2014-07-05 15:31:24

கிழக்கு எருசலேமில் போதைப்பொருள் வணிகம் அனுமதிக்கப்படுகின்றது, காரித்தாஸ் இயக்குனர் கவலை


ஜூலை,05,2014. கிழக்கு எருசலேமில் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இது பாலஸ்தீனிய சமுதாயத்தை மிகவும் பாதிக்கின்றது எனவும் கூறினார் எருசலேம் காரித்தாஸ் நிறுவன இயக்குனர் அருள்பணி Raed Abusahliah.
எருசலேம் புனித நகரின் அராபியர்கள் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் அரசியல் முறைப்படி அங்கீகரிக்கப்படுகின்றது என்றுரைத்த அருள்பணி Abusahliah, இதனால் 15 ஆயிரம் பாலஸ்தீனிய இளையோர் போதைப்பொருள்களைப் பயன்படுத்துகின்றனர் மற்றும் ஐந்தாயிரம் இளையோர் அதற்கு அடிமைகளாகியுள்ளனர் என பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அராபியர்கள் வாழும் இப்பகுதியில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், இந்நாள்களில் பாலஸ்தீனிய இளையோருக்கும், இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெறுவதாகவும் கூறினார் அருள்பணி Abusahliah.
ஓர் அராபியச் சிறுவன் கற்களை எறிந்தால் அவன் கைது செய்யப்படுகிறான், ஆனால் அவன் ஹெராயின் போதைப்பொருளை கிலோக்கணக்கில் தெருவில் விற்றால் அவனை யாரும் எதுவும் செய்வதில்லை என்ற கவலையையும் அக்குரு வெளியிட்டார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.