2014-07-05 15:31:07

இளையோர் உயர்ந்த இலட்சியங்களில் தங்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள திருத்தந்தை அழைப்பு


ஜூலை,05,2014. தென் இத்தாலியின் மொலிசே மாநிலத்துக்கான ஒரு நாள் திருப்பயணத்தில், Castelpetrosoவில் அம்மாநில இளையோரை மாலையில் சந்தித்து உரை நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் தங்கள் வாழ்வை பெரிய மற்றும் உறுதியான காரியங்களில் அமைப்பதற்கான ஆவலில் வளருமாறு கேட்டுக்கொண்டார்.
இக்கால சமுதாயமும், கலாச்சாரங்களும் இளையோருக்கு ஏற்ற சூழலை முன்வைக்கவில்லை எனவும், மனித இதயம் எப்பொழுதும் பெரிய காரியங்களுக்காகவும், முக்கியமான விழுமியங்களுக்காகவும், ஆழமான நட்புக்காகவும், ஏங்குகின்றது எனவும் உரைத்தார் திருத்தந்தை.
மனித இதயம் அன்பு கூரவும், அன்பு கூரப்படவும் விரும்புகின்றது, இக்காலக் கலாச்சாரம் நமது சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றது, ஆனால் நமது வாழ்வின் இறுதிக்கதியை இழக்கச் செய்கின்றது என்றும் பல்லாயிரக்கணக்கான இளையோரிடம் கூறிய திருத்தந்தை, தங்கள் வாழ்வை பெரிய மற்றும் உறுதியான காரியங்களில் அமைப்பதற்கு ஏற்படும் ஆவல் திருடப்பட அனுமதிக்க வேண்டாமெனவும் இளையோரிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த முயற்சிக்கு இயேசுவின் துணையை நாடுமாறும், அவர் நம் வலுவின்மையில் சுதந்திரத்தை மதிக்கிறார், மன்னிக்கவும் மன்னிக்கப்படவும் சக்தி கொடுக்கிறார் எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்கால வாழ்வை இயேசுவின் கரங்களில் அர்ப்பணிக்குமாறும் பரிந்துரைத்தார்.
மேலும், இச்சனிக்கிழமை மாலையில் அம்மாநில சிறைக்குச்சென்று கைதிகளையும் சிறை அதிகாரிகளையும் சந்திப்பது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்த ஒருநாள் திருப்பயணத் திட்டங்களில் உள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.