2014-07-01 15:53:52

விவிலியத்
தேடல் மினா நாணய உவமை பகுதி - 5


RealAudioMP3 'மினா நாணய உவமை'யில், கணக்கு கொடுக்க வரும் மூன்று பணியாளர்கள் வழியே இயேசு நமக்குச் சொல்லித் தரும் பாடங்களைப் பயில்வோம் என்று சென்ற விவிலியத் தேடலை நிறைவு செய்தோம். பத்து பணியாளர்களுக்குப் பொதுவில் வழங்கப்பட்ட பத்து மினா நாணயங்களை அப்பணியாளர்கள், ஆளுக்கொன்று என்று பிரித்துக்கொண்ட சுயநலத்தைக் குறித்து சென்ற இரு வாரங்கள் சிந்தித்தோம். அந்த பத்து பேரில் மூவரிடம் கணக்கு கேட்கப்படுகிறது. ஏன் மூவர் மட்டும் அழைக்கப்படுகின்றனர் என்று சிந்திக்கும்போது, இவர்கள் மூவரையும் நமது பிரதிநிதிகளாக இயேசு சித்திரிப்பதுபோல் தோன்றுகிறது.
ஒரு பொறுப்பு நமக்கு வழங்கப்படும்போது, முழுமையாக அதில் ஈடுபட்டு, பெரும் சாதனைகள் செய்து, நிறைவு பெறுவது ஒரு வகையினர். கொடுக்கப்பட்ட பொறுப்பை ஓரளவு நிறைவுடன் செய்து முடிப்பவர் மற்றொரு வகையினர். கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றாமல், அச்சத்தில் புதைந்துபோவது வேறொரு வகையினர். இந்த மூன்று வகையினரின் பிரதிநிதிகளாக இந்த உவமையில் இயேசு நம்மிடம் சுட்டிக்காட்டும் இவர்கள் வழியே அவர் சொல்லித் தரும் பாடங்களைப் பயில்வோம்.

முதல் பணியாளர் தான் பெற்றுக்கொண்ட மினாவை, பத்து மடங்காகப் பெருக்கியதைப் பெருமையுடன் எடுத்துரைக்கிறார். அவரைப் பாராட்டும் உயர்குடி மகன், அவரை, பத்து நகரங்களுக்கு அதிகாரியாக நியமிக்கிறார். அந்த உயர் குடிமகன் சொல்வன, மனதுக்கு நிறைவு தரும் சொற்கள்:
லூக்கா 19: 17
அதற்கு அவர் அவரிடம், 'நன்று, நல்ல பணியாளரே, மிகச் சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பத்து நகர்களுக்கு அதிகாரியாய் இரும்' என்றார்.

