2014-07-03 17:09:16

முதல் உலகப் போரின் மையமாக அமைந்த Verdunஐச் சேர்ந்த 200 திருப்பயணிகள் லூர்து அன்னை திருத்தலத்திற்கு திருப்பயணம்


ஜூலை,02,2014. நான்கு ஆண்டுகள் நீடித்த முதல் உலகப் போரின் முதல் நூற்றாண்டு நினைவை, ஐரோப்பாவின் பல நாடுகளும், உலக நாடுகளும் கடைப்பிடித்து வரும் இவ்வேளையில், முதல் உலகப் போரின் மையமாக அமைந்த Verdun என்ற மறைமாவட்டத்தைச் சேர்ந்த 200 திருப்பயணிகள் இம்மாதம் பிரான்ஸ் நாட்டில் உள்ள புகழ்பெற்ற லூர்து அன்னை திருத்தலம் செல்லவுள்ளனர்.
1914ம் ஆண்டு முதல், 1918ம் ஆண்டு முடிய நடைபெற்ற முதல் உலகப் போரின்போது, 1916ம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டில், ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே நிகழ்ந்த 300 நாள் போரின் களமாக அமைந்த Verdun என்ற இடத்திலிருந்து லூர்து அன்னை திருத்தலத்திற்கு ஜூலை மாதம் 22 முதல் 26 முடிய இத்திருப்பயணம் மேற்கொள்ளப்படும் என்று திருத்தல அறிக்கை ஒன்று கூறுகிறது.
1916ம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரின் முதல் நூற்றாண்டு நினைவை Verdun மறைமாவட்டம் 2016ம் ஆண்டு நினைவுகூரும்போது, எங்களை நாடி வரும் மக்களை வரவேற்கும் முதல் கட்டமாக நாங்கள் இந்தத் திருப்பயணத்தை மேற்கொள்கிறோம் என்று Verdun ஆயர், François Maupu அவர்கள் கூறினார்.
ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த திருப்பயணத்தின் வழியாக, நாங்கள் அனைவருமே அமைதியின் தூதர்களாக வாழும் வரத்தை அன்னை மரியாவிடம் வேண்டிச் செல்கிறோம் என்று ஆயர் François அவர்கள் மேலும் கூறினார்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.