2014-07-01 15:51:58

மூன்று இஸ்ரேல் வளர்இளம் பருவத்தினர் கொலைசெய்யப்பட்டது குறித்து திருத்தந்தை ஆழ்ந்த கவலை


ஜூலை,01,2014. கடந்த ஜூனில் கடத்தப்பட்ட மூன்று இஸ்ரேல் வளர்இளம் பருவத்தினரின் உடல்கள் இத்திங்களன்று பாலஸ்தீனிய நகரம் ஒன்றுக்கு வெளியே கண்டெடுக்கப்பட்டது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளார் என, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
அப்பாவி மக்கள் கொலைசெய்யப்படுவது எப்போதும் வெறுக்கத்தக்க மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத குற்றம் எனவும், இது அமைதிக்கான பாதைக்கு முக்கியமான தடையாக உள்ளதாகவும், அமைதிக்காக நாம் அயராது தொடர்ந்து உழைக்க வேண்டும், அதற்காக நாம் செபிக்க வேண்டுமெனவும் அருள்பணி லொம்பார்தி அவர்கள் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
வன்முறை மேலும் அதிக வன்முறையைப் பெற்றெடுத்து, வெறுப்புணர்வை மேலும் மேலும் தூண்டிவிடுவதற்கு உரமளிக்கின்றது என்றுரைக்கும் அவ்வறிக்கை, விவரிக்க முடியாத துன்பங்களை அனுபவிக்கும் கொலைசெய்யப்பட்ட இந்த இளம் வயதினரின் குடும்பத்தினரோடு திருத்தந்தை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டு அவர்களுக்காகச் செபிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
16 வயது Gilad Shaer, Naftali Fraenkel, 19 வயது Eyal Yifrah ஆகிய மூன்று இஸ்ரேல் நாட்டவர்கள் ஜூன் 12ம் தேதியன்று மேற்குக்கரை நகரமாகிய ஹெப்ரோனில் கடத்தப்பட்டனர். இவர்களில் ஒருவர் அமெரிக்க ஐக்கிய நாட்டு குடியுரிமை உள்ளவர்.
இந்தக் கொலைகள் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே புதிய வன்முறைகளைத் தூண்டும் என பன்னாட்டு விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.