கிறிஸ்தவ மறைபோதகர்களில் தலை சிறந்த புகழ்பெற்ற அமெரிக்கப் போதகர், பில்லி கிரகாம் (Billy Graham) அவர்கள். 95 வயது நிறைந்த இப்புகழ்பெற்ற பேச்சாளர், தன் 31வது வயதிலிருந்து கிறிஸ்துவையும், விவிலியத்தையும் மேடைகளிலும், ஊடகங்கள் வழியாகவும் பறைசாற்றினார். கடந்த 22 ஆண்டுகளாக பார்க்கின்சன்ஸ் நோயினால் துன்புறும் இவர், தன் 90வது வயது வரை பணிகளைத் தொடர்ந்தார்.
1996ம் ஆண்டு, அமெரிக்கப் பாராளுமன்றத்தின் மிக உயர்ந்த தங்கப்பதக்கம், பில்லி கிரகாம் அவர்களுக்கும், அவரது மனைவியாருக்கும் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் சாதாரண குடிமக்கள் பெறக்கூடிய மிக உயர்ந்த விருது இதுவே. அமெரிக்கக் குடிமக்கள் மட்டுமல்ல, பல்வேறு துறைகளில் நன்மை தரும் மாற்றங்களை உருவாக்கிய உலகக் குடிமக்களுக்கும் இந்த விருது வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, பில்லி கிரகாம் (Billy Graham) அவர்கள் இவ்விருதைப் பெற்றதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 1997ம் ஆண்டு, இவ்விருதை முத்திப்பேறு பெற்ற அன்னைத் தெரசா அவர்களும், அதற்கு அடுத்த ஆண்டு, 1998ல் நெல்சன் மண்டேலா அவர்களும் பெற்றனர். பில்லி கிரகாம் அவர்கள் இவ்விருதைப் பெற்றபின் வழங்கிய பேட்டியில் அவர் கூறியது, இவ்வுவமையுடன் தொடர்புடையது.
"என் மனைவிக்கும், எனக்கும் வழங்கப்பட்டுள்ள இவ்விருது, எங்களைப் பணிவடையச் செய்கிறது. ஆயினும், நான் கிறிஸ்துவுக்கு முன் நிற்கும் அந்த நாளை எதிர் நோக்கி காத்திருக்கிறேன். அந்த நாளன்று, இயேசு கிறிஸ்து என்னிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே' என்று கூறுவதையே நான் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்" என்று தன் பேட்டியில் கூறினார் பில்லி கிரகாம்.
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் இறுதியில், தங்கள் கணக்கு வழக்கை இறைவனிடம் சமர்ப்பிக்கும் வேளையில், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே' என்ற வார்த்தைகளை இறைவனிடமிருந்து பெறுவது ஒன்றே நம் வாழ்வின் நிறைவாக அமையும். மத்தேயு நற்செய்தி, 25ம் பிரிவில் கூறப்பட்டுள்ள 'தாலந்து உவமை'யில், தலைவர் தன் பணியாளரிடம் சொல்லும் வார்த்தைகள், இன்னும் ஆழமான நிறைவைத் தரும் சொற்களாக ஒலிக்கின்றன:
மத்தேயு நற்செய்தி, 25 21
தலைவர் அவரிடம், 'நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார்.
தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமையாக நிறைவேற்றும் பணியாளர்கள் அனைவரும் இறைவனின் மகிழ்ச்சியில் பங்குபெறுவர் என்ற இவ்வார்த்தைகள் நமக்குப் பெரும் நிறைவைத் தருகின்றன. இரண்டாவது பணியாளர், தான் பெற்றுக்கொண்ட மினாவை, 5 மடங்காக பெருக்கியதாகக் கூறுகிறார். உயர் குடிமகன் அவரை, ஐந்து நகர்களுக்கு அதிகாரியாய் நியமிக்கிறார்.

அடுத்து வருவது, நமது உவமையின் நாயகன். தான் பெற்றுக்கொண்ட மினாவைப் பத்திரமாகப் பாதுகாத்து, எவ்வித மாற்றமும் இன்றி தலைவரிடம் தருகிறார். இந்தப் பணியாளருக்கும், தலைவருக்கும் இடையே நிகழும் உரையாடல், நமக்குள் சில சிந்தனைகளை உருவாக்குகின்றது. இதோ அந்த உரையாடல்:
லூக்கா 19: 20-23
வேறொருவர் வந்து, 'ஐயா, இதோ உமது மினா. ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்திருக்கிறேன். ஏனெனில் நீர் கண்டிப்புள்ளவர் என்று உமக்கு அஞ்சி இப்படிச் செய்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர்; நீர் விதைக்காததை அறுக்கிறவர்' என்றார். அதற்கு அவர் அவரிடம், 'பொல்லாத பணியாளே, உன் வாய்ச் சொல்லைக் கொண்டே உனக்குத் தீர்ப்பிடுகிறேன். நான் கண்டிப்பானவன்; வைக்காததை எடுக்கிறவன்; விதைக்காததை அறுக்கிறவன் என உனக்குத் தெரியுமல்லவா? அப்படியானால் ஏன் என் பணத்தை வட்டிக் கடையில் கொடுத்து வைக்கவில்லை? நான் வந்து அதை வட்டியோடு சேர்த்துப் பெற்றிருப்பேனே' என்றார்.

"நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்" (லூக்கா 19: 13) என்று தலைவர் தன் பணியாளர்களுக்குத் தெளிவான கட்டளையைக் கொடுத்திருந்தார். இருப்பினும், இந்தப் பணியாளர் தான் பெற்ற மினாவை, ஒரு கைக்குட்டையில் முடிந்து வைத்தார். தான் எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்ததற்கு, தன் தலைவரின் கடுமையான குணமே காரணம் என்று அவர் தலைவரைக் குறை கூறினார்.

