2014-07-03 17:07:22

நீதியும் அமைதியும் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க, மத நம்பிக்கையுள்ள அனைவருமே முயலவேண்டும் - கர்தினால் Tauran


ஜூலை,02,2014. அனைத்து மதங்களுக்கும் மையமாக அமைந்திருக்கும் உண்மை, அன்பு, கருணை ஆகிய விழுமியங்கள் நம் அனைவரையும் அமைதியை ஏற்படுத்துபவர்களாக மாற்றும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்து மறையின் விளக்கங்களைத் தரும் பேச்சாளர் மொராரி பாப்பு அவர்களையும், அவருடன் சென்ற ஒரு குழுவையும் ஜூலை 2, இப்புதனன்று, வத்திக்கானில் சந்தித்த பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் Jean Louis Tauran அவர்கள் இவ்வாறு கூறினார்.
உள்ளார்ந்த ஆன்மீகம், மற்றவர்களை போட்டியாகக் கருதாமல், உடன்பிறந்தோர் என்ற உணர்வுடன் மதிப்புடன் நடத்துதல் ஆகிய பண்புகளே உண்மையான உரையாடலை வளர்க்கும் வழிகள் என்று கர்தினால் Tauran அவர்கள் எடுத்துரைத்தார்.
நீதியும் அமைதியும் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்க, மத நம்பிக்கையுள்ள அனைவருமே முயலவேண்டும் என்ற வேண்டுகோளையும் கர்தினால் Tauran அவர்கள் இச்சந்திப்பின்போது முன்வைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.