2014-07-03 17:09:51

4,600 சிறைக்கைதிகளை பட்டதாரிகளாக்கியுள்ள தமிழ்த் துறை பேராசிரியர் நோவா


ஜூலை,02,2014. தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் நோவா அவர்கள், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் முக்கிய சிறைகளில் உள்ள ஆயுள் கைதிகளை நல் வழிப்படுத்தும் பணியை செய்து கொண்டிருக்கிறார்.
மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவராக இருந்த நோவா அவர்கள், 1979ம் ஆண்டு, தமிழகம் முழுவதும் கல்லூரிப் பேராசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் கைதாகி, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரது 15 நாள் சிறை அனுபவம்தான் ஆயிரக்கணக்கான ஆயுள் கைதிகளை புது மனிதர்களாக்கிக் கொண்டிருக்கிறது.
சிறைக்குள்ளே தாதாக்கள் மேடைகளில் அமர்ந்து, எப்படி கொள்ளையடிக்கலாம், கொலை செய்யலாம், எப்படி கள்ள நோட்டு அடிக்கலாம் என ஜூனியர் கைதிகளுக்கு வகுப்புகள் நடத்துவதைக் தான் கண்ட காட்சியே இம்முயற்சிக்கு அடித்தளமாக அமைந்தது என்று கூறுகிறார் நோவா.
ஒரு மத்திய சிறைக்கு 5 பேராசிரியர்கள் வீதம் தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் ஆயுள் கைதிகளுக்கு கல்வி போதிக்கும் பணியில் இறங்கி, திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பலரை படிக்க வைத்திருப்பதாக பேராசிரியர் நோவா அவர்கள் கூறினார்.
இதுவரை, கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 4,600 கைதிகளை பட்டதாரிகளாக்கி இருக்கிறோம் என்று கூறும் பேராசிரியர் நோவா அவர்கள், தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், அந்தமான், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் எங்களது சேவை தொடர்கிறது என்று கூறினார்.

ஆதாரம் : தி இந்து








All the contents on this site are copyrighted ©.