2014-07-04 16:03:21

காசநோயை ஒழிப்பதற்கு ஒட்டுமொத்த சமுதாயமும் முயற்சிக்க வேண்டும், திருப்பீட அதிகாரி


ஜூலை,04,2014. காசநோயை ஒழிப்பதற்கு உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றபோதிலும், இந்நோயை முற்றிலும் ஒழிப்பதற்கு மேலும் அதிகமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் மற்றும் அரசு, மருத்துவ உலகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயமும் இதில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
TB எனப்படும் காசநோய் பாதிப்பு குறைவாயுள்ள நாடுகளில் இந்நோயை ஒழிப்பது குறித்து உரோமையில் இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள அனைத்துலக ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய, திருப்பீட நலவாழ்வுத்துறைத் தலைவர் பேராயர் Zygmunt Zimowski அவர்கள், காசநோயை ஒழிப்பதற்கு அரசியலிலும் இன்னும் அதிக ஆர்வம் காட்டப்பட வேண்டுமென கூறினார்.
பணக்கார மற்றும் ஏழை நாடுகளில் வறியவர்களையே காசநோய் அதிகம் பாதிக்கின்றது என்றுரைத்த பேராயர் Zimowski அவர்கள், குறைந்த வருவாயுள்ள ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், 2015ம் ஆண்டுக்குள் இந்நோயை ஒழிப்பதற்கான திட்டத்தை நிறைவேற்றுவது கடினம் எனவும் கூறினார்.
2012ம் ஆண்டில் 8 கோடியே 60 இலட்சம் பேர் காச நோயால் தாக்கப்பட்டிருந்தனர், இவர்களில் 13 இலட்சம் பேர் இறந்தனர் என்றும், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 75 விழுக்காட்டினர் ஆப்ரிக்காவில் உள்ளனர் என்றும் கூறினார் பேராயர் Zimowski.
இச்சனிக்கிழமையன்று நிறைவடையும் இக்கூட்டத்தை உலக நலவாழ்வு நிறுவனமும் (WHO), ஐரோப்பிய சுவாசக் கழகமும் இணைந்து நடத்துகின்றன.
மேலும், இரஷ்யாவிலும், பெலாருஸ்ஸிலும் காச நோய் அச்சுறுத்தும் விதத்தில் பரவியுள்ளதாக WHO நிறுவனம் கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.