2014-07-05 15:30:26

திருத்தந்தை பிரான்சிஸ் : மனிதத்தையும், குடும்பத்தையும் மையமாகக் கொண்ட சமூக-பொருளாதார அமைப்பை உருவாக்க வலியுறுத்தல்


ஜூலை,05,2014. தற்போதைய சமூக-பொருளாதார அமைப்பு, மனிதத்தையும், குடும்பத்தையும் மையமாகக் கொண்ட ஓர் உண்மைநிலையாக இன்னும் அதிகமாக மாறுவதற்கென, அந்த அமைப்பு திணித்துள்ள கட்டமைப்பைத் தகர்த்து, இறைவனைப் பின்பற்றுவற்கு உதவும் வழிமுறைகளைக் கைக்கொள்ளுமாறு தென் இத்தாலிய மக்களை இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இச்சனிக்கிழமையன்று தென் இத்தாலியின் மொலிசே மாநிலத்துக்கு ஒரு நாள் திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் அம்மாநிலத்தின் உழைக்கும் வர்க்கத்தினரை காம்ப்போபாசோ பல்கலைகழகத்தில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கேட்டுக்கொண்டார்.
ஞாயிறன்று வேலைசெய்யாமல் இருப்பதற்கான விதிமுறைகள் இருந்தால், தாய்மாரும் தந்தையரும் தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க முடியும் எனவும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் விளையாடி நேரம் செலவழிப்பது இக்காலத்தில் குறைந்து வருகின்றது எனவும், அம்மாநிலத்தில் தொழில்கள் சார்ந்த ஒப்பந்தங்கள் ஏற்பட ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
மொலிசே மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மையால் மக்கள் அதிகம் துன்புறுவதைக் குறிப்பிட்ட அதேவேளை, வேலை செய்யும் தாய்மார்களைப் பாராட்டியும் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மொலிசே மாநிலம் வேளாண்மைக்கும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளுக்கும் புகழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.