முயற்சி ஏதும் எடுக்காததால் தான் பெறாத வெற்றிக்கு, வேறு பல காரணங்கள் சொல்வது நம்மில் பலருக்குக் கைவந்த கலை. பள்ளிக்கு அல்லது பணியிடங்களுக்கு தாமதமாகச் செல்லும்போது, தேர்வில் வெற்றிபெறாமல் போகும்போது நாம் கண்டுபிடிக்கும் காரணங்கள் வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருக்கும். பணிக்கு வர இயலவில்லை என்பதைக் கூற, ஒரு சில பணியாளர்கள் கூறிய காரணங்களை 'The Telegraph' என்ற நாளிதழ் தொகுத்து வழங்கியுள்ளது:
நான் இன்று பணிக்கு வர இயலவில்லை... ஏனெனில்,
... நான் வளர்க்கும் மீன், சுகமில்லாமல் உள்ளது.
... என்னுடைய கால் கட்டைவிரல் குளிக்கும் தொட்டியில் உள்ள ஓட்டையில் மாட்டிக் கொண்டது.
... நேற்று உறங்கச் சென்ற என் மூளை, இன்னும் விழித்தெழவில்லை.
என்பன, இந்நாளிதழ் தொகுத்துக் கூறும் ஒரு சில காரணங்கள்.

அதேபோல், தங்கள் வீட்டு வாடகையைக் கொடுக்க இயலாது என்று கூறிய ஒரு சிலர், அத்துடன் கூறிய காரணங்கள் இதோ:
எங்களால் அடுத்த மாத வாடகையைக் கொடுக்கமுடியாது என்று தெரியும். எனவே, இம்மாத வாடகையையும் கொடுக்க விருப்பமில்லை.
எங்களுடைய மகளின் பிறந்த நாள் விழாவுக்கு அதிக மதுபானங்கள் வாங்கிவிட்டதால், இம்மாத வாடகையைக் கொடுக்க முடியவில்லை.

தாங்கள் செய்யவேண்டிய பணியைச் செய்யத் தவறுபவர்கள் தேடிக் கண்டுபிடிக்கும் காரணங்கள் நமக்கு சிரிப்பையும், வியப்பையும் ஊட்டுகின்றன. அந்தப் பட்டியலில் இணைய வேண்டியது, மூன்றாவது பணியாளர் சொன்ன வார்த்தைகள். தன் பணியை அவர் செய்யத் தவறியதற்கு அவர் கூறும் முக்கியமான காரணம், அச்சம் - தன் தலைவனின் கடுமையான குணத்தின்மீது அவர் கொண்டிருந்த அச்சம். இதை அவர் தன் தலைவரிடம் நேரடியாகவேக் கூறுகிறார். அம்மட்டில், அவரது துணிவைப் பாராட்டவேண்டும்.
தன் தலைவரின் கடுமையான குணத்தை அவரிடமே நேரடியாகக் கூறும் அளவு துணிவு கொண்டவர், அந்த கண்டிப்பான தலைவர் தனக்குக் கொடுத்த பணியைச் செய்வதற்கு அச்சம் கொண்டதாகச் சொல்வது, அப்பணியாளருக்குள் இருந்த முரண்பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வகையில் நம்மைச் சூழும் அச்சங்களைப் பற்றி சிந்திக்க இந்தப் பணியாளர் வழியே நமக்கு அழைப்பு விடுக்கிறார் இயேசு. ஆற்றவேண்டியக் கடமைகளிலிருந்து நம்மைத் தடுப்பதில் அச்சம் பெரும் பங்கு வகிக்கிறது. நம்மைச் செயலிழக்கச் செய்யும் அச்சத்தைக் குறித்து சொல்லப்படும் ஒரு சில அழகிய கருத்துக்கள் இதோ:
"துறைமுகத்தில் தங்கியுள்ள கப்பல் பாதுகாப்பாக இருக்கும், ஆனால், கப்பல் அவ்விதம் தங்குவதற்கு உருவாக்கப்படவில்லையே" என்று சொன்னவர், William G.T. Shedd.
“A ship is safe in harbor, but that's not what ships are for.”
- William G.T. Shedd

"மலராக விரிவது வலிக்கும் என்ற அச்சத்தில், ஒரு மொட்டாக மூடிக் கிடந்தேன். மலராக விரிவதில் உண்டாகும் வலியைவிட, மொட்டாக இறுகிக் கிடப்பதில் உண்டாகும் வலி பெரிது என்பதை, நல்லவேளை, விரைவில் உணர்ந்தேன்" என்று கூறியவர், Anais Nin.
“And the day came when the risk to remain tight in a bud was more painful than the risk it took to blossom”
- Anais Nin
நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை நிறைவேற்ற நம்மிடம் உள்ள திறமைகளைப் பயன்படுத்தாமல், கைக்குட்டையில் முடிந்து வைக்கவோ, பூமியில் புதைத்து வைக்கவோ நமக்குள் தோன்றும் அச்சங்களைக் களைய இறைவன் நமக்கு வழிகாட்ட வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.