2014-07-01 15:49:51

கர்தினால்கள் ஆலோசனை அவையின் ஐந்தாவது கூட்டம் வத்திக்கானில் தொடங்கியுள்ளது


ஜூலை,01,2014. அகிலத் திருஅவையின் நிர்வாகத்தில் திருத்தந்தைக்கு உதவி செய்வதற்கென உருவாக்கப்பட்டுள்ள கர்தினால்கள் ஆலோசனை அவையின் ஐந்தாவது கூட்டம் இச்செவ்வாய் காலை வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் தொடங்கியது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில் உருவாக்கப்பட்டுள்ள இக்கர்தினால்கள் ஆலோசனை அவையின் இக்கூட்டம், உரோமைத் தலைமைப்பீடத்தை, Pastor bonus அப்போஸ்தலிக்க அரசியல் அமைப்பின்படி மறுபரிசீலனை செய்வது குறித்த திட்டம் பற்றியும் ஆராய்ந்து வருகிறது.
ஜூலை 04, வருகிற வெள்ளிக்கிழமைவரை இக்கூட்டம் நடைபெறும் என, திருப்பீடம் அறிவித்துள்ளது.
மேலும், இதற்கு முந்தைய ஆலோசனை கூட்டங்கள், 2013ம் ஆண்டு அக்டோபர் 1முதல் 3 வரையிலும், டிசம்பர் 3 முதல் 5 வரையிலும், 2014ம் ஆண்டு பிப்ரவரி 17 முதல் 19 வரையிலும், ஏப்ரல் 28 முதல் 30 வரையிலும் நடந்துள்ளன.
மேலும், கடவுளின் உண்மையான குழந்தைகளாக வாழ்வதென்பது, நமக்கு அடுத்திருப்பவரை அன்பு செய்வதாகும் மற்றும் தனிமையிலும் துன்பத்திலும் இருப்பவருக்கு மிக அருகில் இருப்பதாகும் என, இச்செவ்வாய் தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.