2014-07-04 16:03:02

சி-9 கர்தினால்கள் அவையின் ஐந்தாவது கூட்டம்


ஜூலை,04,2014. திருப்பீடத் தலைமையகத்தைச் சீரமைப்பதற்கு திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவதற்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட சி-8 கர்தினால்கள் அவையின் ஐந்தாவது கூட்டம் இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாய் முதல் நடந்த இக்கூட்டத்தில் திருப்பீடச் செயலர், வத்திக்கான் நாட்டு நிர்வாகி, வத்திக்கான் வங்கித் தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சி-8 என்ற பெயரில் அழைக்கப்பட்ட இக்கர்தினால்கள் அவை இனிமேல் சி-9 என அழைக்கப்படும் என்று பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்த திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி, பொதுநிலையினரும் குடும்பமும் என்ற தலைப்பு இக்கூட்டத்தில் சிறப்பாக கவனம் செலுத்தப்பட்டது எனத் தெரிவித்தார்.
அடுத்த கூட்டங்கள் வருகிற செப்டம்பர் 15 முதல் 17 வரையிலும், டிசம்பர் 9 முதல் 11 வரையிலும், பிப்ரவரி 9 முதல் 11 வரையிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள், 2013ம் ஆண்டு அக்டோபர் 1முதல் 3 வரையிலும், டிசம்பர் 3 முதல் 5 வரையிலும், 2014ம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் 19 வரையிலும், ஏப்ரல் 28 முதல் 30 வரையிலும் நடந்துள்ளன.
சி-9 கர்தினால்கள் அவையில் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியசும் ஒருவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.