்படுத்த வேண்டும் என்றும் மன்றாடுவோம். நமது இந்த வேண்டுதலுக்கு புனிதத் திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் பரிந்துரையை நாம் நாடலாம். ஏனெனில் அவர் தன் சுமைகளை எவ்விதம் சுமப்பது என்ற பக்குவத்தைப் பெற்றவர்.
புனிதரான திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், 2ம் வத்திக்கான் பொதுச் சங்கத்தைத் துவக்கியவேளையில், கவலைகள் பலவற்றை அவர் சுமக்க நேரிட்டது. அவ்வேளையில் அவர் ஒவ்வோர் இரவும் உறங்கப் போவதற்குமுன் சிறு செபம் ஒன்றைச் சொன்னார்: "ஆண்டவரே, இயேசுவே, நான் இப்போது உறங்கச் செல்கிறேன். இது உமது திருஅவை. இதனை நீர் பாதுகாத்தருளும்" என்ற வார்த்தைகளுடன் உறங்கச் சென்றதால், தன்னால் நிம்மதியாக உறங்க முடிந்தது என்று அவர் கூறியுள்ளார்.
இதேபோல், 2ம் உலகப் போர் நிகழ்ந்த வேளையில், அமெரிக்க அரசுத் தலைவராக இருந்த Dwight Eisenhower அவர்கள், பிரச்சனைகளின் பாரத்தால் பல நாட்கள் துவண்டார். அந்நாட்களில் உறங்கச் செல்லும் முன் அவர், "இறைவா, என்னால் முடிந்த அளவு நல்ல முறையில் இன்று நான் செயல்பட்டுள்ளேன். நாளை விடியும்வரை, நீர் இனி செயலாற்றும்" என்ற செபத்துடன் உறங்கச் சென்றார்.

பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்று இயேசு விடுக்கும் அழைப்பை முழுமனதுடன் நம்பி, அவரை அணுகி, நம் சுமைகளைச் சிறிது நேரம் இறக்கிவைத்து, இளைப்பாறுதல் தேடப் பழகிக் கொள்வோம். நமது சுமைகளை நீக்குவதற்கு எளிதான, விரைவான, பொய்யான, தவறான வழிகளைச் சொல்லித்தரும் இவ்வுலகப் பாடங்களை மறுப்பதற்குத் தேவையான உள்ளொளியையும், உறுதியையும் இறைவன் நமக்கு வழங்கவேண்டும் என்றும் வேண்டிக்கொள்வோம்.








All the contents on this site are copyrighted ©.