2014-07-02 16:05:25

ஈராக் நாட்டின் நிலையற்றச் சூழல் அனைத்து ஆயர்களையும் அமைதியிழக்கச் செய்துள்ளது - முதுபெரும் தந்தை சாக்கோ


ஜூலை,02,2014 ஈராக் நாட்டில் நிலவிவரும் குழப்பமான, நிலையற்றச் சூழல் அனைத்து ஆயர்களையும் அமைதியிழக்கச் செய்துள்ளது என்று கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, முதலாம் லூயிஸ் ரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.
ஈராக் நாட்டின் அனைத்து ஆயர்களும், Ankawa என்ற நகரில் கூடி, ஈராக்கில் நிலவிவரும் நிலையற்றச் சூழல் குறித்து விவாதித்தனர். இக்கூட்டத்திற்குப் பிறகு, Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பிற்கு பேட்டியளித்த முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், ஈராக் நாடு இனிவரும் காலங்களில் ஒரே நாடாக விளங்குமா என்பது குறித்து தன் ஐயங்களை வெளியிட்டார்.
ஈராக் நாட்டின் இஸ்லாமியர்களிடையே விளங்கும் மூன்று பிரிவுகள் மோதலில் ஈடுபட்டிருப்பதால், இந்த மூன்று பிரிவுகளின் அடிப்படையில் நாடு மூன்று பிரிவுகளாக இயங்கும் ஆபத்து உள்ளதென்றும், அத்தகையச் சூழலில், மிக அதிக துன்பங்களுக்கு உள்ளாகப் போவது கிறிஸ்தவர்களே என்றும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், தன் கவலையை வெளியிட்டார்.
2003ம் ஆண்டு அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்ததன் தவறான விளைவை தாங்கள் இன்றும் அனுபவித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், மீண்டும் ஒரு முறை அமெரிக்கா ஈராக் நாட்டில் நுழைவது பெரும் தவறாக அமையும் என்றும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி / Zenit








All the contents on this site are copyrighted ©.