2014-07-03 17:06:05

நன்மை, தீமை எதைப்பற்றியும் அக்கறை இல்லாமல் இருப்பது, அமைதியை குலைக்கும் நிலை - கர்தினால் Tauran


ஜூலை,02,2014. மோதல்கள் அற்ற நிலை, உண்மையான அமைதி அல்ல, மாறாக, அனைத்து வன்முறைகளையும் களையும் வகையில் உருவாகும் நல்ல அரசே அமைதியை உறுதி செய்யும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
போர்ச் சூழலால் துன்புற்றுவரும் சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் அமைதி நிலவவேண்டி, ஜூலை 2, இப்புதன் மாலை, உரோம் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு செப வழிபாட்டில் உரையாற்றிய பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean Louis Tauran அவர்கள் இவ்வாறு கூறினார்.
மற்றவர் மீது அக்கறையின்மை, சந்தேகம் மற்றும் பொறாமை, அபகரிக்கவேண்டும் என்ற ஆவல் ஆகிய மூன்று எண்ணங்களால் நம் மனதில் போர்களை வளர்க்கும் ஆசை உருவாகிறது என்று கர்தினால் Tauran அவர்கள் எடுத்துரைத்தார்.
நன்மை, தீமை எதைப்பற்றியும் அக்கறை இல்லாமல் இருப்பது, நான், எனது என்பதில் மட்டுமே அக்கறை கொண்டிருப்பது, ஒப்புரவு, மன்னிப்பு ஆகியவற்றை நிலைநிறுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது போன்ற நிலைகளே அமைதியை குலைக்கும் நிலைகள் என்று கர்தினால் Tauran அவர்கள் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.