2014-07-03 16:52:33

ஜூலை 04,2014 புனிதரும் மனிதரே : தனது நல்வாழ்வால் கணவரை மாற்றியவர்(St. Elizabeth of Portugal)


போர்த்துக்கல் நாட்டு அரசர் டென்னிஸ் திறமையான ஆட்சியாளராக இருந்தபோதிலும், தனது மனைவி அரசி எலிசபெத்தின் செபம் மற்றும் புண்ணிய வாழ்வைப் பின்செல்லாமல் பெரும் பாவங்களைச் செய்து மக்களுக்குத் துர்மாதிரிகையாய் இருந்தார். முதலில் மனைவியை மிக அன்பாக நடத்திய அரசர் பின்னர் மிகவும் கொடுமைப்படுத்தினார். ஒருமுறை தனது மனைவி மற்றும் மனைவியின் ஆண் பணியாளர்களில் ஒருவர் பற்றி மற்றோர் ஆண் பணியாளர் சொன்ன பொய்யை நம்பிய அரசர் டென்னிஸ் கடுங்கோபங்கொண்டார். சுண்ணாம்புக் காளவாய் பொறுப்பாளரிடம், அவ்விடத்துக்கு முதலில் வரும் பணியாளரை அதில் போடும்படி உத்தரவிட்டிருந்தார் அரசர். இக்குற்றத்தைச் செய்தவராக அரசர் நம்பிய முதல் பணியாளர் வழக்கமாக காலையில் அவ்விடம் செல்வது வழக்கம். அதன்படி அன்று அந்த குற்றமற்ற நல்ல பணியாளர், தனக்கு மரணம் காத்திருக்கிறது என்று தெரியாமல் முதலில் அவ்விடத்துக்குச் சென்றார். ஆனால் அவர் தினமும் திருப்பலிக்குச் செல்லும் பழக்கமுடையவர் என்பதால், செல்லும் வழியில் திருப்பலிக்குச் சென்றார். அன்று அவர் இரண்டாவது திருப்பலிக்கும் இருந்துவிட்டார். இதற்கிடையில், அந்த முதல் பணியாள் கொல்லப்பட்டுவிட்டாரா என்பதை அறிந்துவர, தன்னிடம் கோள்மூட்டிய கெட்ட பணியாளரை அங்கு அனுப்பினார் அரசர். எனவே அந்த கெட்ட பணியாளரே அந்தச் சுண்ணாம்புக் காளவாயில் போடப்பட்டார். இதையறிந்த அரசர், இறைவன் நல்லவர்களைக் காப்பாற்றுகிறார், பொய் சொன்னவர்களைத் தண்டிக்கிறார் என்பதை உணர்ந்து தனது வாழ்வை மாற்றினார். அரசி எலிசபெத் குற்றமற்றவர் என அறிந்து அனைத்து மக்கள் முன்பாக மன்னிப்புக் கேட்டார். பின்னர் அரசியிடம் மிகுந்த மதிப்புடன் நடந்துகொண்டார். அரசர் நோயாய் இருந்த காலங்களில் அவர் அருகிலேயே இருந்து பணிவிடை செய்தார் அரசி எலிசபெத். 12 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்ட இஸ்பானிய இளவரசியாகிய எலிசபெத், நாற்பது ஆண்டுகள் இல்லற வாழ்வை வாழ்ந்தார். கணவர் இறந்த பின்னர் மேலும் 11 ஆண்டுகள் பிறரன்பிலும் செபத்திலும் வாழ்ந்தார். ஏழைகளிடம் மிகுந்த கனிவுடன் நடந்துகொண்டார். அரசி எலிசபெத் மிக அழகானவர், மிக அன்பானவர். பக்தியுள்ளவர், தினமும் திருப்பலிக்குச் செல்வார். தனது குடும்ப உறுப்பினர்களிடையே, நாடுகளுக்கிடையே சண்டை நடக்காமல் சமாதானம் நிலைக்க உதவினார்.
1323ம் ஆண்டில் போர்த்துக்கல் நாட்டு அரசர் டென்னிசுக்கு எதிராக அவரது மகன் அல்போன்சோ கிளர்ந்தெழுந்தார். இவ்விருவருக்கு ஆதரவான படைகள் ஒருவர் ஒருவருக்கு எதிராகப் போரிடத் தயாரானாரகள். நிலைமை விபரீதமாகச் செல்வதை அறிந்த அரசி எலிசபெத், இவ்விருவருக்கும் இடையே சமாதானம் பேசி நடக்கவிருந்த போரை நிறுத்தினார்.
அரசி எலிசபெத் 1336ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி காலமானார். கோயம்ப்ராவில் அடக்கம் செய்யப்பட்ட அரசி எலிசபெத்திடம் செபித்த பலருக்கு பல புதுமைகள் நடந்தன. போர்த்துக்கல் நாட்டு அரசி புனித எலிசபெத்தின் விழா ஜூலை 04.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.